“நம் திருமணக் கொண்டாட்டங்களில் நம்மையா பார்க்கிறோம்?”
ப. பார்தீ
11-07-2025
தமிழும் தமிழ்சார்ந்த ஆர்வமுடன் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நண்பர் புகைப்படக் கலைஞர். அவர் ஒருநாள் எனக்கு ஒரு அழைப்பை எடுத்திருந்தார். தமிழ் வீடொன்றில் “மெஹந்தி” நிகழ்வை படம் எடுக்கப் போவதாக கூறினார்.
நான் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன்:
இது தமிழர் கலாசாரமா? பண்பாடா?
அவர்: இவை இரண்டுமே இல்லை, இது வடஇந்திய பண்பாட்டு செருகல். ஆனால் இப்போது குறிப்பாக ஈழத் தமிழர்கள்மத்தியில் பரவலாக பரவி வருகின்றது.
அப்போது நான் அவரிடம் கேட்கிறேன்:
நீங்கள் ஒரு தமிழராக இதைக் காட்சிப்படுத்தச் சொல்வது அறமில்லைதானே?
என்று.அவர் இதைத் தன் தொழிலாகவும், “நான் போகவில்லை என்றால் இன்னொருவர் போய்விடுவார்” என்று தனது நிலைப்பாட்டை எனக்கு தெளிவுபடக் கூறினார்.
ஆனால் என் மனமோ,
வடஹிந்திய பண்பாட்டு செருகல்கள் தமிழர்கள்மீது — அதுவும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்மீது — ஹிந்துத்துவ மதவாத அடிப்படையில் ஒரு மெல்லிய பண்பாட்டு அழிப்பைச் செய்துகொண்டிருக்கின்றன என்பதைத்தான் உணர்ந்தது.இது தொடர்பாகத் தேடினால், பணம், புகழ், வர்த்தக அடிப்படையில் தமிழர் பண்பாடு சார்ந்த புரிதலில்லாத பண்பாட்டு மலகீனப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே நாமிருக்கின்றோமென்பது வேதனைக்குறிய விடயம்.இவை பற்றி தனிமனித விருப்ப/வெறுப்புபற்றோ அல்ல; பண்பாட்டு மீட்சிக்காக உழைக்கவேண்டிய ஒரு மக்கள்கூட்டமாகவே இருக்கின்றோமென்பது வேதனைக்குறிய விடயம்.நாமா இந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தை செய்தோம் என்பதுதான் ஆச்சரியமும்கூட – அதுவும் தமிழ்தேசியம் என்ற ஒருமைப்பாட்டு சொற்பத்தையைப் பாவித்து, தமிழும் தமிழ்பண்பாடுகளும் புரிந்து கொள்ளாத வாழ்க்கை நிலை…
திருமண மரபு என்பது ஒவ்வொரு இனக்குழுமமும் காலவோட்டத்தில் சிறு மாற்றங்களைச் செய்தாலும், தமது பாரம்பரியத்தை தொடர்ச்சியாகவே பின்பற்றிவருகின்றது. அதற்கு தமிழர் நாமும் விதிவிலக்கல்ல.தமிழர் திருமணப் பண்பாடுகள் பூர்வீகத்தில் மதஅடிப்படைவாத சடங்குகளைப் பின்பற்றாது, மனுட அறக்கோட்பாட்டில் நிகழ்ந்த ஒன்று. ஆனால் இன்று அவை மருவமருவி பலதரப்பட்ட சடங்குகளால் கட்டமைக்கப்பட்டுவிட்டது.ஆனாலும் தமிழ் திருமணக் கொண்டாட்டங்கள் எங்கள் இசை, உணவு, குடும்ப ஒற்றுமை மற்றும் பண்பாட்டு அடையாளங்களால் நிரம்பியுள்ளது. அது எங்கள் பெருமையும் அடையாளமும்கூட.
ஆனால் சமீப காலங்களில், வடஹி்ந்திய கலாச்சாரங்களில் இருந்து வந்த “மெஹந்தி விழா” தமிழர் திருமணங்களில் ஒரு முக்கிய நிகழ்வாகவே கையாளப்படத் தொடங்கியுள்ளது.
இது தமிழர் பண்பாட்டில் அக்கறையுள்ள ஒவ்வொரு மனங்களிலும் கேள்வியை எழுப்பி வருகிறது என்று ஏற்படுத்துகிறது:
இது ஒரு கலாசார உள்வாங்கலா? அல்லது தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மறுகவைக்கும் ஒத்திசைவை கொண்ட கலாசார அழிப்பா?
“மெஹந்தி” என்பது முதன்மையாக வடஇந்தியா, பாகிஸ்தான், மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் கலாசாரங்களில் தோன்றியதொரு விழா நிகழ்வாகும். இதில் மருதாணி இலைகள் அரைத்துத் தோலில் கலைவடிவங்களாக வடிவமைக்கப்படுகிறது.இது பெரும்பாலும் திருமணத்திற்கு முன் மணமகளின் நல்வாழ்க்கைக்காக, கணவனின் பெயரை மருதாணியில் ஒளிந்து எழுதும் சடங்காக ஆரம்ப காலங்களில் நிகழ்ந்துள்ளது.
