
Screenshot
சம்பவத்திலிருந்து சினிமாவிற்கு சினிமா என்பது வெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதல்ல. நடந்ததை அப்படியே திரையில் காட்டினால் அது செய்தித் தொகுப்போ அல்லது ஆவணப்படமோ ஆகிவிடும். ஆனால் ஒரு சம்பவத்தை கலை வடிவில் உயிர்ப்பிக்கும்போது, அதன் பின்னணி, அதன் விளைவுகள், அதில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் உள்மனப்பயணம் ஆகியவை வெளிப்பட வேண்டும். அப்போதுதான் கதை பார்வையாளரைத் தொடும். சம்பவம் என்பது விதை; சினிமா அதனை கதைப்போக்கின் மரமாக மலரச் செய்யும் கலை. இந்தக் கோணத்தில் மதிசுதா இயக்கிய «வெந்து தணிந்தது காடு» திரைப்படம், போர் பிம்பங்களைத் தாண்டி மனித வாழ்வின் சிதைவுகளைச் சித்தரிக்கிறது.
உணர்சிகளுக்கும் கழிவிரக்கங்களுக்குமப்பால் படைபின்மீதான பார்வையென்பது படைப்பாளியை அடுத்த தளத்திற்கு எடுத்துசெல்லவேண்டும்.திரைமொழி யென்பது சொல்லப்படும் கதையுனூடே மக்களை இயக்குவதற்கான கருவியாயும் கட்சியின் குரலாயும் ஒலிக்கவேண்டும்
சம்பவங்களை நேரடியாகச் சினிமா கதையாக்கும்போது உணர்ச்சி சிக்கல் கதைப்பரிமானங்களை கண்டடையும் . நடந்த நிகழ்வு என்பது கதை அல்ல அது வெறும் தகவல் மட்டுமே. சம்பவங்கள் சினிமாவில் உயிர்ப்பதற்கு அதன் பின்னணி, அதன் விளைவுகள், அதில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் உணர்ச்சி ஓட்டம் தேவை. இல்லையென்றால் அது செய்தித் தொகுப்பைப் போல் பாழடைந்துவிடும்.
வாழ்க்கையில் சம்பவங்கள் நீண்டுகொண்டே போகலாம், சில சமயம் ஆண்டுகளாகவும். ஆனால் சினிமா நேரம் குறுகியது.இரண்டு மணி நேரத்தில் அடங்கவேண்டும். அங்கே எந்த தருணங்களை எடுத்துக்கொள்வது, எதனைத் தள்ளிப் போடுவது என்ற தேர்வில் எழும் குழப்பமே சிக்கலாகும். சம்பவத்தின் பாதிப்புக்கள் ஏராளம் இருக்கும் , ஆனால் சினிமா கதை ,கதையின் மையச் சிந்தனைக்கே சேவை செய்யவேண்டும். அதைச் செய்யாமல் விட்டால் சம்பவங்களின் முன் பின் தெரியதவர்களுக்கு கதை சிதறி விழும் அபாயம் உண்டு.
சம்பவத்தை அப்படியே காட்டினால் அது ஆவணப்படம் போலத் தோன்றும் அதேநேரம் அதிகம் மாற்றினால் உண்மையை அழித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு எழும். அந்த இடையில் சமநிலை வைத்தல் எளிதல்ல. அதிலும் சம்பவத்தில் உள்ள மனிதர்கள் களத்தில் நிற்பது போதுபோல் அவர்கள் பயணம் செய்ய வேண்டும், அவர்களின் உள்ளங்கண்ணில் ஒரு மாற்றம் நடக்க வேண்டும். இல்லையெனில் பார்வையாளருக்கு கதையின்மேலான தொடர்பு ஏற்படாது.
சம்பவம் எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும் காட்சியாக்கும்போது சின்னங்கள், உவமைகள், அடையாளங்கள் இல்லாவிட்டால் அது தட்டையாகி விடும் அதேநேரம் யதார்தத்தை மீறிய காட்சிப்படிபங்களும் கதைப்போக்கை சிதைத்துவிடும். சம்பவம் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொள்வதைதாண்டி, அந்த நிகழ்வு பார்வையாளரை எப்படிச் சிந்திக்க வைக்கிறது என்பதே கதையின் முக்கியமானதாக இயங்கவேண்டும்.
