எழுத்து என்பது ஆயுதம். ஊடகத்துறை என்பது போர்க்களம்-சிவா சின்னப்பொடி

எழுத்து என்பது ஆயுதம். ஊடகத்துறை என்பது போர்க்களம்.-சிவா சின்னப்பொடி

இன்றைக்கு தமிழ் ஊடகப்பரப்பிலே ஒரு சம்பவத்தை வார்த்தைகளை கோர்வையாக அடுக்கி எழுதத் தெரிந்துவிட்டால் அல்லது உலக மேலாதிக்க ஊடக நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை வரிக்குவரி மொழிபெயர்த்து சொல்ல தெரிந்துவிட்டால் அவர் செய்தியாளர் என்ற நிலைமைதான் இருக்கிறது. அதுவும் ஊடக முதலாளிகள் விரும்பும் விதத்தில் அதை எழுதுகின்ற வித்தை தெரிந்துவிட்டால் அவரை ஊடக முதலாளிகள் வளர்த்துவிடுவதும் அவருக்கு ‘சிறந்த ஊடகவியலாளர்’ என்று ஒளிவட்டம் சூட்டுவதுமான அவல நிலையில் தான் தமிழ் ஊடகப்பரப்பு இருக்கிறது.

ஊடகம் என்பது சொற்களை விற்கும் வியாபார நிறுவனம் அல்ல.அதேபோல ஊடகவியலாளன் என்பவன் அந்த சொற்களை தேடிக் கோர்த்து விற்பனை செய்யும் விற்பனையாளனும்; அல்ல.ஆனால் இன்றைய யதார்த்தம் இதற்கு எதிர்மறையாகத்தான் உள்ளது.

ஊடகம் என்பது மக்களுக்கானது. அது மக்களின் குரல். மக்கள் தங்களின் கருத்தை, தங்களின்எதிர்ப்பை, தங்களின் உணர்வை வெளிப்படுத்துவதற்கான போர்க்களமே ஊடகமாகும்.இந்தப் போர் களத்தில் எழுத்தை ஆயதமாக்கி மக்களின் பிரதிநிதியாக இருந்து மக்களின் குரலாக இருந்து போராடுபவனே ஊடகவியலாளனாவான்.

ஊடகத்துறையை தேர்ந்தெடுக்கும் ஒருவர் முதலில் முக்கியமாக தாம் மக்களுக்கு கருத்தை சொல்லப்போகிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்;. அதுவும் அந்தக்கருத்தை மக்களது வீட்டு வரவேற்பறைக்குள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலே கொண்டு செல்லப் போகிறோம் என்பதை மறக்கக் கூடாது.

ஒரு ஊடகவியலாளர் யாரோ உருவாக்கிய கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும்; போதும்; அல்லது தான் உருவாக்கிய கருத்தை மக்களுக்கு முன்வைக்கும் போதும்,அந்தக் கருத்தால் மக்களுக்கு தீங்கு அல்லது பாதிப்பு ஏற்படுமா? என்பதை முதலில் இனங்காணவேண்டும்.

ஒரு செய்தியை அதன் செய்திப் பெறுமதிக்கு அப்பால் பூதாகரமாக்கும் தவறை ஊடகவியலாளர்கள் செய்யவே கூடாது.

‘செய்தி என்பதே புதினத் தன்மை உடையது’ என்கிற போது இந்தப் புதினத்தன்மையை மக்கள் அறிவு ரீதியாக உள்வாங்கும் படி செய்ய வேண்டுமே அல்லமால் உணர்வு ரீதியாக உள்வாங்க செய்யக் கூடாது.
ஊடகத்துறையில் இருக்கும் ஏராளமானோர் இந்தத் தவறைச் செய்கிறார்கள்.

மக்களுக்கு மருத்துவம் செய்யக் கூடிய ஒரு மருத்துவர் முதலில் அதற்கான கல்வியை முறைப்படி கற்றிருக்க வேண்டும்.மருத்துவ துறைசார்ந்த ஆளமான அறிவு அவருக்கு இருக்க வேண்டும்.அதே போல் அந்த துறைசார்ந்த அனுபவத்தையும் அவர் பெற்றுக்கொள்ள வேண்டும்.இவை அனைத்தும் இருந்தால் தான் அவர் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய சிறந்த மருத்துவராக இருக்க முடியும்.இது ஊடகத்துறைக்கும் பொருந்தும்.

