உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் – நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்?: செ.கார்கி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் – நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்?: செ.கார்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் உக்ரைனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் உயிருக்குப் பயந்து வெளி நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றார்கள்.

இதுவரை உக்ரைன் தரப்பில் 352 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதே போல 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா இதுவரை உயிரிழப்பு தொடர்பாக எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஊடகங்கள் தொடர்ச்சியாக இந்தப் போரை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான போராக காட்டிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் உண்மையில் இந்தப் போர் ரஷ்யாவுக்கும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகளுக்குமான போராகும்.

போர் உக்ரைன் மண்ணில் நடந்தாலும் ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் ஆயுத உதவி, பொருளாதார உதவி போன்றவற்றுடன் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

அமெரிக்கா ஏற்கெனவே 600 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ள நிலையில், மேலும் 350 மில்லியன் டாலர் நிதியுதவி செய்திருக்கின்றது.

இவை தவிர கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், ஜப்பான், பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், ருமேனியா, இஸ்ரேல், நெதர்லாந்து, பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா, டென்மார்க் மற்றும் செக் குடியரசு நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளன.

உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார உதவிகளை செய்வதோடு அல்லாமல் ரஷ்யா மீது அமெரிக்கா, கனடா, பிரிட்டன்,ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ளன. அத்துடன் பெரும்பாலான சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் கட்டண முறையான ‘ஸ்விப்ட்’ அமைப்பில் இருந்தும் சில ரஷ்ய வங்கிகள் நீக்கப்பட்டு உள்ளன.

ஆனால் அமெரிக்க ஆதரவு ரஷ்ய எதிர்ப்பு ஊடகங்கள் தொடர்ச்சியாக ரஷ்யா இந்தப் போரை திட்டமிட்டு நடத்துவதாக தொடர்ந்து அவதூறு பரப்புகின்றன. அமெரிக்க இராணுவத்தாலும் உளவு அமைப்புகளாலும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்ற ஆவணங்களையே அவை செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

அவர்கள் தரும் ‘உண்மைச் செய்தி’ என்னவென்றால் சமாதானத்தை விரும்பும் அமெரிக்காவும், மற்ற நேட்டோ நாடுகளும் உக்ரைன் மீது அத்துமீறி படையெடுக்கும் ரஷ்யாவுக்கு புத்தி புகட்டிக்கொண்டு இருக்கின்றன என்பதுதான்.

ஆனால் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனைத் தூண்டிவிட்டு தனது காரியத்தை சாதித்துக் கொள்ள அமெரிக்காவும் நேட்டோவும் எப்போதுமே முன்தயாரிப்பு வேலைகளைச் செய்தே வந்துள்ளன. கடைசி எட்டு மாதத்தில் மட்டும் கிரீஸ் நாட்டில் இருக்கும் அதன் தளத்தில் 10,000 அமெரிக்கத் துருப்புகளை நிலை நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. பால்கன் மற்றும் கருங்கடல் பகுதிகளில் சண்டைக்கான தயாரிப்பாக ஒத்திகைப் பயிற்சியை நடத்தியிருக்கிறது. அத்துடன் கருங்கடலில் இதுவரை நடத்தியதிலேயே மிகப்பெரிய போர்ப் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

இன்று ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுப்பதை ஜனநாயகத்தை மீறிய செயலாகப் பார்க்கும் அமெரிக்காவும், நேட்டோவும் யூகோஸ்லாவியாவின் சுய நிர்ணய உரிமையை ஆதரித்ததில்லை. 1999 இல், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி கொசோவோ பிரிவினைக்கு ஆதரவாக 78 நாட்கள் தொடர்ந்து சேர்பியா மீது குண்டுவீச்சு நடத்தியது. இறுதியில் போதைமருந்துக் கூட்டத் தலைவர்களைக் கொண்ட ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுதந்திர கொசோவோ உருவாக்கப்பட்டது.

2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல், ஈராக் மீதான படையெடுப்பு, 2011 இல் லிபியா மீதான அமெரிக்கா-நேட்டோ தாக்குதல் போன்றவை சர்வதேச சட்டங்களை மீறியே நடத்தப்பட்டன. மாவோவின் மொழியில் சொன்னால்

“… உலக யுத்தம் நடக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவர்களாக நாம் இருக்க முடியாது. யுத்தத்தில் ஈடுபடாத ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானால்கூட, யுத்தத்துக்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது. ஏகாதிபத்தியம் போரிட விரும்பும்போது எந்த ஒப்பந்தமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படப் போவதில்லை…” (மாவோ தொகுப்பு நூல்கள் தொகுதி எட்டு -பக்கம் 527)

அப்படியான சூழ்நிலையில் ரஷ்யா உக்ரைன் பேரில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

இதற்கு முதலாளித்துவவாதிகளும் கம்யூனிஸ்ட்களும் பல்வேறுவிதமான தங்களின் ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடுகளை பதிவு செய்கின்றார்கள். மாவோ சொல்கின்றார்.

