சஹ்ரானுடன் முகப்புத்தகத்தில் தொடர்பு வைத்திருந்த நபர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் முகப்புத்தகம் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய விசாரணை பிரிவினார் நேற்று தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய மொஹமட் அசாருதீன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபருடன் தொடர்புடைய 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவின் 7 பகுதிகளில் இவ்வாறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கொயம்பத்தூர் பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுற்றிவளைப்பின் போது 14 கையடக்க தொலைபேசிகள், 29 சிம் அட்டைகள், 3 லொப்டொப் கணினிகள், 13 இறுவட்டுகள் டொங்கல் மற்றும் மேலும் பல காகிதங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மொஹமட் அசாருதீன் என்பவர் சஹ்ரான் ஹசீமுடன் முகப்புத்தகம் ஊடாக தொடர்பு வைத்திருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் முகப்புத்தகத்தின் ஊடாக ஐ.எஸ். அமைப்பின் கருத்துகளை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net