அடுத்தடுத்து என்ன நடக்கும்? மைத்திரியை அண்மிக்கும் நெருக்கடிகள்!

அடுத்தடுத்து என்ன நடக்கும்? மைத்திரியை அண்மிக்கும் நெருக்கடிகள்!

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலை குண்டுதாக்குதல்களை நடத்திய குண்டுதாரிகளுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்து அமைச்சர் றிசாட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

எனினும் இவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் எவ்வித கருத்தையும் கூறவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் ஜனாதிபதிக்கு 24 மணி நேர காலக்கெடு வழங்கியிருந்தார்.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க இந்த காலக்கெடுவை வழங்குவதாக அத்துரலியே ரதன தேரர் கடந்த 28ஆம் திகதி அறிவித்திருந்தார்.

அத்துடன், ஜனாதிபதி இந்த காலக்கெடுவுக்குள் மேற்படி மூவரையும் பதவிகளில் இருந்து நீக்கவில்லை என்றால், பெரிய தீர்மானத்தை எடுக்க போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

எனினும் இந்த விடயம் தொடர்பான எந்த நகர்வுகளையும் ஜனாதிபதி எடுத்ததாக தெரியவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரியுள்ளதுடன், இந்த மூன்று பேருக்கும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் பயன்படுத்தப்படுகிறது.

அவர் அங்கு கடுமையான இனவாதத்துடன் செயற்படுவதாக தமிழ் – சிங்கள மக்களிடையே குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்படுகிறது. இலங்கையில், ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது கிழக்கின் ஆளுநராக ஹிஸ்புல்லாவே இருந்தார்.

இதற்குப் பின்னரும், அவர் இனவாதமாக செயற்பட்டுள்ளார். தமது சமூகத்தினருக்காக மட்டும் தான் அவர் செயற்பட்டுள்ளார். இது ஆளுநர் ஒருவருக்கான தகுதியல்ல. அவர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல், மேல் மாகாணத்தின் ஆளுநர் அசாத் சாலியும் கடுமையான போக்குடன் நடந்து கொள்கிறார். அமைச்சர் றிசார்ட் பதியூதீனும் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு குற்றங்களில் நாட்டில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவை பாரதூரமான விடயங்களாகும். இதனால், இவர்கள் மூவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இந்த நடவடிக்கையை ஜனாதிபதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

எனது உயிர் போனாலும், இந்த விடயங்களில் இருந்து நான் என்றும் பின்வாங்க போவதில்லை என்பதையும் கூறி கொள்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயத்தை நாம் சாதாரணமாக பார்க்க முடியாது.

கடந்த காலத்தில் பௌத்த துறவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் சாதகமான பதில்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அத்துரலிய ரத்ன தேரரின் எதிர்ப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்விதமான பதிலை வழங்க போகிறார் என்பது கேள்விக்குறியே.

ஜனாதிபதி, பௌத்த பிக்குமாரின் கோரிக்கைக்கு கட்டுப்படுவாரா? இல்லையெனில் இவர்களை எதிர்த்து ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி, றிசார்ட் பதியூதீன் ஆகியோருக்கு ஆதரவாக செயற்படுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net