வரலாறு எனது வழிகாட்டி என்றார் “மேதகு” வே.பிரபாகரன்.

மேதகு ? ? பட அனுபவம்

“பிரபாகரன்”

ஏந்திய குழந்தைக்குப் பெயர் வைக்கும் காட்சியில் சிலிர்த்துப் போய்க் கண் மடை திறக்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றதொரு பரவச அனுபவம். இப்படியாக “மேதகு” படத்தில் பயணத்து விட்டு வந்திருக்கிறேன்.

எண்பதுகளில் ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் சின்னஞ் சிறுவர்களாக நாம் இருந்த அந்தக் காலத்தில், இரவு கழிக்கும் நேரத்தில் அந்த அமைதியை ஊடறுத்து ஒரு பறையொலி கிளம்பும்.
எல்லோரும் வீதிக்கு ஓடுவோம்.

சொல்லி வைத்தாற் போல வட்டம் போல நாமெல்லோரும் சூழ, அங்கே வந்திருக்கும் “தெருக்கூத்துக் குழு” நம் இன விடுதலையையும், நம் தமிழினம் எப்படி அடக்கி ஒடுக்கப்படுகிறது என்பதையும் பாட்டோடும், நிகழ் வரலாறுகளோடும் பாடிக் காட்டும்.
“இன்னார் மகன் இயக்கத்துக்குப் போய் விட்டாராம்” என்று அடுத்தடுத்த நாட்களில் வரும் ஊரார் பேச்சு. இதெல்லாம் நாம் வாழ்ந்த காலத்தில் தேங்கிய வாழ்வியல் நினைவுகள். வரலாற்று நாயகர்களின் அடிச்சுவடுகள் முகிழ்ந்த காலங்கள்.

இங்கே “மேதகு” திரைப்படத்தின் திரைகதையோட்டத்தின் அடிநாதமாகக், கதை சொல்லியாக “மதுரை அடைக்கலம் தெருக்கூத்துக் குழு” துவக்கப் புள்ளியில் இருந்து சேதி பறைய, “தம்பி”யின் கதையோடு, ஒரு இனம் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறு பதியப்படுகிறது. இந்த உத்தி எப்படி இவர்கள் மனதில் தோன்றியதோ என்ற பேராச்சரியம் எழுகிறது. நாம் வாழ்ந்த அந்த ஈழப் போராட்ட ஆரம்ப கால நிஜங்களின் தரிசனமாக இந்தத் தெருக் கூத்துக் “கதை சொல்லிகள்” நுட்பமாகப் பயன்பட்டிருக்கிறார்கள்.

“மேதகு” படம் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்வின் ஆரம்ப காலப் பதிவு என்ற அடையாளமே தவிர, இந்தப் படைப்பில் ஈழத் தமிழினம் சுதந்திரத்துக்குப் பின் எவ்விதமாகச் சிங்களப் பேரினவாதத்திற்கு இரையாக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றின் பதிவாகவே இருக்கின்றது.

அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த பண்டார நாயக்கா கொண்டு வந்த தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் தொடங்கிய அறப்போராடம், அதனைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட படுகொலை அரங்கேற்றங்கள் என்று கலவரபூமியாக அமைந்த சூழலில் தந்தை செல்வாவின் தலைமையிலான தமிழரசுக் கட்சிக்கும், பிரதமர் பண்டரநாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம். அந்தச் சமரசத்தை ஏற்காத பேரினவாதிகளின் முடுக்கி விடப்பட்ட வன்முறைகளின் உச்சமாக 1958 கலவரம், பிக்குவால் கொல்லப்படும் பிரதமர் பண்டாரநாயக்க என்ற வரலாற்றுப் பதிவுகளோடு பயணப்படுகிறது.

ஒரு பக்கம் தமிழ் இன உணர்வாளர்கள் தம்மினத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக அதுவரை கொண்டிருந்த சாத்வீக நெறிமுறைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தும் வேளை,

இன்னோர் புறம் சிங்கள ஆட்சியாளரால் தமிழினத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்தல் பாகுபாட்டால் மாணவர் சமூகத்தில் இருந்து எழும் கலகக் குரல்கள், அறவழியில் போராடும் மாணவர்களுக்கு எதிரான சிறீமா அரச படையின் சித்திரவதை அதன் விளைவாக மாணவர் தம் ஆயுதமாகத் “திருப்பி அடி” என்ற வன்முறைப் பாதையைத் தொடக்கும் புள்ளி என்று இரண்டு விதமான வரலாற்றுப் பரிமாணங்களைப் பதிவு செய்கின்றது.

