மிங் விலங்குகளை கொன்றொழித்துவிட டென்மார்க் முடிவு.

வலுவான வைரஸை பரப்புவதாகக் கூறி சுமார் 17 மில்லியன் மிங் விலங்குகளை கொன்றொழித்துவிட டென்மார்க் முடிவு!

தோலுக்காக வளர்க்கப்படும் மிங்(mink) எனப்படும் சிறிய பாலூட்டி விலங்குகள் அனைத்தையும் கொன்றொழித்துவிட டென்மார்க் அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் பண்ணைகளில் உள்ள சுமார் 17 மில்லியன் மிங் விலங்குகள் அடுத்துவரும் நாட்களில் கொல்லப்படவுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மிங் விலங்குகள் ஊடாக வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய சிலரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் “கொவிட் 19” வைரஸின் மாற்றமடைந்து தீவிரம் பெற்ற ஒரு வடிவத்தை வெளிப்படுத்தி உள்ளன. அது மனித நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனமாக்கும் தன்மையை அதிகம் கொண்டிருப்பதால்
எதிர்காலத்தில் தடுப்பு மருந்துகளின் செயற்பாட்டுத் திறனை அது கேள்விக்குள்ளாகலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இத்தகைய ஆபத்தைக் கவனத்தில் கொண்டே மிங் விலங்குகளைக் கூண்டோடு ஒழித்துவிடத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக டென்மார்க் பிரதமர் மெற் பிரெட்றிக்சென் (Mette Frederiksen) தெரிவித்திருக்கிறார்.

கனத்த மனதுடன் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், வாழ்வாதாரத் தொழிலை இல்லாதொழிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள மிங் பண்ணையாளர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

உலகில் குளிர்கால ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படும் மிங் தோலை ஏற்றுமதிக்காக பெருமளவில் உற்பத்திசெய்யும் முதல் நாடு டென்மார்க் ஆகும்.

விலங்குகள் அனைத்தையும் கொல்லும் முடிவு அடுத்த சில வருடங்களில் மிங் பண்ணைத் தொழிலை அங்கு முற்றாக முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இதே போன்று நெதர்லாந்தின் மிங் பண்ணைகளில் இருந்து பலருக்கு வைரஸ் தொற்றிய தை அடுத்து அந்நாட்டிலும் ஆயிரக்கணக்கில் விலங்குகள் அழிக்கப்பட்டன.

மிகவும் சாதுவான மிங் விலங்குகள் பொதுவாக உடலில் வைரஸை காவுவதில்லை. ஆனால் அவற்றை நெருக்கமாக பெரும் எண்ணிக்கையில் கூண்டுகளில் அடைத்து வளர்க்கும் பண்ணை முறைகளாலேயே அவை தொற்றுக்கு உள்ளாகின்றன என்று விலங்குரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

04-11-2020. புதன்கிழமை

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net