பார்க்கப்போனால் ஒரு கதைக்களுக்கு, சம்பவம் ஒரு விதை மாத்திரம். சினிமா கதைசொல்லல் அதைக் கொண்டு மரமாக மலரச் செய்ய வேண்டும். கதைக்காக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களின் இரத்தத்திலும் காட்சிகளின் கண்களிலும் உயிர்ப்பிக்கும்போது கதை உண்மையானதான சம்பவமாக மாற்றம்பெறுகிறது
தமிழ் மக்கள் நிதியில் ஈழத்தின் உள்ளிருந்து உருவாகியிருக்கும் மதிசுதா இயக்கிய «வெந்து தணிந்தது காடு» என்னும் திரைப்படம், lift சங்கத்தால் பாரிஸ்நகரின் 23 rue des écoles, 75005 இல் 100 இருக்கைகள் கொண்ட ecoles cinéma club பில் 21-09-2025 14:00 அன்று பொதுமக்கள் பார்வைக்கு திரையிடப்பட்டது.ஆனாலும் அங்கு பார்வையாளர்களாகவந்த யாவரும் ஈழ சினிமா ஆதரவாளர்களே பொதுமக்களின் பிரசன்னம் இருக்கவில்லை நென்றே கூறவேண்டும்.
வெந்து தணிந்தது காடு போர் என்ற வெளிப்புற உச்சரிப்பை மட்டும் சித்தரிக்காது அதனால் சிதைந்த ஒரு தனிப் பெண்ணின், ஒரு தாயின் குடும்ப வாழ்வை உள்வாங்கிச் சொல்கிறது. இராணுவ சீருடைகள் போர்விமானங்கள் ஆயுதங்கள் இல்லாமல் திரையில் பெரும்பாலும் போரின் பெரும் பிம்பங்கள் – வெடிப்பு, துப்பாக்கி, கொலை – நம்மை ஆக்கிரமிக்கின்றன. இந்தப் படம், அந்தச் சத்தத்தின் உள்ளே புதைந்து போன உயிர்களன் அலறலை, ஒரு குடும்பத்தின் துடிப்பை, ஒரு பெண்ணின் உள் உரையாடலை முன்னிறுத்துகிறது.
மையச் சிந்தனை போர் வென்றதோ தோற்றதோ என்பதல்ல, போரின் நடுவே உயிர் தப்பிக்கப் போராடும் மனிதர்களின் கதை தான் எப்போதும் எரியும் உண்மை. இந்தத் திரைப்படம் அந்த உண்மையை, பாழடைந்த மண்ணின் மணத்தோடு, களைத்த கண்களின் கசப்போடு நமக்குக் காட்டுகிறது.கதை கட்டமைப்பு மெதுவாகத் தொடங்கி, மெல்ல உச்சரிக்கும். ஆரம்பத்தில் அமைதி, பின்னர் அச்சம், இறுதியில் தவிர்க்க முடியாத அழிவு. எளிய புனைவின் வழியாகவே பெரிய வரலாற்றின் நிழல் நுழைகிறது. போர்நிகழும் நிலங்களில் மனித உணர்வுகளின் மாற்றம். ஒரு தனிப் பெண்ணின் தினசரி அனுபவங்கள், அவளது முடிவுகள், செய்யும் தவறுகள் – இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தே போர்நிலத்தில் தனி மனிதனை ககுடும்பத்தை எவ்வாறு பிளந்துவிடுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.
கதாபாத்திரம் மிகக் குறைவுதான், ஒரு கூட்டுக்குடும்பமாக இயங்கி பிரிவதால் அவை உயிரோடு இருக்கின்றன. அந்த தாயின் உள்ளார்ந்த நடுக்கமே படத்தின் முதுகெலும்பு. அவளைச் சூழ்ந்து நிற்கும் சின்ன சின்ன மனிதர்கள் ,அக்கம் பக்கத்தினர், போராளிகள், பேரப்பள்ளைகள் ,எல்லோரும் அவளது மனசாட்சியின் பிரதிபலிப்பாக மாறுகின்றனர்.
காட்சியமைப்புகள் கண்ணைத் திகைக்க வைக்கவில்லை; மாறாக, ஒளி, புகை, காலியாகிய வீடு, சிதைந்த சுவர், போன்ற சிறு பிம்பங்கள் தான் அதிகம் பேசுகின்றன. அது தான் படத்தின் வலிமை. பெரிய காட்சிகள் இல்லாமல் கூட, ஒவ்வொரு காட்சிகளும் பார்வையாளரின் உள்ளத்தில் கனத்த சுமையை வைக்கிறது.
