51 வது இலக்கியச் சந்திப்பின் இரண்டாம் நாளில் தற்குறிகளால் கேட்கப்பட்டவையும்,கேட்கப்பட இருந்தவையும்!
ஈழப்போரானது முனைப்புப் பெற்ற 1980 களில் புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த வாசிப்புத் தேடலும் இலக்கிய ஆர்வமும் மிக்க ஈழவிடுதலைப் போராட்டத்தின் மையவோட்டத்திலிருந்து விலகியும் ஒதுங்கியும் போன ஈழத்தமிழ் இளைஞர்கள் சிலரால் தமது பேச்சுவெளிப்பாட்டிற்கென உருவாக்கிய ஓர் வெளியானது 1988 ஆம் ஆண்டு இலக்கியச் சந்திப்பாக ஏற்றம் கண்டது. இன்று அதன் ஆரம்ப கர்த்தாக்களுள் அநேகர் இவர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் வெளியேறிவிட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டுவிட்டனர். இவ்விலக்கியச் சந்திப்பானது அவ்வப் பொழுதுகளில் ஈழத்தமிழ் மக்கள் பற்றி அக்கறை மிகுந்ததாய் பெயரளவிற் காட்டிக் கொண்டாலும், ஈழத்தமிழ்த்தேசிய இனத்தின் நியாயமான அரசியல் வேட்கையினை மறுதலித்தும்,அதனுள்ளிருக்கும் உள்ளக முரண்பாடுகளினை முதன்மைப்படுத்திக் கூர்மைப்படுத்தி தமிழ்த்தேசிய இனமென்பதனை பல்வேறு கூறுகளாக்கிப் பிளந்தழிக்கும் கைங்கர்யத்தில் முனைப்புக்காட்டியிருந்தது. இங்ஙனமிருந்துங்கூட, இதற்கு முன்னைய ஆண்டுகளில் இலக்கியச் சந்திப்புக்களை தலைமையேற்று நடத்தியோரும், கலந்து கொண்டோரும் இன்றைய இலக்கியச் சந்திப்பு; அதன் நோக்கு; இன்றைய ஏற்பாட்டாளர்கள்; ஒழுங்கமைப்பாளர் போன்றோரின் பின்னணி என்பனவீறாகக் கடும் எதிர்வினையாற்றியுள்ளனர்.
ஐம்பத்தியோராவது இலக்கியச் சந்திப்பானது கடந்த 2024 மார்ச்சு மாதம் 30-31 ஆம் திகதிகளில் பரீசில் நடைபெற்றிருந்தவேளையில் அதன் இரண்டாவதும் இறுதி நாளுமான 31.03.2024 அன்று மத்தியானத்தின் பின்னரான வேளையில் அங்கே இடம்பெற்றிருந்த கடும் கருத்துமுரண்பாட்டினையோட்டியெழுந்த வாதப்பிரதிவாதங்களைக் களையும் நோக்கில் கட்டுரையினை எழுதவேண்டியேற்பட்டுள்ளது.
இக்கட்டுரையானது, நாம் நிகழ்ச்சிக்குச் சென்ற 13:30 மணியிலிருந்து நிகழ்வு முடியும்வரையில் நிகழ்ந்த-நாம் சம்பந்தப்பட்டிருந்த- விடயங்களை மட்டுமே குறிப்பிடுகின்றோம்.
பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையரசுடன் அதன் செயற்பாடுகளுக்கு பல்வேறுவகையிலும் பின்நின்று செயற்படுவோரே நேரடியாயும், மறைமுகமாயும் இவ்விலக்கியச் சந்திப்பினை ஒழுங்குசெய்து நடத்தியிருந்த பொழுதிலும், இலக்கியச் சந்திப்பிற்கு -அங்கே- நடைபெறும் நிகழ்வுகளை பார்ப்பதற்காகவேயன்றி வன்மமோ; வெறுப்போ; பகையுணர்வோ கொண்டு குழப்பும் நோக்கில் நாம் சென்றிருக்கவில்லை. அங்கே கருத்துரைகளை வழங்கியோர் கொடுத்த கருத்துகள் , தகவல்கள் மீது எமக்கேற்பட்ட ஐயப்பாடு, சந்தேகம் குறித்தே வினாக்களையெழுப்பி பதில் பெறவிழைந்தோம்!
எனினும், அவர்கள் தமது கடப்பாட்டினை மறந்து கும்பல் மனோநிலையில் எம்மை அணுகினர்.
