ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு!

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எதிரக்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட 10 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னை அறிவித்துள்ளது.

அத்தோடு தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினரையும் பாதுகாக்க வேண்டிய எந்தவொரு நோக்கமும் ஜே.வி.பி.க்கு கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி விவாதத்தின்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு அந்த நபர்களுக்கு எதிராக வாக்களித்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த நிலையில் அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினரையும் பாதுகாக்க வேண்டிய நோக்கம் ஜே.வி.பிக்கு கிடையாது என்றும் தமது கட்சி முழு அரசாங்கத்திற்கும் எதிராக ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளது என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது தேர்தலுக்கு வழிவகுக்காது என்றும் ஆனால் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் என்றும் கூறினார்.

மேலும் நாடெங்கிலும் அதிகரித்துவரும் அழுத்தத்தின் காரணமாகவே அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோ அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2 பேர் டெலோ கட்சியை முன்னிலைப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 6083 Mukadu · All rights reserved · designed by Speed IT net