இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் இளையோரின் ருவீற்றர் பதிவுகள் தீவிரம்.

“எனது அப்பா 16 வயதில் பிரான்ஸுக்குத் தப்பி வந்தார். அதனால் எனது குடும்பம் படுகொலையில் இருந்து தப்பியது… ”

“… எனது மாமாக்களும் சிறிய தந்தையரும் சனங்களைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் அனைத்தையும் இழந்தனர்…”

“… எனது தந்தை தனது குழந்தைப் பருவத்தை இழந்தார். பாடசாலையை விட்டு வெளியேறினார். தாயையும் சகோதரியையும் அன்பானவர்களையும் இழந்தார். பேனா பிடிக்க வேண்டிய வயதில் அவர் துப்பாக்கியை ஏந்தினார்….. ”

“…எனது தாத்தா இனப்படுகொலையின் போது கொல்லப்பட்டார்…. ”

பிரான்ஸில் பகிரப்பட்டுவரும் தமிழ் இளையோர்கள் சிலரது ருவீற்றர் பதிவுகளில் காணப்படுகின்ற வரிகள் இவை.

இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளைக் குறிக்கும் hashtag #GenocideSriLanka என்னும் தமிழ் இளையோரது கவனயீர்ப்பு இடுகுறி (hashtag) தகவல் பரிமாற்றம் ருவீற்றர் மற்றும் சமூக வலைத் தளங்களில் பிரபல மடைந்து வருகிறது.

கடந்த வாரம் தொடங்கப்பட்ட அந்த இடுகுறி (hashtag) தகவல் பரிமாற்றம் தமிழ் இளையவர்கள் மத்தியில் மட்டுமின்றி ஏனைய பிற சமூகத்தவர்கள் மத்தியிலும் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

பிரான்ஸின் ஊடகங்கள் சிலவற்றின் ருவீற்றர் பக்கங்களிலும் hashtag #GenocideSriLanka பற்றிய குறிப்புகள் பகிரப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரது இலங்கை நிலைவர அறிக்கை வெளியாகி இருப்பதை அடுத்தும், இலங்கையின் சுதந்திர தினம் நெருங்குவதை ஒட்டியும் இனப்படு கொலை தொடர்பான கருத்துப் பதிவுகள் பிரான்ஸின் தமிழ் இளையோர் மத்தியில் வேகமாகப் பகிரப்படுகின்றன என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரான்ஸின் “விடுதலை”(Liberation) என்ற பிரபல தினசரிப் பத்திரிகையிலும் இலங்கை இனப்படுகொலை தொடர்பான இளையோரது ருவீற்றர் கவனயீர்ப்பு பற்றிய செய்தி வெளியாகி உள்ளது.

குமாரதாஸன்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net