நிர்மலா இராகவன் , சோபாசக்தி போன்றோர் கார்ள் மார்க்ஸை பற்றிக் குறிப்பிட்ட அறிவீனத்தனம் மிக்க – தாம் புரிந்துவரும் அயோக்கியத்தனங்களிலிருந்து தம்மைப் பிணையெடுக்கும் வகையிற் கூறிய- கருத்துக்களும், “போரும் ஏகாதிபத்தியமும்” என்ற தலைப்பில் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் பற்றிய கருத்துக்களை முன்வைக்கையில் இஸ்ரேலின் சியோனிச அரசிற்கிணையாக ஈழத்தில் சிங்கள பௌத்தபேரினவத அரசு இன்றுவரை புரிந்துவரும் இனவழிப்பினை மறந்தும் கூடத் தொட்டுப்பார்க்காது சாதுரியமாகத் தவிர்த்த நிர்மலா , கலையரசன் போன்றோரின் மழுப்பல் நிறைந்த உரைகளும், இவர்கள் தம்மை யாரென அடையாளப்படுத்தும் செயலுக்கு எதிர்மறையாகவே இருந்தது.
புகலிட வாழ்வின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த டெலோன் மாதவன் என்ற ஈழத்தமிழ் இளைஞர் “தமிழ் இனப்புல இயக்கவியல்”
என்ற சட்டகத்தின் கீழ் கருத்துரைக்க வந்திருந்தார். 2002-07 காலத்தில் ஈழத்திற்குச் சென்று JAFFNA AND THE CONFLICT
INTER-COMMUNITY IN SRI LANKA எனும் தலைப்பில் தான் மேற்கொண்டிருந்த ஆய்வு பற்றிப் பேச ஆரம்பித்தார். அவர் தனது ஆய்வுப்பணி பற்றி பல விடயங்களைத் தெளிவுபடுத்தவேண்டியிருந்தது. எனினும், அவ்வாறால்லாது நிகழ்வில் அவருடன் இருந்தோர் துணையுடன் அவற்றினைத் தாண்டிக் கடந்துவிட்டார்.
அவர் கூறிய விடயங்களை முன்வைத்து நாம் அங்கே கேட்டிருந்த, கேட்க முனைந்த வினாக்களை இங்கே கேட்கின்றோம். 2002-2007 காலப்பகுதியென்பது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இக்காலப்பகுதியின் முன்னரைக்காலம் வரையில் சமாதானம் நிலவியிருந்த காலப்பகுதி. இருந்தும்; மக்கள் தம் நாளாந்த வாழ்வில் ஓர் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியாதிருந்த காலங்களவை. இக்காலத்தில் இவர் இப்படியானதோர் ஆய்வினை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் என்ன? இவர் ஆய்வினை மேற்கொள்வதற்காக எடுத்துக்கொண்ட பிரதேசமான யாழ்ப்பாணம் மாநகரசபை பிரதேசத்துள்;இதன் தென்கிழக்குப் பிரதேசமானது யுத்தத்தால் மக்கள் இடம்பெயர்ந்து முழுமையாக மீள்குடியேற்றம் கண்டிருக்கவில்லையென்பதுடன், மீண்டும் 2005/2006 இல் ஏற்பட்ட யுத்த சூழல் யாழ்குடாவிலிருந்து மக்களை வன்னி நோக்கி இடம்பெயரவைத்தது. இவ்வாறான சூழலில் எங்ஙனம் சீரியதோர் ஆய்வினை இவர் மேற்கொண்டிருக்கமுடியும்?