எதுவும் பேசாமல், எதுவும் தீர்க்காமல்,மனதில் எரியும் குரல் போல முடிகிறது. அந்த முடிவு சற்றே திடீரென தோன்றினாலும், அதுவே உண்மை: போர் எப்போதும் காலம் காலமாக நிகழ்வது முழுமையாக முடிவதில்லை; அது மனிதரின் உள்ளே காயமாகத் தங்குகிறது.
இந்தத் திரைப்படம் சினிமாவாக மட்டும் அல்ல, ஒரு சாட்சியமாகவும் நிற்கிறது. போரின் எரிபொருள் கருகிய பின், மீதம் தங்கும் சாம்பலின் மணம் எப்படி வாழ்வைச் சூழ்கிறது என்பதை இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. அது வரலாற்றைச் சொல்வதில்லை; அது வாழ்ந்தவரின் துடிப்பை, துயரத்தை, தோல்வியை, அதேசமயம் சிறு நம்பிக்கையின் நரம்பையும் வெளிப்படுத்துகிறது.
இந்தத் திரைப்படம் எரிந்த மண்ணின் உணர்வை உண்மையோடு தந்தாலும், சில இடங்களில் அது நம்மை முழுமையாக கவரவில்லை.
படம் போரின் நடுவில் வாழும் மனிதர்களின் தனிப்பட்ட வேதனையைச் சித்தரிக்கிறது. ஆனால் அந்தப் பின்னணியில் நடந்த அரசியல் சிக்கல்கள், போரின் பல்வேறு பரிமாணங்கள் எளிதாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன. இதனால் வரலாற்று நினைவின் ஆழம் சற்றே குறைந்து விடுகிறது.
சில இடங்களில் படத்தின் ஓட்டம் மெல்லத் தள்ளாடுகிறது. கதாபாத்திரத்தின் உள் மனநிலையை வெளிப்படுத்துவதற்காகக் காட்சிகள் நீளமாக்கப்பட்டாலும், அது சிலது பார்வையாளர்களுக்கு ஒருவித சோர்வை உண்டாக்கியது.
மையக் கதாநாயகி மட்டும் உயிர்ப்போடு இருப்பது நன்றே, அவளை இன்னும் உரமேற்றியிருக்கவேண்டும் ஆனால் அவளைச் சூழ்ந்த மற்ற பாத்திரங்கள் சற்று மேல் தோற்றமளிக்கின்றன. அவற்றின் பின்னணி, ஆழம், எதிர்மறைச் சிக்கல்கள் குறைவதால் கதை ஒருதிசைப்பட்டதாகி விடுகிறது.
சில இடங்களில் படம் நமக்கு துயரத்தை திணிக்கிறது போலத் தோன்றுகிறது. இயல்பான வெளிப்பாட்டை விட, “பாருங்கள், இது துயரம்” என்று வலுக்கட்டாயமாகச் சொல்லும் தருணங்கள் இருக்கின்றன.
படம் நமக்கு கேள்விகளை விட்டுச் செல்கிறது – அது பலமாய் இருக்கலாம். ஆனால் ஒருவித சீரான கருத்து அல்லது தெளிவான நிலைப்பாடு இல்லாமை, கதை தெரியாதவர்களுக்கு “இதன் சொல்லாடல் எங்கே நிற்கிறது?” என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
படம் கலை வடிவில் சாட்சியமாக நிற்கிறது. அது போரின் குரலை அல்ல, போரால் சிதைந்த ஒரு தாயின் உள்ளக்குரலை முன்வைக்கிறது. இதனால் பார்வையாளருக்கு போரின் நெருக்கடியை வாழ்ந்தபடியே உணரச் செய்கிறது. இருந்தாலும் அரசியல் பரிமாணங்கள் புறக்கணிக்கப்பட்டதால் வரலாற்றின் ஆழம் குறைகிறது; பக்கக் கதாபாத்திரங்களின் ஆழமின்மை கதையை ஒருதிசைப்பட்டதாக ஆக்குகிறது. இப்படியான குறைபாடுகள் இருந்தாலும், படம் எரிந்த மண்ணின் மணத்தை, உயிர் தப்பிக்க போராடும் மனிதரின் துடிப்பை நம்முள் பதிக்கிறது. சினிமா வரலாற்றைச் சொல்லும் பொழுது, அது வெறும் நினைவாக மட்டுமல்ல, சிந்தனையைத் தூண்டும் குரலாக இருக்க வேண்டும் என்பதை இத்திரைப்படம் நமக்கு நினைவூட்டுகிது
23-09-2025
ப.பார்தீ