“பாட்டிய பாணியில் பிறந்த தலைவர்: வாசுகனின் நினைவியல் கலைநடைமொழி”
ப.பார்தீ
12-07-2025
முள்ளிவாய்களால் கஞ்சிக்காய் நின்றோரின் நினைவுணர்வை கலையாக்கி கஞ்சிப்பாடல் வந்ததுபோல் கலையின் மறுவடிவில் காட்சியாக்கி உயிர்பேற்றி மே 18 காலப்பகுதியில் ஓவியர் வாசுகனின் தலைவர் என்ற கலைப்படைப்பை “எஸ்பாஸ் சைன் பியேர்” Espace Saint Pierre பாரிஸை அண்மித்த சென்லிஸ் SENLIS நகரத்தில் பார்கமுடிந்தது. எஸ்பாஸ் சைன் பியேர் எனும் கலைக்கூடம் மனித நாகரீக வளர்ச்சியில் பாச்சலின் இன்னுமொரு வடிவமாய் கைவிடப்பட்ட பிரமாண்டமான ஒரு தேவாலயம் என்பது சிறப்பு. சென்ற வருடம் இதே கூடத்தில் வாசுகனின் “இறுதி போசனம்” என்ற தலைப்பிலான நிகழ்த்து கலையையும் கண்டுகளித்தேன். அதே காலப்பகுதியில் மீனவன் (Pêcheur) எனும் தலைப்பிலான ஓவியங்களும் காண்பிக்கப்பட்டன. அவரின் படைபின் உள்ளுணர்வை, நுட்பத்தை விளங்கிகொள்வதற்கு முன் படைப்பின் உருவாக்க உத்தி மற்றும் பயன்படுத்தபட்ட மூலங்களை நாம் கண்டறியவேண்டும்.
“பாட்டிய பாணியில்” மண்சார்ந்த வரங்களை பிரதானமாக கொள்வதே அவரது அடையாளம். தெற்காசிய, சைப்ரஸை அண்டிய மத்தியத்தரை தேசத்து தொல்லியல், ஜப்பானை மையமாக கொண்டு கிழக்காசியா, குவாடலூப் , மாடினிக்கை அண்டிய கரேபிய தேசங்களின் மத்திய காலத்திற்கு முற்பட்ட படைப்புகளின் தாக்கம் இவரது படைப்பின் மூலதனம். பராம்பரிய காலத்தின் அல்லது அதற்கு முற்பட்ட மனிதனின் படைப்பின் தேடலும் அதன் கூறுகளையும் இவரது படைப்புகள் நமக்கு சொல்லும் செய்தி – பாட்டிய பாணியில் தோய்கிறது.
“பாட்டிய பாணியின்” தெறிப்பில் “தலைவர்” எனும் படைப்பு பிறந்தது. கடற்கரை மண்சார்ந்த நிறத்தில் களிமண்ணில் உருவான அந்தமுகம். மண்நிறம், கறுப்பு, பச்சை, மஞ்சள் போன்ற வர்ணங்களால் உருமறைப்பு (Camaflage) செய்ய முயல்கிறது. சீருடை உருமறைப்பு கொரிலா போராட்டத்தின் பிரதான அங்கம். மண்ணாலான அந்த முகத்தின் இரு கன்னங்களிலும் நட்ச்சத்திர மீனின் ஓடுகள் புதைக்கப்படுள்ளது – இறுதியாக கடந்து சென்ற எமது காலத்தை இரண்டாக பிரிக்கும் வகையாக அல்லது இலட்சியத்தின் இலட்ச்சனைகளாக கூட கூறலாம். இவ்வாறாக முகம் முழுவது கடல் எச்சங்கள் பதிக்கப்பட்டிருப்பது நெய்தல் நிலத்தின் வாழ்வின் பிறப்பையும் முடிவையும் பறைசாற்றுகிறாரோ. நெற்றியில் சிவப்பு கோடு பிளவு போன்றும் சிவப்பு கொடி போலவும் – செங்கொடி பறக்கட்டும்.
தலைவரின் முகத்தின் பின்புலம் தாங்கும் புறங்கள் சிதைந்திருக்கும் சாக்குதுணி இயல்பு குலைந்த சமூகப்பிடிப்பின் முகத்தின் கதையை பேசுவதாக வாழ்வை பிரதிபலிப்பதாகவும் பொருளாதாரத்தின் அடையாளமாகவும் பின்னப்படுள்ளது. கீழ்புறம் மயில் இறகும் சில நூல்களும் பிணைந்துள்ளன. மயிலிறகு பெரும்பாலும் அழகு, விலாசம், மற்றும் ஆன்மீக கண் எனப் பொருள் கொள்ளப்பட்டாலும் படைப்பாளி முல்லை நிலத்தின் வாழ்வியலை முன்னிறுத்துவதாக செப்பினார் – முருகனுக்கு இணையானவர் என்று பாடல் வரிகள் நெரிங்கிபோகிறது.
சிக்கிய நூல்களோடு நெய்த இப்படைப்பு வாழ்வின் துணிச்சல், செய்திகள், நிகழ்வுகள், அல்லது அரசியலை ஆழமாக நம்மோடு உரையாடுகிறது. பல சிவப்பு கோடுகள் ஒன்றாக ஓரிடத்தில் குவிவது – பல நாடுகள் ஒன்றிணைந்து முடக்கிய செய்தி.
பாட்டிய பாணியில் அனா இப்படைப்பு ஒரு கலப்பு நவீன படைப்பு (mixed media work). குறியீட்டு உருவக கலை இயற்கை பொருட்கள் சமூகபௌதிக கருத்தியலால் தூண்டப்பட்ட ஒரு மாமனிதனின்கதையை காவிவந்த முகமூடிப் பாணிகலை உணர்வு பெருக்கேறி உயிர்த்திருந்தது