ஆய்வுக்காலத்தில் இவர் சந்தித்துப் பேசியதாக கூறியோர் கொடுத்த தகவல் மூலங்களை ஆய்வியல் நெறிமுறைகளினூடு நோக்கிச் சரியான தகவல்களைப் பெற்றிருந்தாரா? ஆய்வியல் நெறிமுறைகளை இவர் சரிவரக் கடைப்பிடித்திருந்தாரா? இவற்றிற்கான விடையினை டெலோன் மாதவனிடத்திலிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும், டெலோன் மாதவனின் ஆய்வுத்தரத்தினை பரீஸ் லா சப்பெல் பகுதி ஈழத்தமிழர்களின் வர்த்தக மையாமானது எப்படியென அவர்கொடுத்திருந்த விளக்கம் வெளிப்படுத்தியிருக்கிறது. Gare Du Nord தொடரூந்துப் போக்குவரத்து நிலையத்தினை மையாமாக வைத்து புறநகர்களில் குடியிருந்த மக்கள் வந்து செல்ல ஏதுவாய் லா சப்பல் பகுதியானது ஈழத்தமிழர்களின் வர்த்தக மையமாகியதென்ற விபரங்கூடத் தெரியாது, முதலில் பரீஸ் பத்தாம், பதினெட்டாம் வட்டாரப் பகுதியில் தமிழர்கள் குடியேறியபின்பே அப்பகுதியானது வர்த்தக மையமாகியதெனக்கூறி லா சப்பெல் ஈழத்தமிழரின் வர்த்தக மையமாகுவதற்கு முன்பே குறைந்த வசதிகளுடன் ஓர் அரைகுறை நிலையில் வர்த்தக மையமாக விளங்கிய Marcadet – Poissonniers இன் வகிபாகத்தினை தனது ஆய்வினூடு அறியத்தவறிவிட்டார்.
அடுத்து பிரான்ஸ் பரீசில் தலித் மேம்பாட்டு முன்னணி என்றோர் அமைப்பின் தலைவராக இருக்கும் தேவதாசன் என்பவர் “கள அனுபவம்; ஈழத்தில் சாதியம்” என்ற தொனியில் ஈழத்திற்கு – யாழ்ப்பாணம் – சென்று அங்கே அவர் நேரடியாகக் கண்டதாக சில விடயங்களைக் கூறியிருந்தார்!
அவர்கூறியிருந்த விடயங்களுள் அநேகமானவை சாதியமுரண்பாட்டுடன் சம்பந்தப்பட்டிராத தனிநபர், ஒரு சமூகக் குழுவினர் சம்பந்தப்பட்டிருந்த விடயங்களே. அவ்வாறனவற்றை சாதிய முரண்பாடாக்கி முடிச்சுப்போடுவதில் தேவதாசன் மிகவும் முனைப்புக்காட்டியிருந்தார். சாதிச் சங்கங்கள், ஏழாலையில் ஒரு பாடசாலையில் தண்ணீர்த் தாங்கியினுள் நஞ்சூட்டியமை, சிறுப்பிட்டி- புத்தூர் கலைமதி கிராமத்தவரிடையே ஏற்பட்ட சுடலைப் பிரச்சினை, அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் அக்கோயிலின் உரிமையாளர் சிங்கள இராணுவத்தினரைக் கூட்டிவந்து தேரிழுத்தமை, யாழில் ஒரு கோயிலைச் சுற்றி பதினைந்தடி உயரத்தில் மதிற்சுவரொழுப்பியமை என விடயங்களை மிகைப்படுத்திக் கூறி ஈழத்தமிழ்ச் சமூகத்துள் ஐம்பது, அறுபதாண்டுகளுக்கு முற்பட்டதானதோர் சாதிய முரண்பாடு 2009 மே க்குப் பின்னரான காலத்தில் ஏற்பட்டுவிட்டதாற் போன்றதோர் தோற்றப்பாட்டினை ஏற்படுத்த முயன்றிருந்தார்.
அவரின் இந்தக் கருத்துக்களுக்கு நாம் முன்வைத்த விடயங்களாக;
• சிறுப்பிட்டி மயானத்தைச் சுற்றியிருந்த காணிகளை மிகமலிவான விலையிற் கொள்வனவு செய்திருந்த செல்வம் கதிர்காமநாதன் என்றழைக்கப்படும் செல்வம் – தற்பொழுது புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிச கட்சியில் முக்கிய பொறுப்பிலுள்ளார்- அக்காணிகளைத் தனது ஊரவர்க்கு விலைவைத்து விற்றவேளையில், காணிகள் சுடலையை அண்டியிருந்தமையால் அக்காணிகளை வாங்கியோர் இதுபற்றிக் கேட்டபொழுதில், “சுடலை சுற்றி கவலைவேண்டாம், நான் அதனை எடுத்துவிடுவேன்” எனக்கூறியே விற்றிருந்தார். அப்பகுதியின் குடியிருப்பாளர் ஒரே சமூகத்தினராயிருந்தபோதிலும் அச் சுடலையை எடுக்க அவர்களுள் ஒருபகுதியினர் மறுத்துவந்தனர். அப்பகுதிக் காணிகளை விற்ற செல்வம் அவர்களுடன் சமரசம் செய்ய முயன்றும் முடியாமற்போனதன் விளைவாக அதனையோர் சாதிய முரண்பாட்டின் வெடிப்பாக பிம்பப்படுத்தி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டமென பு.ஜ.மா.லெ. கட்சியினருடன் இணைந்து செய்திருந்தார். இம்முரண்பாடுகளால், ஒரே சமூகத்துள், ஒருவரையொருவர் தாக்கியும் மதிற் சுவர்களையுடைத்தும் ,வாழைத்தோப்புகளை அழித்தும் கொண்டனர்.
