ஒரே ஒரு வழிதானுள்ளது – அதுதான் மகிந்த வழி.

“அலரி மாளிகையைவிட்டு வெளியேறமாட்டேன்” என்று அடம்பிடித்துக்கொண்டு பிரதமர் பதவியை தனது கழுத்துப்பட்டியைப்போல கொழுவியவாறு கடந்த ஒக்டோபர் மாதம் ஜனநாயகம் பேசிய ரணிலை –

இன்று, அதே ஜனநாயகத்தை சாட்டைபோல வீசி அந்த அலரி மாளிகையிலிருந்து கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள் ராஜபக்ச சகோதரர்கள்.

விடுதலைப்புலிகள் உட்பட தன்னோடு உறவாடிய எல்லாத்தரப்பிற்குள்ளேயும் வெடி வைத்து தனது பிரித்தாளும் சூட்சுமங்களை அரங்கேற்றி விளையாடிய ரணிலுக்கு “பதிலுபகாரமாக” அவரது ஐக்கிய தேசிய கட்சியை சல்லி சல்லியாக உடைத்து பொறுக்கி எடுத்துக்கொண்டு போகச்சொல்லியிருக்கிறார்கள் ராஜபக்ஷக்கள்.

“ஒட்டுமொத்த கிரிமினல்களும் கிரீடம் சூடிக்கொண்டு நின்று இந்த நாட்டை ஆளப்போவதாக அறைகூவுகிறார்களே” – என்று ஆளுக்காள் முழியை பிதுக்கினாலும், ராஜபக்ஷக்களின் இந்த வெற்றியை இலகுவாக எடைபோட்டுவிடமுடியாது.

இதன் பின்னணியில் மகிந்த என்ற “சிங்களவர்களின் பிரபாகரன்” கடந்தவந்த பாதையும் அதற்காக அவர் போட்ட கணக்குகளும் உலகளாவிய ரீதியில் மிகப்பெறுமதிவாய்ந்த அரசியல் சூத்திரங்கள். அவற்றை அணுகுவதும் அவிழ்ப்பதும் அவர்போன்ற ஒரு சிலரால் மாத்திரமே முடியும்.

அரசியலில் விழ விழ எழுந்துவிடக்கூடிய அசாத்தியமான திறமைகொண்டவர் மகிந்த என்பது அவரது வரலாறு அறிந்தவர்கள் தெரிந்திருக்கக்கூடும்.

ஒரு காலத்தில், சிறிலங்கா சுதந்திர கட்சி என்ற பலமான அமைப்பு ஜேஆரினால் கொடூரமாக துண்டாடப்பட்டு, சிறிமாவின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அந்தக்கட்சியிலிருந்தவர்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அடைக்கலம் தேடினால்தான் தலை தப்பும் என்றளவுக்கு கட்சி தாவி அந்தப்பராம்பரிய கட்சியே அம்மணமாக நின்றபோது, அப்போதிருந்து அந்தக்கட்சிக்கு ஆடை கட்டத்தொடங்கியவர் மகிந்த.

கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை மீளக்கட்டியெழுப்பி, எங்கெங்கோ இருந்தவர்களையெல்லாம் கட்சிக்குள் கொண்டுவந்து, தன்னை முன்னிறுத்தாமல் கட்சியை முன்னிறுத்திக்கொண்டு அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர். பின்னர், சந்திரிகா ஜனாதிபதியானபோது அவரது அரசில் அமைச்சராகி, தொடர்ந்தும் “கட்சிக்காக” என்ற விடயத்தில் உறுதியாக நின்றுகொண்டவர்.

அரசியலின் அடிமுதல் நுனிவரை தெரிந்த அந்த உழைப்புத்தான் அவரை 2005 இல் நாட்டின் ஜனாதிபதியாக்கியது.

2015 தோல்வியை அவர் எதிர்பார்க்கவே இல்லை. பிடரியில் அடித்து கிரீடத்தை பறித்துவிட்டதைப்போல திகைத்துப்போயிருந்தார். பெருந்தோல்வியோடு தலை கவிழ்ந்தபடி சொந்த ஊருக்கு சென்றபோது, சிங்கள மக்கள் சாரி சாரியாக பஸ்களில் அவரிடம் சென்றார்கள். எல்லோருக்கும் பாற்சோறு கொடுத்துவிட்டு “தன்னை தமிழர்கள் தோற்கடித்துவிட்டார்கள்” – என்று அவர்களது இதயத்தில் இறங்கி நின்று பேசினார்.

அன்றைக்கு அவர் முடிவெடுத்தாரோ இல்லையோ, சிங்கள மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள், தங்கள் தலைவனை மீண்டும் அரியணை ஏற்றுவதென்று.

