சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா? : ஆம் சந்தித்தேன் – ஹிஸ்புல்லாஹ்

சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா? : ஆம் சந்தித்தேன் – ஹிஸ்புல்லாஹ்

2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் நாம் மொஹமட் சஹ்ரானை சந்தித்ததாக தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், அவர் அப்போது தீவிரவாதியல்ல நல்ல மதவாதி எனவும் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தெரிவுக்குழு முன்னிலையில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,

கேள்வி:- நீங்கள் இலங்கையர் என நினைக்கிறேன், அவ்வாறு இருக்கையில் “இலங்கையில் நாங்கள் சிறுபான்மை, உலகில் பெரும்பான்மையினர் நாம் தான்’ என நீங்கள் கூறியது சரியா?

பதில்:- இது எனது அரசியல் கருத்து அல்ல, இது ஒரு பள்ளிவாசலில் நான் கூறிய விடயம். எமது மக்கள் அங்கு மிகவும் பயந்த சுபாவத்தில் இருந்தனர்.

அன்றாட வாழ்க்கை அனைத்துமே ஸ்தம்பிக்கப்பட்டு இருந்தன. வழமையாக எமது பெருநாள் பிரார்த்தனைகள் காலி முகத்திடலில் இடம்பெறும்.

இம்முறை அது நடக்கவில்லை. முஸ்லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்தனர். ஆகவே அவர்களை அச்சம் அடைய வேண்டாம் என கூறி உங்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுங்கள் என்றேன்.

இதன்போதே நாம் உலகில் பெரும்பான்மை மக்கள். ஆகவே அச்சமடைய வேண்டாம் என கூறினேன். எனினும் ஊடகங்கள் இதனை முன்னும் பின்னும் வெட்டிவிட்டு பிரசுரித்து விட்டனர்.

கேள்வி :- நீங்கள் இதனை நிராகரிக்கிறீர்களா?

பதில்:- நான் இலங்கையன் என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன். நான் எப்போதும் நாடு என்ற உணர்வுடன் வாழ்கிறேன். பெளத்த நாடு என்ற எண்ணத்தில் நான் பல கருத்துகளை கூறியுள்ளேன். எனினும் எமது மக்கள் அச்சமடையக் கூடாது என்றே கூறினேன்.

கேள்வி:- சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா?

பதில் :- ஆம் சந்தித்தேன்

கேள்வி:- எப்போது என்ன நோக்கத்தில் சந்தித்தீர்கள்?

பதில்:- கூறுகிறேன். 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்புமனு முடிந்தவுடன் அவர் எம் அனைவரையும் சந்தித்து பேச அழைப்பு விடுத்தார்.

அப்போது அவர் நல்ல மதவாதி. குறிப்பாக இளைஞர்கள் அவருடன் இருந்தனர். தேர்தல் முடிந்தவுடன் எம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். நான் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும், ஏனைய பலரும் வந்தனர்.

கேள்வி:- அரசியல் வாதிகளை கூப்பிட்டு பேசும் அளவிற்கு யார் இவர்? இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீங்கள் ஏன் இவருக்கு இவ்வளவு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள்? அவருக்கு அனைத்து கட்சிகளை சந்திக்க இருந்த நோக்கம் என்ன?

பதில்:- அப்போது அவர் பயங்கரவாதி அல்ல, அவர் சிறந்த மத தலைவராக இருந்தார். அவருக்காக பல இளைஞர்கள் பின்புலத்தில் இருந்தனர். ஆகவே வாக்குகளை பெற்றுக்கொள்ள அவர் தேவைப்பட்டார்.

கேள்வி:-நீங்கள் அவரை பயங்கரவாதி என ஏற்கமாட்டீர்களா?

பதில்:- அவர் பயங்கரவாதி தான் அதனை நான் மறுக்கவில்லை, ஆனால் அந்த காலத்தில் அவர் மத தலைவர். இளைஞர் அனைவரும் அவருடன் இருந்தனர். பல உடன்படிக்கைகள் அவரினால் போடப்பட்டன .

கேள்வி:- என்ன உடன்படிக்கை ?

பதில்:- தேர்தல் கூட்டங்களில் பாடல் ஒலிபரப்ப முடியாது. பெண்கள் கூட்டங்களுக்கு தனியாக வர வேண்டும். வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக நாம் அதனை ஏற்றுக்கொண்டோம்.

கேள்வி:- தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்ள எந்த உடன்படிக்கையையும் செய்வீர்களா?

பதில்:- அவர் அப்போது பயங்கரவாதி அல்ல, அவர் ஒரு மத தலைவர். அவர் பயங்கரவாதி என்றால் நாம் ஏன் சந்திக்க போகின்றோம்? அப்படி செய்ய மாட்டோம்.

அது மட்டும் அல்ல அதன் பின்னர் எனக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுத்தார். 2015 காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டேன். அதில் இருந்து எனக்கு எதிராகவே அவர் செயற்பட்டார்.

என்னை அவர் 2000 வாக்குகளால் தோற்கடித்தார். அந்த சந்திப்பின் பின்னர் அவரை நான் சந்திக்கவே இல்லை.

ஏனெனில் அவர் எனக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை செய்தார். எனக்கு வாக்கு கொடுக்க வேண்டாம் என பிரசாரம் செய்தார். நான் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் என்னை தேசிய பட்டியலில் இணைக்க வேண்டாம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்.

என்னுடன் சூபி மக்கள் உள்ளனர். அவர்கள் எனக்கு வாக்கு கொடுப்பார்கள். அவர்களை இவர்கள் தாக்கினர்.

