ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் பொதுக்கூட்டம்
கலைப்பணியின் புதிய திசைகள்..

Screenshot
ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் பொதுக்கூட்டம்
கலைப்பணியின் புதிய திசைகள்
பிரான்சில் வாழும் ஈழத் தமிழர் கலைஞர்களுக்குள் திரைமொழி பற்றிய உரையாடல் எப்போதுமே பரந்த அர்த்தம் பெற்றது. அந்தப் பரந்த உரையாடலின் தொடர்ச்சியாக, பிரான்ஸ் ஈழத் தமிழர் திரைபட சங்கம் தனது பொதுக்கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2025 மாலை 5:00 மணிக்கு 4, Rue de Compiègne, 75010 Paris என்னுமிடத்தில் நடத்தியது.
வழக்கம்போல் 4 மணிக்கு அறிவிக்கப்பட்டாலும் 5:30 மணிக்கே கூட்டம் ஆரம்பமானது.
இந்தக் கூட்டம் வெறும் நிர்வாக நிகழ்வாக மட்டுமல்லாமல், புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் சமூகத்தின் சுயஆளுமையும் கலைச்சிந்தனையும் மீண்டும் மீண்டும் செயல்வடிவத்தினூடான வளர்ச்சியாக வரையறுக்கப்படும் தருணமாகவும் அமைந்தது.
கூட்டத்தை செயற்குழு உறுப்பினர் திரு ரோபர்ட் அவர்கள் அமைதிவணக்கத்துடன் ஆரம்பித்தார். தொடர்ந்து சங்கத் செயலாளர் திரு சோதிலிங்கம் துலபன் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற எட்டு மாத காலத்தில் அமைப்பின் சட்டரீதியான பதிவு உட்பட நிகழ்ந்த அனைத்து செயற்பாடுகளையும் தெளிவுபடவும் விமர்சனமாகவும் கூறினார். இது ஈழச் சினிமா வளர்ச்சியில் பங்கு கொள்ளும் ஒரு அதிகாரமற்ற அமைப்பின் சிறந்த செயற்பாடென்றே கூறவேண்டும். தொடர்ந்து பொருளாளர் திரு ஜனா தனது கணக்கறிக்கையை வாசித்ததோடு, ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தலைவர் எசக்கி முத்து வதனன் தனது உரையை தொடங்கியவுடன், தங்களால் இதைவிட வீரியமாக செயற்பட முடியும் என்றும் அதற்காக செயற்குழு உறுப்பினர்கள் போதாமல் இருப்பதாகவும், அதற்காக புதிய செயற்குழு உறுப்பினர்களை உள்வாங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த நிர்வாகத் தெரிவின்போது இருந்த உபதலைவர், உபசெயலாளர் விலகியமையால் அவர்களின் இடத்தை நிரப்பும் புதிய அங்கத்தவர்களும் உள்வாங்கப்பட்டார்கள்.
மொத்தத்தில் கூட்டம் ஒரு கலந்துரையாடல் வடிவத்துக்கு மாற்றம் பெற்றது. சங்கத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் அதற்கு எவ்வகையான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையும் ஆழமாக உரையாடினர். கூட்டத்தில் பங்கு கொண்டவர்கள் திரைமொழியின் சமூகப் பங்கையும், ஈழத் தமிழர் அனுபவம் திரைமூலமாக எவ்வாறு வெளிப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். நிலத்தின்மீதான் அதிகாரமற்ற நாம் எவ்விதமான சமூகப் பொறுப்புடன் இயங்கவேண்டும், வர்த்தக சினிமா என்னும் பெயரில் ஈழச் சினிமாவின் வடிவம் சிதைக்கப்படுவதையும் அவ்வாறான சினிமாவுக்கு “ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் ஆதரவு ஒருபோதும் இருக்காது” என்றும் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. படமாக்குவது வெறும் கதைகளாக அல்லாமல், ஈழத் தமிழர் மக்களின் வாழ்வாகவும், போராட்ட வலி சுமந்த நினைவுகளின் அரசியலாகவும் இருக்கவேண்டும் என்று கூறியதுடன், பிரான்சின் கலைவளத்தில் தமிழர் படைப்புகள் இடம் பெறுவதற்கான தளங்கள் குறித்தும் தொடர்ந்து செயற்படுவதன் மூலம் மூத்த கலைஞர்கள் இளைய தலைமுறைகளை எப்படி சங்கத்தில் உள்வாங்கி, அவர்களின் படைப்பாளிமையை உயர்த்துவது, தரமான படைப்புகளை எப்படி கண்டடைவது என்பது பற்றியும் பேசப்பட்டது.
பின்னர், உறுப்பினர்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். வெளிநாட்டில் கலைஞர்களுக்கான பொருளாதார சவால்கள், தொழில்நுட்ப ஆதரவு குறைபாடுகள், மற்றும் தமிழ் திரைமொழிக்கு சர்வதேச அளவில் அடையாளம் உருவாக்க வேண்டிய அவசியம் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன.
இலாபநோக்கற்ற அமைப்போ இலாபநோக்கமான அமைப்போ நீதித்திட்டம் அவசியம். சந்தா கட்டணத்தைத் தாண்டி, சங்கம் வரவிருக்கும் ஆண்டிற்கான நிதித் திட்டங்களை எந்தவகையிலும் முன்வைக்கவில்லை. சினிமா பயிற்சி, பட்டறை, சினிமாவை திரைக்கு கொண்டு வருவது போன்ற சில செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும், தொடர்ச்சியான எதிர்கால இலக்கு சார்ந்த செயற்திட்டங்கள் முன்வைக்கப்படாமை சங்கத்தின் எதிர்கால நகர்வை பாதிக்கவே செய்யும்.
கூட்டத்தின் முடிவில், கலைஞர்களின் ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் மையத்திலிருந்தது — “திரை என்பது அரசியலின் நீட்சி; நமது கதை பேசப்படாதவர்களின் குரலாக அழிந்து விடக்கூடாது.”
ஈழத் தமிழர் திரைபட சங்கம், ஈழத் தமிழர்கள் தங்களின் சினிமா முயற்சிகளை தனித்தன்மையோடு, ஆனால் அடிப்படையாக சமூக நினைவுகளோடு இணைத்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். இது ஒரு சாதாரண சங்கத்தின் நிகழ்வு அல்ல; இது, புலம்பெயர்ந்த நாடுகளில் புலத்தில் உருவாகும் தமிழர் கலைமொழியின் புதுப்பிறப்புக்கான சாட்சியம்.
06-11-2025
ப. பார்தீ

