மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் பாடல் போட்டி – ஒரு பார்வை

மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் பாடல் போட்டி – ஒரு பார்வை

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் பாடல் போட்டி 08/11/2025 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பம் பொதுச்சுடர் ஏற்றியும் அமைதி வணக்கத்துடனும் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் பதினொன்றுக்கும் மேற்பட்ட இளந்தலைமுறைப் போட்டியாளர்கள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து அரங்கத்துக்கு எடுத்துவருவது என்பது கனத்த செயற்பாடு. அதனை எப்போதும் மதிப்பதோடு அணுகவேண்டும். ஆனால் ஒரு நிகழ்வை வடிவமைக்கும் பொழுது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது — நாம் என்ன நிகழ்வு செய்கிறோம், யாருக்காக செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதைக் கற்றறிந்து ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும்.

பாடல் போட்டி நிகழ்ச்சியை இசையோடு கோர்த்து நிகழ்த்த முற்படும்போது, இசையின் அடித்தளம் — பாடகர்களின் குரல் நிலை, இசைக்கருவிகளின் ஒத்திசைவு, உணர்ச்சி வெளிப்பாடு, அழகியல் நுட்பம் ஆகியவை — நிகழ்வில் பேணப்பட வேண்டும். இவைகளில் மிகமிக அவசியமானது, பாடகர்களில் குரல் ஒத்திசைவுக்கேற்ப சுருதி வடிவமைத்தல். அப்படி சுருதி தவறும் சந்தர்ப்பத்தில், பாடகர் தனது பாடும் திறனில் மாற்றங்களை ஏற்படுத்தி சுருதிக்குச் சேரவேண்டும். இரு — பாடலின் உயிரை சிதைக்காமல். பாடலில் குரலும் சுருதியும் ஒரு தண்டவாளத்தைப் போன்று சமாந்தரமாக பயணிக்க வேண்டும்.

08/11/2025 சனிக்கிழமை அன்று நடைபெற்ற பாடல் போட்டி நிகழ்வில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழந்தைகள் பயிற்சி பெற்று பாடவிருந்த பாடல்களுக்கான சரியான இசை ஏற்பாட்டுடன் வரவில்லை. அவர்கள் பாடலுக்கேற்ப ஒரு வகை பின்னணி இசையையே செய்து கொண்டிருந்தார்கள். அது பாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் பாடும் திறனை இடையூறு செய்தது. அப்போது நடுவராக இருந்த தில்லை சிவம் எழுந்து, “கரோக்கே இசையில் பாடப் பழகியிருப்பீர்கள்; அந்த இசையை இப்போது வழங்குவது கடினம். பிள்ளைகளை பாடச் சொல்லுங்கள், அந்த வேகத்துக்கு இசை வரும், அதை கணக்கில் எடுக்க வேண்டாம்” என்றார்.

இவைகள் இல்லாமல் பாடுவதன் மூலம் உங்கள் குழந்தைகளின் திறன் வெளிப்படும், திரண்படும் என்றார். சபையிலிருந்த அனைத்து பெற்றோரும் பிள்ளைகளை “இசையை கவனிக்காமல் பாடுங்கள்” என்றார்கள். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திடீரென இப்படியான ஒரு மாறுதலை செய்தால், போட்டிகளின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால், புலம்பெயர் நாடுகளில் தாய்மொழியை கற்றுக்கொடுக்கவே பெரும் திண்டாட்டம். இதில் பாடலை சுருதியோடு மனனம் செய்துவிட்டு, குழந்தைகள் பாட முடியாமல் திண்டாடினார்கள் என்பதே மெய்யிலும்மெய்.

தில்லை சிவம் ஒரு இசையமைப்பாளர். சுருதியும் தாளமும் குரல் ஒருமையும் இடையிலான ஒருமைப்பாட்டை உணராதவரா? பெற்றோரை, பிள்ளைகளை கலை தெரியாதவர் போல் கதைத்தது வருந்தத்தக்கது.

ஏற்பாட்டாளர் கவனத்திற்கு: “தமிழர் கலை பண்பாட்டு” என்பதே பெரும் விழுமியம். இன்றளவில் கீழடி தொன்மையிலிருந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. எமது தேசியத் தலைவர் இவற்றை எல்லாம் சுமந்த ஒரு தமிழர் தாய்நிலத்திற்காக போராடினார்,
“மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும் பொழுதே, தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது, பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன. தேசிய நாகரிகமும் உன்னதம் பெறுகின்றது”(வே.பி)
புலம்பெயர் நிலங்களில் நடக்கும் இத்தகைய கலா நிகழ்வுகள், தமிழ்மொழியும் பண்பாடும் உயிர்வாழும் அரங்கங்களாகவே விளங்குகின்றன. எனவே, அவை வடிவமைக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் நுணுக்கம், மதிப்பு, பொறுப்பு ஆகியவை இணைந்திருக்க வேண்டும். சிறுவர்களின் குரலில் பிறக்கும் ஒவ்வொரு சுருதியும், தாய்மொழியின் உயிராக ஒலிக்கட்டும் அதுவே நமது உண்மையான வெற்றி.
08-11-2025
ப.பார்தீ

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net