• அங்ஙனமே, அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோயிலின் உரிமை சம்பந்தமான பிரச்சினை இரத்த உரித்துடைய இருவர்க்கிடையே வழக்காகி நீதிமன்றில் நடைபெற்றுவந்தது. 2014 ஆம் ஆண்டளவில் தீர்ப்பானது இலண்டனில் இருப்பவருக்கு சார்பாகத் தீர்ந்தமையினால் தனது அரசியலதிகாரப் பலத்தினைக் காட்டுவதற்காக கொழும்பின் பெரும் அரசியற் செல்வாக்கின் ஆதரவுடன் கோயிலின் தேர்த்திருவிழாவன்று சிங்கள இராணுவத்தினரைக் கூட்டிவந்து தேரிழுத்திருந்தார். இதன்பொழுது, இக்கோயிலினைச் சுற்றியிருக்கும் அனைத்துச் சமூகத்தினரும் பார்த்திருக்க சிங்களப்படையினரே தேரிழுத்தனர்.
• அடுத்ததாய், யாழில் இன்னொரு கோயிலைச் சுற்றி சுமார் பதினைந்தடி உயரத்தில் மதிற் சுவரொழுப்பியதானதோர் சர்ச்சைக்குரிய கதையாடலை தேவதாசன் முன்வைக்கையில்; பாஸ்கரன் என்பவர் தேவதாசன் குறிப்பிட்டிருந்த மேற்படி இடத்திற்குச் சென்று அங்கிருக்கும் மக்களைச் சந்தித்து விசாரித்தும், மதிற்சுவரினைப் பார்வையிட்டு வந்திருந்தார். அவரின் நேரடியனுபவத்தின்படி அங்கே அப்படியானதோர் முரண்பாடு நடந்திருக்கவில்லையென்பது தெரியவந்துடன்; கோயிலைச் சுற்றியெழுப்பியிருந்த மதிற்சுவரானது மேடு, பள்ளம்நிறைந்த இடத்திற் எழுப்பப்பட்டிருந்தமையும், தேவதாசன் என்பவர் சரிவர ஆராயாமல், மதிற்சுவரின் ஒருபக்கப் பகுதியை மட்டுமே பார்த்துவிட்டு வந்து,அதனைப் பிரமாண்டப்படுத்த முயன்றாரென்பதும் அப்பட்டமாகியது.
• அங்கு உரையாடலில் ஈடுபட்டிருந்தோரில் அநேகர் 60-70 களில் நடைபெற்றிருந்த சாதியவொடுக்குமுறையினை உணர்ச்சி ததும்பக் கூறிக்கொண்டிருந்தனரே தவிர அதற்குப் பின்னரான ஐம்பது அறுபதாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களினை ஆழ்ந்துற்றுணர்ந்து, புரிந்துகொண்ட தன்மையினை அவர்களிடத்தே காணமுடியவில்லை.
உண்மையில் ஈழத்திற் சாதியமென்பது முற்றிலும் ஒழிக்கப்படவில்லையென்பது வெள்ளிடைமலையே! சுமர் அறுபதாண்டுகளுக்கு முந்தைய கொதிநிலையிலோ, அதே வீச்சுடனோ இன்றில்லாது, ஓர் நொதிநிலையினைக் கண்டுள்ளதென்பதனை ஏற்றாகவேண்டும். இந்நிலைக்காக போராடியிருந்த முற்போக்கு எண்ணங்கொண்ட இளைஞர்கள், இடதுசாரிகள், விடுதலைப்போராளிகளுக்கு ஈழச்சமூகத்தின்பால் அக்கறை கொண்டிருப்போர் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளனர்.
இன்று சாதியொழிப்புக்கெனப் புறப்பட்டிருக்கும் பலரின் பின்புலம், நோக்கு, செயற்பாடு என்பவற்றை நோக்குகையில் இவர்கள் சாதியொழிப்பைவிட முரண்பாடுகளைக் கூர்மையாக்கி சாதியமோதல்களைத் துண்டும் வகையிற் செயற்பட்டு வருகின்றரென்பது புரியும்.
