நல்லத்தண்ணி பிரதேசத்தில் டெங்கு பரவும் அபாயம்.
நல்லத்தண்ணி பகுதியில் டெங்கு பரவும் அபாயம் தோன்றியுள்ளமையால் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி காமினி பெரேரா தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாதமலை பருவ காலத்தில் ஹட்டன் நல்லத்தண்ணி வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருந்த பிலாஸ்டிக் மற்றும் பொலுத்தீன் குப்பைகளை சிரமதான முறையில் அகற்றிய போது நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் நுவரெலியா மாவட்ட விஞ்ஞான பிரிவின் உயர் அதிகாரி திருமதி.அசங்க கிலானி இது தொடர்பாக தெரிவிக்கையில்,
நல்லத்தண்ணி பகுதியில் தற்போது டெங்கு பரவியுள்ளது. இதனால் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் சிவனொளிபாதமலை பருவ காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வருகை தந்திருந்தனர் அதில் டெங்கு நோயாளிகளும் வந்திருப்பர்.அவ்வாறு வருகை தந்த நோயாளர்களை தீண்டிய நுளம்பு மூலம் டெங்கு பரவியிருக்ககூடும் என தெரிவித்தார்.
இச்சிரமதானம் மூலம் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மஸ்கெலியா பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளதுடன் மாவட்ட சுகாதார சேவைகள் அதிகாரி சேணக தலகள, மத்திய மாகாண சுகாதார சேவைகள் மற்றும் மலேரியா அழிப்பு அதிகாரி பைசால் மற்றும் மஸ்கெலியா பிரதேச சுகாதார அதிகாரிகள் ,லிங் நெச்சுரல் ஸ்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி பிரிவினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் இச்சிரமதானத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.