தோல்வியின் வலி உள்ளே அவரை உருட்டியபடியே இருந்தது. 70 வயதிலும் பாதயாத்திரை போனார். அரசுக்கு எதிரான போராட்டத்தில் கோமளிக்கூட்டங்களான விமல் வீரவங்ஸ போன்றோருடன் எல்லாம் நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் போனார்.

தான் ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் தனக்கு எழுந்து நின்ற அந்த நாடாளுமன்றத்தில், மற்றவர்கள் வரும்போது அவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திக்கொண்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி என்ற நினைப்பை அப்படியே மூட்டைகட்டி வைத்துவிட்டு நான்கு வருடங்களாக ஒரு இலக்கோடு திட்டத்தை வகுத்துக்கொண்டே வந்தார்.

வன் சக்திகளை டீல் பண்ணுவதற்கு கோத்தாவை இறக்கிவிட்டார். சிங்கள லிபரல்களை டீல் பண்ணுவதற்கு சாமல் ராஜபக்ஷவை இறக்கவிட்டார். “தக்க வகையில்” டீல் பண்ணவேண்டிய பெரும் பெரும் டீல் மண்டைகளை கழுவுவதற்கு பசிலை இறக்கிவிட்டார். சிறுபான்மையினரோடு டீல் பண்ணுவதற்கு மகன் நாமலை இறக்கிவிட்டார். திட்டங்களை புதுப்பித்துக்கொண்டேயிருந்தார்.

தனக்கு முன்னாலிருந்து எல்லா வேலிகளையும் எல்லா முட்களையும் இஞ்ச் இஞ்சாக தெரிந்துவைத்திருந்த காரணத்தினால், எங்கு குனியவேண்டும் எங்கு குதிக்கவேண்டும் என்று நேர்த்தியாக தெரிந்து வைத்திருந்தார்.

2015 இல் தோற்றார்.
2018 இலும் ஒக்டோபர் புரட்சியில் தோற்றார்.

ஆனால், 2019 இல் சொல்லிவைத்தது போல அடித்தார்.
ஆட்சியை பிடித்தார்.

அதுவும் சும்மா வெற்றியில்லை வெற்றிலையில் மைபோட்டு பிடித்த வெற்றியும் இல்லை.

இலங்கையின் வரலாறு காணாத சாதனை மிகுந்த வெற்றி. அதுவும் ஒட்டுமொத்த சிங்களவர்களையும் தனது கைக்குள் வைத்துக்கொண்டு, தமிழர்களை கசக்கி எறிந்த வெற்றி.

உண்மையை சொல்லப்போனால், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிங்கள படைகளினால்தான் தோற்கடிக்கப்பட்டார்கள். 2019 ஜனாதிபதி தேர்தலில்தான் சிங்கள மக்களினால் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

இவ்வளவு விடயங்களையும் வாசிக்கும் ஒரு தேசியக்குஞ்சுக்கு எனக்கு மண்டையிலேயே வெடிவைக்கவேணும் போலத்தானிருக்கும். ஆனால், இந்த உண்மைவரலாற்றில் இருக்கின்ற உழைப்பையும் அரசியல் சூழ்ச்சிகளையும் அரசியல் பாதைகளையும் பயிலாதவரை தமிழர்கள் “வீடிழந்த விக்னேஸ்வர்களாகத்தான்” அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கவேணும்.

வெறுமனே வீரத்தமிழர்கள், சூரத்தமிழர்கள் என்று நாக்கை வெளியில் தள்ளிக்கொண்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடித்திரிவதல்ல வீரம். வீழ்ந்தால் எழுவதும், சமயத்தில் விட்டுக்கொடுப்பதும்கூட வீரம்தான்.

தமிழர்கள் போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளி என்று கடந்த பத்து வருடங்களாக குடல் தெறிக்க கத்தியவனை இன்று சிங்கள தேசம் தனது தலைவன் என்று அறிவித்துவிட்டது. “உங்களுக்கு கண்களுக்கு கொடூரமான குற்றவாளியாக தெரிபவன்தான் எங்களது தலைவன்” என்று இன்று கோத்தபாய உட்பட அனைவருக்கும் வெள்ளையடித்து வெளியே விட்டிருக்கிறது சிங்கள தேசம். தமிழ் மக்களின் முகங்களில் ஓங்கி அறைந்திருக்கும் இந்த ஆணையிலிருந்து வெளியே வருவதென்றால் –

– ஒரே ஒரு வழிதானுள்ளது.

– அதுதான் மகிந்த வழி.

 

ப.தெய்வீகன்

Copyright © 9360 Mukadu · All rights reserved · designed by Speed IT net