ஒரு ஊடகவியலாளன் ஊடகவியல் சார்ந்த அடிப்படை கல்வியை முறைப்படி கற்றிருக்க வேண்டும்.இடையறாத வாசிப்பும் அனைத்து துறை சார்ந்த அறிவும் தேடலும் அவனுக்கு இருக்க வேண்டும்.அப்போது தான் அவனால் சமூக அக்கறையுள்ள ஊடகவியலாளனாக உருவெடுக்க முடியும்.

தமிழிலே ‘கண்டதை கற்க பண்டிதனாவான்’ என்ற ஒரு பழமொழி உள்ளது.இந்தப் பழ மொழி ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு மிக முக்கியமானது.சமுகத்தினுடைய இயங்கியல்,அதன் அசைவியக்கம், இவற்றினுடாக தோற்றம் பெறும் சமூகவியல் கோட்பாடுகள், சமூக உளவியல், மாநிடவியல், முக்கியமாக வரலாறு இவை பற்றி அடிப்படை அறிவு என்பது சமூகப் பொறுப்புள்ள ஒரு ஊடகவியலாளனுக்கு தேவையான ஒன்றாகும்.
இரண்டும் இரண்டும் நான்கு,நான்கும் நான்கும் எட்டு என்று கணித வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்வது போல, ‘யார் எங்கே என்ன எப்போது ஏன்?’என்பது போன்ற கேள்களுக்கெல்லாம் விடை கிடைக்கும் விதத்தில் சொற்களை ஒழுங்கமைத்து புதினத்தன்மை உள்ளதாக எழுதிவிட்டால் அது ஒரு செய்தி என்று இன்று ஊடகத்துறையில் உள்ள பலரும் நினைக்கிறார்கள்.
ஒரு சம்பவம் நடக்கும் போது அல்லது ஒரு பிரமுகர் ஒரு விடயத்தை சொல்லும் போது அதற்கு பின்னால் உள்ள வரலாறு மற்றும் சமூக அரசியல் மாநிடவியல் காரணங்களை ஆராய்ந்து அதன் பின்புலத்தில் அந்த செய்தியை உருவாக்கும் போது தான் அதற்கு சமூகப் பெறுமதியும் அர்த்தமும் கிடைக்கும்.இல்லை என்றால் அது ஒரு வாய்ப்பாடாகத்தான் இருக்கும்.

உலகிலுள்ள எல்லா மொழிகளின் அரிச்சுவடிகளிலும் உள்ள எழுத்துக்களை அந்த மொழிகளை பேசும் அனைவரும் அறிந்திருப்பார்.எழுத்தறிவற்ற ஒரு சிறு தொகையினரை தவிர மற்ற அனைவராலும் எழுத்துக்களை வைத்து சொற்களை உருவாக்கவும், அந்த சொற்களை கோர்த்து வாக்கியங்களை அமைக்கவும் தெரியும். ஒரு மொழியை பயன்படுத்துகின்ற அனைவருக்கும் ஏழுத்துக்கள் எல்லாம் பொதுவான ஒன்றாக இருந்தாலும் அவர்கள் அமைக்கிற சொற்களுக்கான அர்தமும் பொதுவாக இருந்தாலும், எந்தச் சொல்லை எங்கே பயன்படுத்த வேண்டும்,எப்படிப்பயன்படுத்த வேண்டும் எந்தச் சொல்லுடன் எந்த இடத்தில் எந்தச் சொல்லை இணைக்க வேண்டும் என்பதைப் பொறுத்தே அந்த எழுத்தின் வீச்சும் ஆளுமையும் பெறுபேறுகளும் இருக்கும்.

