பிராந்தியப் பாதுகாப்புக்கு ஈரானே அச்சுறுத்தலாக உள்ளது!

பிராந்தியப் பாதுகாப்புக்கு ஈரானே அச்சுறுத்தலாக உள்ளது!

பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரான் இருந்து வருகிறது என சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் அல் சவுத் தெரிவித்துள்ளார்.

இதனால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஈரானை சர்வதேச நாடுகள் கண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த சவுதி அரேபிய அரச தொலைக்காட்சியில் அந்நாட்டு மக்களிடையே உரையாற்றிய மன்னர்,

“சுமார் 50 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஆதரித்துவரும் ஈரான் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

பலநாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை எல்லாம் மீறியவகையில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த துடிக்கும் ஈரான் அரசு கடல் பிராந்தியத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரான் அரசை கண்டித்து அதன் செயல்களை தடுத்து நிறுத்தும் பொறுப்பை சர்வதேச சமுதாயம் ஏற்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பில் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2008ஆம் ஆண்டு நிலைவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் உச்சி மாநாடு சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் இன்று தொடங்கியது.

நாளைவரை நடைபெறும் இந்த மாநாட்டில் தங்களுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் விவாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net