பெண்கள் சந்திக்கும் மகிழ்ச்சி மையமான நிகழ்வாக நடக்கிறது.தமிழ் மரபியலில் அல்லது சங்க இலக்கியங்களில், திருமணச் சூழலில் “மருதாணி விழா” என்ற பெயரில் ஒரு நிகழ்வும் கிடையாது.மருதாணி இலைகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தாலும், மருதாணி இயற்கையாக உடலை குளிர்பதப்படுத்தும் மூலிகை.வியர்வை, தலைவலி, வெப்பம், தோல் நோய்கள் போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்துவர்.பெண்கள் அழகுப்பராமரிப்பு ஒன்றாக முக்கியமான கலை நிகழ்வாக அல்லாமல், அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டதுதான்.இதை 1980 காலப்பகுதிக்கு பிறகு பிறந்த நாங்களும் கண்ணூடாகப் பார்த்த நடமுறைவிடயுமும் கூட.
1990களுக்குப் பிறகு உலகமயமாக்கல் என்று உலகம் உள்ளங்கைபோல் சுறுங்குகிறது.
நகரமயமாக்கல்மூலம் திருமண நிகழ்வுகளை ஒட்டி பெரும் இலாபமீட்டக்கூடிய புதிய சந்தை திறக்கின்றது.அது எங்கள் பண்பாடுகளை நவீனமயப்படுத்திப் பரவச்செய்வதைவிடுத்து, புதிய பண்பாட்டு இறக்குமதிகளை செய்கின்றது.
அதனூக்கிகளான தமிழ் சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள், மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் “மெஹந்தி விழா” தமிழர்களுக்கும்
“திருமணத்திற்கு கட்டாயமாய் வேண்டிய நிகழ்வாக” காட்டப்பட்டு வருகின்றது.
இதில் முக்கிய பங்களிப்பு:வடஹிந்திய பாலிவுட் கலாசாரம்நகர்ப்புற உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கைமுறைடிக்டொக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகத்தளங்களில் நிகழ்வுப் போட்டி மனநிலைகள்இதனால், தமிழ் பண்பாட்டு புரிதலில்லாத “மெஹந்தி விழா” இன்று மணமகளின் சிறப்புநாள் பரிணமித்து,
புகைப்படக் கலைஞர்கள், நடனம், DJ கலந்த பண்பாட்டை அழித்து நாகரிகக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
“மெஹந்தி விழா” என்பது தமிழர் கலாச்சார மரபில் இல்லாத ஒன்று. ஆனால் இன்று, அது தமிழர் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது.அழகு நிகழ்வாக, புதுமை உணர்வாக, மணமகளின் தனிப்பட்ட தருணமாக இருந்தாலும்,
மாற்றத்தை ஒவ்வொன்றாக எதிர்த்தால்தான் மரபைக் காக்கிறோம் என்பதில்லை.
ஆனால் எந்த மாற்றம் என்னை விட்டுப் பிறந்தது? எது என்னுள் இருந்து எழுகிறது? என்பதற்கான உணர்வும் விழிப்பும் இல்லாமல் ஏற்கும் ஒவ்வொரு கடன் கலாசாரம் (borrowed culture),மென்மையான அடையாள இன அழிப்பை ஏற்படுத்தும்.ஒரு இன விடுதலைக்காக போராடும் நாம், எம்மையே அழிக்கலாமா?
மணவிழா என்பது யாரும் பார்ப்பதற்கான நிகழ்வல்ல.வருமான ஏற்றத் தாழ்வுகளை முன்னிறுத்திக் கொண்டாட்டங்களை ஒழுங்குசெய்யும் நிகழ்வுமல்ல.அது ஒவ்வொரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு இனத்தின், ஒரு மொழியின் வாழ்வின் சரம்.அதில் நம்முடைய இசை, நம் உணவு, நம் மண் வாசனை, நம் உறவுத் தோழமை, நம் பண்டைய மரபு ஒவ்வொன்றாகவே ஒளிரவேண்டும்.
மற்றவர்களிடம் பழக நம் வழியை மாற்றத் தேவையில்லை; நம் வழியையே காலத்திற்கேற்ப அழகு செய்யலாம்.
எங்கள் பூர்வீகத்தை சிறப்பாக்கி தொடர்ந்து வளர்த்துக்கொள்ளலாம்.
மெஹந்தி விழா – தமிழர்கள் தங்களை அறியாது தங்கள் கலாச்சாரத்தில் வேறு ஒரு இனத்தின் அடையாளங்களை உட்புகுத்தி,
எமது பண்பாட்டைத் திரிவுபடுத்தும் அந்த நிகழ்வின் உண்மைதன்மையை சிதைக்கும் அறிவுப்போதாமை.அது அழகாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் நுழையும் போது, நம்மை மறந்து அவர்களை ஆடம்பரமாக நகலெடுப்பது போல இருக்கக்கூடாது.
புதிதைக் காண விழித்திருப்பது அழகு —
ஆனால், நம் பழமையை அறியாது மறக்கும் தூக்கத்தில் விழாதிருக்க வேண்டும்.
அதற்கு நாம் யார் என்பதைக் நம்மால் அறிந்திருக்க வேண்டும்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”