உதாரணமாக ஆயுதங்கள் அனைத்துமே உயிர் பலி வாங்குவதற்காகத்தான் தயாரிக்கப்படுகிறன்றன என்பது ஒரு பொதுவான உண்மை என்றாலும் ‘இந்த ஆயுதங்களால் மக்களை காப்பாற்றவும் முடியும்’ என்பது அந்த பொதுவான உண்மைக்குள் மறைந்திருக்கும் இன்னொரு உண்மையாகும்.ஒரு ஆயுத மோதல் நடைபெறும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மனித உயிர் காவு கொள்ளப்படும்.அந்த மனித உயிர் யாரால் காவு கொள்ளப்பட்டது?கொல்லப்பட்டவரினதும் கொலை செய்தவரினதும் நோக்கம் என்ன? அதன் பின்னாலுள்ள அரசியல் என்ன?இந்த மோலுக்கான சமூகவில் காரணிகள் என்ன? என்பதை கண்டறிவதுதான் சமூகப் பொறுப்புள்ள ஒரு ஊடகவியலாளளின் முதல் கடமையாகும்.

அனைத்து படுகொலைகளும் கண்டனத்துக்கு உரியவையே.அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அனைத்து படுகொலைகளின் போதும் கொலை செய்யும் தரப்புக்கு அது நியாயமானதாகவும் கொல்லப்படும் தரப்புக்கு அது அநியாயமாகவும் தோன்றும்.எந்த ஒரு கொலையிலும் அதன் நியாய அநியாயங்கள் என்பது அந்த படுகொலைக்கு பின்னால் அதை வைத்து செய்யப்படும் அரசியலை வைத்தே தீர்மானிக்கப்படும்.

மக்களை தாக்கி அழிக்கவரும் இராணுவத்தினரை விடுதலைப் போராளிகள் சுட்டுக்கொன்றால் அது மக்களை காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நியாமான நடவடிக்கையாக போராடும் தரப்பால் கூறப்படும்.ஆனால் கொல்லப்பட்ட இராணுவத் தரப்பில் ‘நாட்டின் இறைமையயை காக்க வந்த தேசிய வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டார்கள்’ என்று கூறப்படும்.நாட்டின் இறைமையை காப்பாற்காக மக்களை அழிக்கலாம்.உயிர்பலி வாங்கலாம்;.அதை யெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது.கேட்டால் அது தேசத்துரோகம் அல்லது பயங்கரவாதம்.’இறைமை என்பது மக்களுக்கானது,மக்களுடைய தானே’ என்று கேட்டால், மக்கள் அதை காக்கும் பொறுப்பை அரசாங்கத்தக்கு வழங்கியிருக்கிறார்கள் என்று பதில் வரும்.
இறைமைக்கு உரித்துடைய மக்கள் அந்த இறைமையை காப்பதாக சொல்லிக் கொள்ளும் இராணுத்தை எதிர்க்கிறார்கள் என்றால் அந்த இராணுவம் மக்களுடைய இறைமையை காப்பதற்காக வரவில்லை என்பதையும் அந்த இறைமையின் பெயரால் மகக்ளை சுரண்டுவதற்கும் அடக்கி ஒடுக்குவதற்கும் அதிகாரத்தை தங்கவைக்க இராணுத்தை பயன்படுத்தும் மக்கள் விரோத அல்லது அந்நிய அட்சியாளர்களையே அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற உண்மையை வெளிக் கொண்டுவருவதே இது தொடர்பான செய்தியின் செய்திப் பெறுமதியாக இருக்க வேண்டும்.

இதற்கு இன்னொரு உதாரணத்தை கூறலாம் என்று நினைக்கிறேன். எழுதுவதற்காகத்தான் பே(னா)னைகள் அனைத்தும் தயாரிக்கப்படுகின்றன. இன்று கணனி விசைப்பலகைகள் அனைத்தும் கூட தட்டச்சு செய்வதற்காகத் தான் தயாரிக்கப்படுகின்றன.ஆனால் அவை யாரால் எவ்வாறு எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அதன் பெறுபேறுகள் அமையும்.

ஒரு பேனை(னா) ஒரு குழந்தையின் கையில் கிடைத்தால் அதன் பெறுபேறு சில கோடுகளாகவும் கிறுக்கல்களாகவும் இருக்கும்.ஒரு சிறுவனின் கையில் அது கிடைத்தால் அதன் பெறுபேறு ஒரு வரை கோட்டு படமாகவோ அல்லது எழுத்துக்களின் கோர்வையாக அமைந்த சில சொற்கூட்டங்களின் தொகுப்பாக இருக்கும்.

