என் செல்லக்கொலைகாரி.கவிதை வாகைகாட்டான்

வெள்ளிக்கொலுசுகள்
தாளமிட
ததும்பத்ததும்ப தண்ணீர்க்குடம்
சுமப்பவளின்
பாதி நனைந்த பாவாடையிலிருந்து சொட்டும் துளிகள் பட்டதனால்
மகிழ்ச்சியில் திழைக்கிறேனென
மண்வாசத்தால்
அறிவித்து கிடந்தது
அந்தப் புழுதித்தெரு…

வலக்கையால்
படலையை பிடித்தபடி
இடக்கையை இடையில் வைத்துக்கொண்டு
நான் கடக்கும்
நேரங்களிலெல்லாம்
கண்களை ஆயுதமாக்கி
சிரித்தபடி கொலை செய்யும்
என் செல்லக்கொலைகாரி!

அவள் வதனத்திலிருந்து
உதிரும் புன்னகையில்
சிதறும் பொற்பரல்கள்
நட்சத்திரங்களாகும்
அதிசயத்தை ரசிக்கத்தெரியாத
சாபம் பெற்ற
ஊரின் கண்ணுக்கு
என் அதிசயக்காரி
அட்டைக்கருப்பியாகவே
இருந்துவிட்டு போகட்டும்…

“சாம்போ நிறுவனங்கள்
விளம்பரத்துக்காக
வால் பிடித்து அலையும்
உலக அழகிகளின்
கூந்தலை வெல்ல
என் ஊரிலும் ஒருத்தி
இருக்கிறாளென
அறைகூவல் விடுகிறேன் …

குளித்த கூந்தல் அள்ளிமுடித்து
கொண்டையிலொரு செம்பருத்தி சூடி
பழமும் பூவும்
இடைக்குமேலேந்தி
அன்னமென நடந்து
அயலிலுள்ள
கோவிலுக்கு போகும் அவள்
சிகிரியச்சுவரில்
காசியப்பன்
வரையத்தவறிய ஓவியம்.

மண்வாசனை கவிஞர்

வாகைக்காட்டான்

Copyright © 0386 Mukadu · All rights reserved · designed by Speed IT net