//anjeng இன்று இரவிலிருந்து காற்றுடன் கூடிய மழை! | Mukadu

இன்று இரவிலிருந்து காற்றுடன் கூடிய மழை!

இன்று இரவிலிருந்து காற்றுடன் கூடிய மழை!

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) இன்று இரவிலிருந்து காற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலை நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net