அமைதி வழியிலான எதிர்ப்பை மதிக்குமாறு அரசுக்கு அழுத்தம் ஜ. நாவும் தூதர்களும் அறிக்கை.

அமைதி வழியிலான எதிர்ப்பை மதிக்குமாறு அரசுக்கு அழுத்தம் ஜ. நாவும் தூதர்களும் அறிக்கை

சிறிலங்காவில் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சிவில் சமூக இயக்கங்களால் நாளை சனிக்கிழமை அரசுக்கு எதிராகப் பெரும் பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக அரசு தலைநகரில் இன்றிரவு ஒன்பது மணி முதல் பொலீஸ் ஊரடங்கை அறிவித்திருக்கிறது.

கொழும்பு வடக்கு (Colombo North,) தெற்கு மற்றும் மத்தி (South, and Central) நீர்கொழும்பு (Negombo,) கல்கிசை(Mount Lavinia,) நுஹெகொட (Nugegoda,) மற்றும் களனி (Keleniya) பிரதேசங்களில் ஊரடங்கு அமுலுக்கு வருவதாக பொலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதேசமயம் கொழும்பில் தொலைபேசி சேவைகள், சமூக ஊடகங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய தகவல்களை நாட்டின் தொலைத் தொடர்புகளை ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு மறுத்துள்ளது.

நாடு மீளமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் பதவியில் நீடிக்கின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவையும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தையும் வெளியேறுமாறு கோரியே நாளைய ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்படவுள்ளன.

நாட்டில் சர்வ கட்சி அரசு ஒன்றை நிறுவப் பௌத்த மகாசங்கங்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றன. அதனால் நாளைய ஆர்ப்பாட்டத்துக்கு அவர்களது ஒத்துழைப்பும் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் சகல பகுதி மக்களையும் தலைநகரில் ஒன்று திரட்டிப் பெரிய அளவிலான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்குடன் “முழு நாடும் கொழும்புக்கு” என்ற பெயரிலான சமூக ஊடகப் பிரசாரம் மூலமாக நாளைய ஆர்ப்பாட்டத்துக்கு கடந்த சில நாட்களாக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் நாளை நடக்கவிருக்கின்ற மக்கள் எதிர்ப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் உட்பட வெளிநாட்டு ராஜதந்திரிகள் அரச எதிர்ப்பு நிகழ்வுகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அமைதியான வழி முறைகளில் மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளிப்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என்று அரசைக்கோரும் ஊடகப் பதிவுகளை அவர்கள் வெளியிட்டுவரு கின்றனர். ஜ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவரும் இதே போன்ற கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை அடுத்து வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எரிபொருளுக்காக அடிபடுகின்ற மக்கள் கூட்டத்தினர் பொலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் மோதக் கூடிய நிலைவரங்கள் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளன. சமூக மட்டங்களில் அமைதியின்மை அதிகரித்து வருவதால் மக்களின் சீற்றம் நாளைய ஆர்ப்பாட்டங்களில் பெரிய அளவில் வெளிக்கிளம்பலாம் என்று அரசு அஞ்சுகிறது. தலைநகரில் பொலீஸாருடன் மேலதிகமாக இராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குமாரதாஸன் பாரீஸ்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net