ஈழத்தமிழ்த் தேசிய இனமாகிய நாம், ஓர் இனவழிப்பினை நிலம், மொழி, பொருளாதாரம், கலை,பண்பாடு, வரலாறு, கல்வி, சிந்தனையெனப் பல்வேறு தளங்களினூடாக எதிர்கொண்டு வருகின்றோம். இந்நிலையில், எம்மை நோக்கி வைக்கப்படும், நகர்த்தப்படும் எதனையும் நாம் -கடந்தகாலப் படிப்பினைகளினூடு- சந்தேகத்துடனும், ஐயப்பாட்டுடனுமே நோக்கவேண்டிய தவிர்க்கவியலா அணுகுமுறையினை எல்லாவற்றிலும் முன்வைக்கவேண்டியுள்ளது.
ஏகாதிபத்தியமும் அதன் நிதி நிறுவனங்களும் இலங்கை போன்ற மூன்றாம் உலகநாடுகளில் , அங்கிருக்கும் அதிகரவர்க்கம், ஒடுக்குமுறையாளருடன் கைகோர்த்து தம் நலன்சார்ந்து செய்துவரும் அரசியலானது, அத்தேசங்களில் எழுச்சிபெறும் தேசியவினங்களை பிரதேசம், மதம், சாதி, பால், எனப் பிரித்து மீண்டும் ஒன்றுசேரமுடியாது உதிரிகளாய்ச் சிதைந்தழிந்து போகுமளவிற்கு உணர்வுபூர்வமான விடயங்களை கூர்மைப்படுத்திப் பிளவுபடுத்தி அடையாள அரசியலை நோக்கித்
தள்ளுகின்றனர்.
இதற்காய் அச்சமூகங்களுள் பலதளங்களுள்ளும் தமக்கானோரை தேர்ந்தெடுத்தும், உருவாக்கியும் நிதிமூலங்களையும், இன்னபிற பலதையும் அவர்களுக்கு வழங்கி அவர்கள் மூலம் தமது திட்டம்,நோக்கு,கருத்தியல் என்பவற்றை ஆழவிதைக்கின்றனர். இத்தகையோரும் தாம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றோம் என்பதனை அறிந்தும், அறியாதோராயும் இருந்து – அவ்வச் சமூகங்களுள்ளிருந்து அதிகர, ஒடுக்குமுறையாளரின் நலன்களை நிறைவேற்றுவோர்- தமக்கென்றோர் இடத்தினையடையவும், அதிகாரத்தொட்டிலுட் புரளும் வேட்கைமிக்கோராகித் தம் மக்களை பணயம் வைக்கத் துணிகின்றனர். 2009 மே வரை தம்மைத் ஓர் தேசிய இனமாக கருதிவந்த ஈழத்தமிழருள் ஒரு சாரர் இன்று, சாதி,மதம், பால்,பிரதேசமெனப் பேசத் தலைப்படுவது இதன் அறிகுறியே!
இத்தகைய பாரிய ஆபத்தினை எதிர்கொண்டு நிறுத்துவதற்கேதுவாக தர்க்க ரீதியாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ ஒருக்கமைந்ததோர் கட்டமைப்பொன்று இல்லாவிடின் இது கொண்டுவரும் பாரிய அழிவினைத் தடுக்கமுடியாமற் போய்விடும்.
மேற்படியான விடயங்களை நாம் பேசமுயல்கையில், சமத்துவம், சனநாயகம், கருத்துச் சுதந்திரத்திற்காக சளைக்காது குரல் கொடுப்போரெனத் தம்மைத் தாமே பெருமைப்பட்டுக் கொள்ளும் இவர்கள் எம் கருத்தினை தெளிவாக முன்வைக்க விடாமல் கும்பல் மனோநிலையிற் கூடிச் சத்தமிட்டுத் தடுத்து நிறுத்தியதோடல்லாமல், நம்மைக் குழப்பவாதிகளாயும், சமூக சிந்தனையற்ற சாதிய மனோவியாதி கொண்டோராயும் , தற்குறிகளாயும், ஒன்றும் தெரியாதோராயும் சித்தரித்து அங்கே நடைபெற்றிருந்த விடயங்களை தமக்கேற்றாற்போற் திரிபுபடுத்தி இணையத்தளத்தில் அவதூறுக் கட்டுரை வரையுமளவிற்குப் போயுள்ளனர்.