ஏரியில் வீழ்ந்த சிறுமியை காப்பாற்றிய கனடா இளைஞர் பலி!

கனடாவின் கல்கரியை (Calgary) சேர்ந்த இளைஞர் ஒருவர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஏரி ஒன்றில் தவறி வீழ்ந்த சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர்த்தியாகம் செய்துள்ளார்.

கல்கரியைச் சேர்ந்த ஜொனதன் போல் ஸ்டெய்ன் பல்மைரி (வயது 20) தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினருடன் வின்டமெயர் ஏரிக்கு நீராடச் சென்றிருந்தார்.

அங்கு எதிர்பாராத விதமாக அவரது காதலியின் தங்கை தண்ணீருக்குள் தவறி வீழந்த நிலையில், சட்டென்று சூதாரித்துக் கொண்டு ஏரிக்குள் குதித்துள்ளார்.

அவர் சிறுமியை காப்பாற்றி தண்ணீருக்கு வெளியே எறிந்த நிலையில், மற்றவர்கள் அந்த சிறுமியை தண்ணீருக்கு வெளியே கொண்டு வந்து காப்பாற்றியுள்ளனர்.

ஆனால் ஜொனதனுக்கு அந்த அளவுக்கு நீச்சல் தெரியாது என்பதால், அவர் தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தார்.

எவ்வாறாயினும், அவரை தண்ணீரில் இருந்து வௌியில் எடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், சிகிச்சை பலனின்றி ஜொனதன் உயிரிழந்தார்.

பின்னர் அந்த சிறுமியின் தந்தை ஜொனதனின் தாயாகிய ரொரி பல்மைரியை சந்தித்த போது, அவரை அணைத்து, “நான் வருந்துகிறேன், உங்கள் மகன் என் மகளைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்து விட்டார்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதைக் கேட்ட ஜொனதனின் தாய், “நீங்கள் ஏன் வருந்த வேண்டும், அவன் எப்போதும் செய்வதைத்தான் இப்போதும் செய்திருக்கிறான்” என்று ஆறுதல் கூறியுள்ளார்.

ஏனென்றால், ஜொனதன் எந்த தருணத்திலும் மற்றவர்களுக்கு உதவுவதற்குத்தான் முன்னுரிமை வழங்குவார் என்று தயார் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது மகனிடம், “நீ எப்போதுமே மற்றவர்களைப் பற்றியே எண்ணுகிறாய், ஒரு மாற்றத்திற்காக கொஞ்சம் உன்னைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்” என்று கூறியதை கண்ணீருடன் நினைவு கூருகின்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net