இலங்கை அணி தடுமாற போட்டி மழையினால் இடைநிறுத்தம்!

இலங்கை அணி தடுமாற போட்டி மழையினால் இடைநிறுத்தம்!

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (04) நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டியில் மழை குறுக்கிட்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்துடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி எவ்வித மாற்றங்களும் இன்றி களமிறங்க, இலங்கை அணியின் சார்பில் வேகப் பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில், ஜீவன் மெண்டிஸிற்கு பதிலாக நுவன் பிரதீப் இணைக்கப்பட்டிருந்தார்.

அதேநேரம், இன்று களமிறங்கிய இலங்கை அணியின் சார்பில், திரிமான்னவுக்கு பதிலாக குசல் பெரேரா, திமுத் கருணாரத்னவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார்.

புதிய ஆரம்ப ஜோடியுடன் களமிறங்கிய இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றது. குறிப்பாக குசல் பெரேரா வேகமாக ஓட்டங்களை குவிக்க, திமுத் கருணாரத்ன நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவர்கள் இருவரும், முதல் விக்கெட்டுக்காக 92 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, 30 ஓட்டங்களுடன் மொஹமட் நபியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய லஹிரு திரிமான்னே நிதானமாக ஓட்டங்களை குவித்ததுடன், இதில் அவர் 6வது ஓட்டத்தை பெற்றபோது, ஒருநாள் போட்டிகளில் 3000 ஓட்டங்களை கடந்தார்.

100 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய இவர், வேகமாக 3000 ஓட்டங்களை பெற்ற மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்னர் உபுல் தரங்க 93 இன்னிங்ஸ்களிலும், மார்வன் அதபத்து 94 இன்னிங்ஸ்களிலும் 3000 ஓட்டங்களை கடந்திருந்தனர்.

லஹிரு திரிமான்னே மற்றும் குசல் பெரேரா ஆகியோர் அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுவளித்து ஓட்டங்களை குவித்த போதும், மொஹமட் நபி இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை ஆட்டம் காண வைத்தார்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 144 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்திருந்த நிலையில், மொஹமட் நபி ஒரே ஓவரில் லஹிரு திரிமான்னே, குல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்ற, இலங்கை அணி 146 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

குசல் பெரேரா மாத்திரம் களத்தில் நிற்க ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேற தொடங்கினர்.

மொஹமட் நபியின் ஓவருக்கு அடுத்த ஓவரில் தனன்ஜய டி சில்வா ஆட்டமிழக்க, திசர பெரேரா ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார்.

தொடர்ச்சியாக இசுரு உதானவும், இலங்கை அணிக்காக ஓட்டங்களை குவித்திருந்த குசல் பெரேராவும் (78) ஆட்டமிழக்க இலங்கை அணி முற்றுமுழுதாக தங்களுடைய கட்டுப்பாட்டை இழந்தது.

இறுதியாக, சுரங்க லக்மால் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் துடுப்பெடுத்தாடிய நிலையில், போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டது.

மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்படும் போது, இலங்கை அணி 33 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசல் பெரேரா 78 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பந்து வீச்சில் மொஹமட் நபி அதிகபட்சமாக 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதேவேளை, இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு தொடர்ந்தும் துடுப்பெடுத்தாட வாய்ப்பு இல்லாவிட்டால், ஆப்கானிஸ்தான் அணிக்கு 33 ஓவர்களில் 171 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net