பைடனின் வெற்றியை உறுதிசெய்வதை தடுத்து நாடாளுமன்றம் தீடீர் முற்றுகை.

அமெரிக்க காங்கிரஸில் அல்லோலம்.

பைடனின் வெற்றியை உறுதிசெய்வதை தடுத்து நாடாளுமன்றம் தீடீர் முற்றுகை!
சூட்டில் பெண் காயம்! ஊரடங்கு அமுல்!!

பொதுவில் அமைதியாக நடக்கின்ற அமெரிக்க அரச அதிகாரக் கைமாற்றம் இந்த தடவை பெரும் அல்லோலங்களைச் சந்தித்துள்ளது.

வோஷிங்டனில் கப்பிடோல் (Capitol) எனப்படும் புகழ் பெற்ற அமெரிக்க காங்கிரஸ் கட்டடம் நேற்று ட்ரம்ப் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களின் வன்முறைக் களமாக மாறியது. .

டிசெம்பர் 3ஆம் திகதி நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டு அமர்வு நேற்று நண்பகல் ஆரம்பித்த சிறிது நேரத்தில் அங்கு பெரும் களேபரம் வெடித்தது.

ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் காங்கிரஸ் கட்டடத்தை முற்றுகையிட்டு அதன் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்து பெரும் அடிதடியில் இறங்கினர். கப்பிடோல் பொலீஸாரால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாமற் போனது. இதனால் நாடாளுமன்ற அமர்வு உடனடியாக நிறுத்தப்பட்டு உறுப்பினர்கள் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

“பின்வாங்க மாட்டோம்” என்று கோஷங்களை எழுப்பியவாறு காங்கிரஸ் கட்டடத்தினுள் நுழைந்த கலகக்காரர்கள் சபாநாயகர் நான்ஸி பெலோசி (Nancy Pelosi) அம்மையாரது மேசை வரை முன்னேறிச் சென்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அச்சமயம் எதிர்ப்புக் கோஷங்கள் எழுதப்பட்ட காகிதங்கள் சபாநாயகரது கணனி விசைப்பலகை மீது போடப்பட்டன என்று தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்டடத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் எனக் கூறப்படும் பெண் ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்டடத்தினுள் இரண்டு வெடி குண்டுகள் அகற்றப்படுவதைக் கண்டதாக சீஎன்என் செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருக் கிறார்.

ட்ரம்ப் ஆதரவாளர்களை வெளியேற்று வதற்காக கலகம் அடக்கும் பொலீஸாரும் தேசிய காவல் படையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர். மாலை ஆறு மணிமுதல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்டடம் படையினரது முழுப் பாதுகாப்பின் கீழ் வந்துள்ளது என்று பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் அதிபராகப் பதவி ஏற்கவிருக்கின்ற நிலையில் அமெரிக்காவில் வெடித்திருக்கும் இந்த வன்செயல்களை வெளிநாடுகள் பலவும் கண்டித்துள்ளன.

“ஜனநாயகத்தின் மீதான பலமான தாக்குதல் இது” என்று பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் Jean-Yves Le Drian தனது ருவீற்றர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

“ஜனநாயகத்தை மிதிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்” என்று ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் Heiko Maas அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களிடம் கேட்டுள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க காங்கிரஸ் வன்செயல்களைக் கண்டித்துள்ளார்.

காங்கிரஸ் கட்டடம் மீதான வன்முறையை “அவமானகரமான காட்சிகள் ” என வர்ணித்துள்ள அவர், ஜோ பைடனின் அதிகார மாற்றத்தை அமைதியாகவும் முறைப்படியும் முன்னெடுக்குமாறு அமெரிக்கர்களைக் கேட்டிருக்கிறார்.

குமாரதாஸன்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net