இது தொடர்பில் வழக்கு தொடுத்துள்ளேன். இதில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு பிடியாணை விடுக்கப்பட்டது. அப்போதில் இருந்து எனக்கு எதிராக பல எதிர்ப்புகள் வந்தன.

இந்தியாவில் கேலி சித்திரம் ஒன்றை எடுத்து அதில் எனது முகத்தை பொருத்தி முகப்புத்தகதில் விமர்சனம் செய்தனர், அவர் நியாஸ் என்ற நபர். இவர்தான் தற்கொலை தாரியாவார்.

என்னை மட்டும் அல்ல எனது குடும்பத்தையும் விமர்சித்தார். 2017 மார்ச் மாதத்தில் இருந்து இவரை தேடுவதாக கூறினர். சஹ்ரான் மற்றும் அவரது குழுவை கைதுசெய்ய வேண்டும் என நானும் சூபி குழுவினரும் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் அதன் பின்னர் அவர் இருக்கவில்லை. அவர் நாட்டில் இல்லை என கூறினார்கள்.

அதன் பின்னர் அவரை நாம் சந்திக்கவில்லை. எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் என்னை இல்லாது செய்ய நடவடிக்கை எடுத்தவர். இராணுவத்தினர் பலருடன் இவர் தொடர்பில் இருந்தவர்.நியாஸும் அவ்வாறு இருந்தார்.

கேள்வி:- இது என்ன கதை, தெளிவுபடுத்துங்கள்?

பதில்:- இவர்கள் யுத்த காலத்தில் இருந்து தொடர்பில் இருக்கலாம். ஆமி மொய்தீன் என்பவரும் இதில் இருந்தார். நியாஸ் என்ற நபர் இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார். இராணுவத்துடன் இவர்கள் இருந்தனர். இராணுவத்துடன் வருவது போவதை பார்த்தோம். அவர்கள் பலமாக இருந்தனர். நாம் என்ன கூறினாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

கேள்வி:- இராணுவத்துடன் தொடர்பில் இருந்தனரா? எப்போதில் இருந்து?

பதில் :- ஆம் 2015 ஆம் ஆண்டில் இருந்து தொடர்பில் இருந்தனர். அனைவருமா என்று தெரியாது, ஆனால் நியாஸ் தொடர்பில் இருந்தார் .

கேள்வி:- நீங்கள் எந்த கட்சியில் அப்போது இருந்தீர்கள்?

பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தேன். கிழக்கில் பிரதான வேட்பாளராக களமிறங்கினேன்

கேள்வி:- சஹ்ரானின் அழைப்புக்கு செல்ல நீங்கள் தீர்மானிக்க அவருக்கு இருந்த பலம் என்ன?

பதில்:- வாக்கு பலம் தான்

கேள்வி:- நீங்கள் வாக்குகளை மட்டும் பார்த்தால் அவருக்கு எத்தனை பேர் ஆதரவாக இருந்தனர் என நினைகிறீர்கள்?

பதில்:- இரண்டாயிரம் மூவாயிரம் வாக்குகள், அப்போது நான் மகிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன், அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டு இருந்தார். ஊரில் மூவாயிரம் வாக்குகள் உள்ளன என்றால் பலம் தானே? அதேபோல் அவர் நல்ல பேச்சாளர். ஆகவே அது பலம் தான்.

இதற்காக மட்டும் அல்ல இவரை தவிர வேறு வேறு அமைப்புகளுடனும் பேசினேன். தப்ளிக் ஜமாஅத் அவர்களுடன் பேசினேன். பத்தாயிரம் வாக்குகள் உள்ளன. சூபி என்ற அமைப்பு உள்ளது. அவர்களிடம் ஆயிரம் வாக்குகள் உள்ளன. தாருல் என்ற அமைப்பு இவ்வாறு பல அமைப்புகள் உள்ளன. அவர்களிடம் பேசுவோம்.இது சாதாரண விடயம்.

கேள்வி:- சஹ்ரானுக்கு பாதுகாப்பு உதவி கிடைத்ததா?

பதில்:- ஆம், சஹ்ரான் எந்த சிக்கலும் இல்லாது அனைத்து சலுகைகளையும் பெறுவார். அவர்களுக்கு பொலிஸ் நெருக்கடி இருக்கவில்லை. அவர் வேறு முஸ்லிம் அமைப்புகளை விமர்சித்து ஒலிபெருக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்துவார்.

கேள்வி:- அப்படிஎன்றால் அவருக்கு அனுமதி கிடைக்குமா?

பதில்:- ஆம், சகல சலுகைகளையும் பெற்றார்.

கேள்வி:- அவர் மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வையும் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக வெறுப்புணர்வையும் ஏற்படுத்தினார். அப்படியா?

பதில்:- ஆம், அவர் மத ரீதியில் தாக்குதல் நடத்துவார். 2010-11 காலங்களில் இருந்து மத ரீதியில் புதிய புதிய விடயங்களை கூறி ஒவ்வொரு குழுக்களில் இணைந்தார். அவர்களிடம் முரண்பாடுகள் ஏற்பட்டு அவர்களே நீக்கிவிடுவார்கள். பின்னர் அவராக ஒரு அமைப்பை உருவாக்கினார்.

ஒவ்வொரு வெள்ளியும் ஏனைய மதங்களை விமர்சித்தார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் ஊரில் இருக்கும் வரையில் மதவாதியாக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Copyright © 3137 Mukadu · All rights reserved · designed by Speed IT net