இது வெறும் வரலாற்றுப் பதிவாக மட்டுமன்றி அந்தக் கோரத் தாண்டவங்களின் கண்ணாடியாயாகக் காட்சியமைப்புகள்.

தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரின் தோற்றப்பாடுகள், அந்த அந்தக் கடற்கரை மணல் திட்டில் தொடங்கும் நேர்த்தியில் இருந்து ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துப் பதிய வைத்திருக்கின்றார்கள்.
இனக் கலவரம் முகிழ்த்த சூழலைக் கொஞ்சம் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம் என்று நினைக்கும் போதே அடுக்கடுக்காத் தொடரும் காட்சிகள் அந்த எண்ணப்பாட்டை நீர்த்துப் போகச் செய்து நிகழ்வுகளை வலுவாக்குகின்றன

பண்டார நாயக்கா, செல்வா பேச்சு, சிங்களப் பிக்குகளின் உரையாடல், தமிழ்ச் சூழலில் நகரும் காட்சிகளுக்கான உரையாடல் போக்கு என்று வித்தியாசமான பரிமாணங்கள், எல்லாமே வெகு நேர்த்தி.

நாம் ஊரில் அந்தக் காலத்தில் பாவித்த இரட்டை யானை மார்க் நெருப்புப் பெட்டி. சிங்கள வீடுகளில் இருக்கும் மரச்செதுக்கு வேலைகள், தளபாடங்கள், அந்தந்தக் காலகட்டங்களில் இருந்த பொருட்கள், காட்சியமைப்புகல் என்று கலை இயக்கத்துக்காகவே பெருமளவில் உழைத்திருப்பர்கள் போல. கலை இயக்குநர் செ.க.முஜிபுர் ரஹ்மான் இற்கும் அவருக்குத் துணை போந்தவர்களுக்கும் மகா கனம் பண்ண வேண்டும்.

அது போலவே காட்சி ஒளிப்பதிவுக்கான நிறக்கலவை தொட்டு, ஒவ்வொரு நிகழ்தலுக்குமான பார்வைக் கோணங்கள் என்று திரைக்கதை எழுத்தை அப்படியே மொழி பெயர்த்திருக்கும் ஒளிப்பதிவு. திரை வண்ணம் கொடுத்த விநாயகம், காட்சி உறுதி கொடுத்த பிராசிஸ் சேவியர், ஒளிப்பதிவாளர் ரியாஸ் இந்த உழைப்பின் பெறுமதியைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

ஒரு மணி நேரம் 40 நிமிடம் தொடும் இந்தப் படத்தை எந்த விதமான அலுப்புத்தட்டலும் இல்லாது கோத்த விதத்தின் பெறுமானத்தை உதாரணப்படுத்த ஒரு சோறு பதமாகச் சொல்கிறேன் இதை
“யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் தமிழாராய்ச்சி மாநாட்டுக் குழு விடை பெறும் போது, சமதளத்தில் விரியும் தமிழாராய்ச்சி மாநாட்டு மேள தாள ஒலியும், நடனமும் தொடர் காட்சியின் வீரியத்தைப் பதிப்பிக்கிறது. படத்தொகுப்பாளர் சி.மு.இளங்கோவன்
இயக்குநரின் செயல் வடிவத்தின் ஆன்மாவாக இயங்கியிருக்கின்றார்.

தலைவர் பிரபாகரனின் இள வயதுத் தோற்றம் கொண்ட பாத்திரம், தந்தை செல்வா, பண்டாரநாயக்கா என்று நிஜங்களோடு ஓரளவு பொருந்திப் போன முகச் சாயல்கள். அது மட்டும் போதாதென்று இந்தப் படைப்பில் பயணித்த அனைவருமே நாடகத் தன்மை விலத்திய யதார்த்த நடிப்புக்காரர்களாகவே தொனிக்கிறார்கள். அவர்களுக்கான ஒலிப்பதிவு கச்சிதம்.

தெருக்கூத்து ராஜவேல், பெருமாள் ஆகியோரின் பாடலும், கதையாடலும் நெகிழ்வும், வீறாப்புமாகச் சிதறிப் பதிகின்றன.

பாடல்கள் ஒவ்வொரு முக்கிய திருப்பங்களிலும் கைலாகு கொடுத்து அழைத்துப் போகின்றன.