“….போர்கள் நீதியானவை எனவும் அநீதியானவை எனவும் இரு வகைகளாக பிரிக்கப்படுவதாக வரலாறு காட்டுகின்றது. முற்போக்கான போர்கள் அனைத்தும் நீதியானவையே. முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இடுகின்ற போர்கள் அனைத்தும் அநீதியானவையே. கம்யூனிஸ்ட்களாகிய நாம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இடுகின்ற நீதியற்ற அனைத்து போர்களையும் எதிர்க்கின்றோம். ஆனால் முற்போக்கான, நீதியான போர்களை எதிர்ப்பதில்லை….” (மாவோ தொகுப்பு நூல்கள் தொகுதி இரண்டு -பக்கம் 197).

அப்படி என்றால் இந்தப் போர் நீதியானதா, முற்போக்கானதா என்ற கேள்வி எழும். எந்த வகையிலும் இந்தப் போர் முற்போக்கானதோ நீதியானதோ கிடையாது. காரணம் இந்தப் போர் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து உக்ரைனில் ஒரு சோசலிச அரசை அமைக்க உக்ரைன் மக்களின் ஆதரவுடன் ரஷ்யா செய்யும் போரல்ல. காரணம் ரஷ்யா ஒரு சோசலிச நாடும் அல்ல.

இரண்டு முதலாளித்துவ நாடுகள் மேலாதிக்கப் போட்டியில் தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. உலக நாட்டாமை அமெரிக்காவும் அதன் அடிமை நேட்டோ நாடுகளும் உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யாவை வீழ்த்த திட்டமிடும் போது தன்னை காப்பாற்றிக் கொள்ள அதற்கு வேறு வழியே இல்லாத போது, இந்தப் போரை ரஷ்யா நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. காரணம் அமெரிக்க மற்றும் நேட்டோவிடம் இருந்து தன் மக்களையும் நாட்டையும் காக்க வேண்டிய பொறுப்பு ரஷ்யாவுக்கு உள்ளது.

ஆனால் இந்தப் போரில் எந்தவித ஏகாதிபத்திய எதிர்ப்போ, முதலாளித்துவ எதிர்ப்போ இல்லாததால்தான் இந்தப் போரை நாம் பிற்போக்கானது, அநீதியானது என்கின்றோம். காரணம் நாளை உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தாலும் ரஷ்யாவால் சுரண்டப்படும் ஒரு நாடாகத்தான் உக்ரைன் இருக்கும்.

அரசியல் அற்ற போர் எதிர்ப்பு என்பது வேடிக்கையானது. இரண்டு முதலாளித்துவ நாடுகள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளும் போது அதில் எந்தவிதமான ஏகாதிபத்திய எதிர்ப்போ, இரு நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் ஒருங்கிணைவோ இல்லாத போது பொத்தம் பொதுவாக போரை எப்படி எதிர்க்க முடியும்?.

தனிச்சொத்துடைமையும், முதலாளித்துவமும் இருக்கும் வரை உலகில் போர்கள் என்பது தவிர்க்க முடியாது. சொத்துடைமை என்பதே போர்களால்தான் வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

“…அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போராக இருக்கையில் போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் என கூறப்பட இயலும்” (மாவோ தொகுப்பு நூல்கள் தொகுதி இரண்டு பக்கம் 202)

இதுதான் எதார்த்தம். உக்ரைன் ரஷ்ய போர் என்பது முதலாளித்துவ போட்டிக்கான, ஏகாதிபத்தியப் போட்டிக்கான ரத்தம் சிந்தும் அரசியல்.

இது வரலாற்றில் தவிர்க்க முடியாத விதி. எந்த எந்த நாடுகள் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றதோ எந்த எந்த நாடுகள் வல்லரசுப் போட்டியில் உள்ளதோ அவை எல்லாம் தங்களுக்குள் அடித்துக் கொண்டும் வெட்டிக் கொண்டும்தான் சாகும்.

இந்தப் போரை உக்ரைன் நினைத்தால் தவிர்த்திருக்கலாம். நேட்டோ போன்ற கொலைகாரக் கூட்டணியில் இணைந்து உக்ரைனை ரஷ்யாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் அதன் முடிவு நிச்சயம் அநீதியானது. இந்தப் போர் ரஷ்யாவின் மீது அமெரிக்க மற்றும் அதன் நேட்டோ நாடுகளால் திணிக்கப்பட்ட போர்.

நாம் போரை நிறுத்து என ரஷ்யாவை பார்த்துச் சொல்லும் அதே வேளையில் பாசிச சக்திகளுடன் சேர்ந்து ரஷ்யாவை அழிக்க வேலை பார்க்கும் உக்ரைனையும் அதற்கு உதவியாக இருக்கும் போர்வெறியர்களையும் எதிர்க்க வேண்டும். ஒரு பக்கச் சார்பு என்பது இங்கே எடுபடாத வெற்று அரசியல்.

– செ.கார்கி

Copyright © 6756 Mukadu · All rights reserved · designed by Speed IT net