இது ஒரு இளைஞனின் கையில் கிடைத்தால் அதன் பெறுபேறு அவனது பாடக்குறிப்பாகவோ அல்லது தனது காதலிக்கு எழுதும் கடிதமாகவோ இருக்கும்.ஒரு சாராசரி மனிதன் அதை தனது வரவு செலவு கணக்கை குறித்து வைக்கவும் சில தகவல்குறிப்புகளை எழுதவும் பயன்படுத்துவான்.

ஆனால் ஒரு படைப்பாளி அல்லது ஒரு ஊடகவியாளளின் கையில் கிடைத்தால் மட்டுத்தான் அதன் பெறுபேறு ஒரு இலக்கியப்படைப்பாகவோ அல்லது ஒரு புதினப்படைப்பாகவோ இருக்கும். அதிலும் இந்த இலக்கியப் படைப்பும் புதினப்படைப்பும் சமூக அக்கறையுள்ள ஒருவனிடம் இருந்து வெளிப்படும் போது தான் அவற்றிக்கு புதிய அர்த்தமும் வடிவமும் கிடைக்கிறது.

மனித வாழ்க்கைக்கும் அந்த வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட அக புறச் சூழலுக்கும் இடையில் இடையறாது நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை தமது படைப்புக்கள் மூலம் வெற்றிகரமாக கையாண்டு சமூகத்தை முன்நோக்கி நகர்த்துவதற்கு முனைபவர்களே வரலாற்றின் பக்கங்களில் தடம் பதிக்கின்றனர்.

முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருக்கும் நாம் வாழும் இந்த சமூகத்தை முன்நோக்கி நகர்த்துவது என்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல.இந்த சமூகம் இப்படித்தான் இயங்க வேண்டும் என்று அதிகாரவர்க்கத்தால் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதற்கான எல்லைக்கோடுகளும்; போடப்பட்டுள்ளன. இந்த எல்லைக் கோட்டை எவரும் தாண்டிச் செல்ல முடியாதபடி பெரிய தடுப்புச் சுவர் கூட அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றையெல்லாம் இலகுவாக எவரும் தகர்த்துவிடக் கூடாது அல்லது தாண்டிவிடக் கூடாது என்பதற்காக சாதி,மதம், பிரதேசம்,பயங்கரவாதம், தீவிரவாதம் முதலான கண்ணிவெடிகளும் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் எல்லைக்கோடுகள் தடுப்புச் சுவர்கள் கண்ணிவெடிகள் எல்லாமே மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டுவதற்கும் அதற்கான அதிகார அமைப்பை தக்க வைப்பதற்குமாவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை சமூக நலன், சமூக ஒழுங்கு, சமூகத்தின் அசைவியக்கம் என்பவற்றை பாதுகாப்பற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக நமக்கு திரும்பப் திரும்ப போதிப்பட்டு வருகிறது.நமது செயற்பாடுகள், நமது படைப்புக்கள் எல்லாமே இவற்றை நியாப்படுத்தும் விதத்திலும் அமைந்தால் மட்டுமே அவை சிறந்தவை, உன்னதமானவை என்று முன் உதாரனங்களும் காட்டப்பட்டு வருகின்றன.

ஒரு மக்கள் சமூகம் அடக்கப்படும் போது அம்மக்களின் உணர்வுகள் தொடர்ந்து கிளர்ந்து வந்து ஒரு குறிப்பிட்ட திருப்பு முனையில் கலாச்சார வடிவான எதிர்ப்பாகத் திரள்கிறது. இந்த கலாச்சார எதிர்ப்பே அரசியல் விழிப்பாகவும், பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான இயக்கமாகவும், ஆயுத எதிர்ப்பாகவும் தோற்றம் கொள்கிறது.இந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பும் அதை அடுத்த கட்டத்தை நோக்கி உந்தித் தள்ள வைக்கும் வல்லமையும் படைப்பாளிகளிடமும் ஊடகவியலாளார்களிடமுமே உள்ளது.


(இது “மக்களுக்கான ஊடகமும் ஊடகவியலும்” என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள நூலின் ஒரு பகுதி. கொரோனா வைரஸ் இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் பொய்களையும் வதந்திகளை யும் பரபரப்புச் செய்திகளாக வெளியிட்டுக் கொண்டிப்பவர்களுக்காக இதை இங்கு பதிவு செய்கிறேன்.)

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net