எங்கள் தமிழீழத் தேசியக் கவி புதுவை இரத்தினதுரை இதைப் பாத்திருந்தால் எவ்வளவு நெகிழ்ந்துருகியிருப்பார் என்னுமாற் போல அவரினதும், தமிழ்த் திரு திருக்குமரன், இயக்குநர் தி.கிட்டு ஆகியோரின் பாடல்கள் பதித்த இடங்கள்.

நீள் காட்சிகள் கொண்டு வரும் தாக்கத்தை ஒரு சில நிமிடப் பாடலே விதைக்கிறது.

“தமிழுக்கு அமுதென்று பேர்” என்று வரும் அந்த மாநாட்டுப் பாடலில் தான் என்னவொரு ஆர்ப்பரிப்பும், எழுச்சியும். இசையமைப்பாளர் அ.பிரவீன்குமார் மிகக் கச்சிதமான தேர்வு.

எந்தவித வெத்துவேட்டு சினிமாத்தன, நாயகத்தனம் இல்லை,

பேச்சு வழக்கு, உச்சரிப்பில் முக்கிய பாத்திரங்கள் சமரசமில்லால் இயங்குகின்ற விதத்தில் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள் இல்லையில்லை “வாழ்ந்திருக்கின்றார்கள்”.

“பயம் ஒன்று மட்டுமே அடிமைத்தனத்தை
இன்னொருவர் மனதில் ஆழமாய்ப் பதியச் செய்யும்”

அந்தப் புத்த பிக்கு சொல்லும் பேச்சு ஓருதாரணம் இந்தப் படத்தில் வசனப் பங்களிப்பின் நேர்த்தியும், கூர்மையும். இக்குறிப்பிட்ட வசனம் தானே பின்னால் நாம் கண்ட வரலாற்றின் போதனை?

ஈழத் தமிழர் பிரச்சனையைக் கையாண்ட ஈழப் படைப்பாளிகளின் நேரடிப் படங்கள் தவிர்ந்த படைப்புகள் இதுவரை

1. அதீத உணர்ச்சிப் போக்குக் கொடுத்து அடிப்படைக் கருத்தை வலுவிழக்க வைத்ததாக (காற்றுக்கென்ன வேலி),

2. குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததாகவும் (ஏராளம் படங்கள்),

3. இன ஒடுக்கலைத் திரிவுபடுத்திய புனைவுகளாகவும்,

4. புலம் பெயர் வியாபாரச் சரக்குக்கு ஊறுகாயாகவும் (இன்னும் ஏராளம்),

இருக்கும் சூழலில் ஈழப் பிரச்சனைக்கான கச்சிதமான ஊடகப் பரிமாணத்தின் விதைத் தமிழகத்தார் துணையோடு கொடுத்த படம் என்ற வகையில் “மேதமை” தான் தொடக்கப் புள்ளி.

கோடி கோடியாய்க் கொட்டவில்லை, அதீத உணர்ச்சிக் கொட்டல் இல்லை, ஆனால் பெரும் தாக்கம் கொடுக்கிறது இப்படம்,

தமிழாராய்ச்சி மாநாட்டில் கட்டவிழ்த்த ஆயுதப் படைகளின் அடக்குமுறைச் செய்தி பறையும் காட்சியில் தந்தை செல்வாவுக்குப் பின்னால் காந்தி படம் தொங்கிக் கொண்டிருக்கின்றது.

வன்முறை எம் மீது திணிக்கப்பட்டது என்பதைத் தலைவர் சொன்னதைத் தான் படமும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

“மேதகு” படைத்த இயக்குநர் தி.கிட்டு (எழுத்து & இயக்கம்) வழி சமைத்த தமிழீழத் திரைக்களம் உங்கள் பணி மிகவும் பெறுமதியானது, நேர்மையின் விதை இது.

வரலாற்று எனது வழிகாட்டி என்றார்
“மேதகு” வே.பிரபாகரன்

நம் தலைவரின் தொடக்க வரலாறின்
வழிகாட்டி நிற்கின்றது “மேதகு”

“மேதகு”திரைப்படத்தைக் காண
,
BSvalue app

android
https://play.google.com/store/apps/details?id=com.gridsandguides.blacksheepvalue

iOS
https://apps.apple.com/us/app/bs-value/id1537233387

இணையத் தளம் வழி

https://bsvalue.com/auth?fromActivate=false

#மேதகு
#Methagu_in_Bsvalue

கானா பிரபா

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net