நஞ்சு தின்னி வீதி
பாரிஸ், 13.09.2026

சினிமா என்பது பார்வையாளனை வெறுமனே பொழுதுபோக்கி மகிழ்விப்பதற்காக ஒரு கதையைச் சொல்வதல்ல. காட்சிகள், ஒலி, பாத்திரங்கள், காலம், இடம், தனித்துவமான காட்சிமொழி ஆகியவற்றின் வழியாக மனித வாழ்க்கையின் ஒரு உண்மையை உணரச் செய்து, சிந்திக்கவும், கேள்வி கேட்கவும், சில வேளைகளில் மாற்றமடையவும் வைக்கும் கலை.
நல்ல சினிமாவில் படைப்பாளியின் அரசியல் என்பது வெறும் அரசியல் வசனங்களில் வெளிப்படுவதில்லை. அவர் யாருடைய வாழ்க்கையை மையப்படுத்துகிறார், யாருடைய குரலைக் கேட்கச் செய்கிறார், யாருடைய வலியை முக்கியப்படுத்துகிறார், அதிகாரத்தையும் ஒடுக்குமுறையையும் எவ்வாறு காட்சிப்படுத்துகிறார் என்பதிலிருந்தே அந்த அரசியல் வெளிப்படுகிறது.
பரிசில் நேற்று திரையிடப்பட்ட நஞ்சு தின்னி வீதியை அரங்கு நிறைந்த காட்சியாகப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, தமிழ்ச் சமூகத்தில் நீண்ட காலமாக மூடி வைக்கப்பட்டிருந்த ஒரு கதவைத் திறந்து உள்ளே பார்க்க முடிந்த உணர்வு ஏற்பட்டது. குறிப்பாக சீவல் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையின் மீது படிந்திருக்கும் சாதிய ஒடுக்குமுறையின் துர்நாற்றத்தை படம் நம்மை நேரடியாக எதிர்கொள்ளச் செய்கிறது.
அந்த உணர்வு வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தினாலும், சீவல் தொழில் செய்யும் எம்மக்களின் வாழ்க்கை இன்னும் முழுமையாகத் திரையில் பேசப்படவில்லை என்ற ஏமாற்றமும் இருந்தது.
நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் நகரும் இந்தப் படம், போராட்டம் முடிந்த பின்னரும் காயங்களோடும் ஒடுக்குமுறைகளோடும் வாழும் ஒரு சமூகத்தை நமக்கு முன்னால் நிறுத்துகிறது. சாதிய முரண்பாடுகள், மத அடையாளங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் தீராத துயரங்கள், புலம்பெயர்ந்தவர்களின் ஏக்கங்கள் எனப் பல சமூக அடுக்குகள் ஒரே வாழ்க்கைப் பரப்புக்குள் ஒன்றோடொன்று மோதுகின்றன.
திரைப்படத்தின் கலைநேர்த்தியை மதிப்பிடும்போது, கடந்த காலங்களில் நம்மை கட்டிப்போட்ட திரைப்படங்களையே அளவுகோலாக வைத்துப் பார்க்கும் பழக்கம் நமக்கிருக்கிறது. அந்த அளவுகோலைக் கொண்டு நஞ்சு தின்னி வீதியை அணுகினால், அதன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலியமைப்பு, காட்சிக்கட்டமைப்பு போன்ற தொழில்நுட்ப அம்சங்களில் இன்னும் இறுக்கமும் செறிவும் இருந்திருக்கலாம் என்ற விமர்சனம் தவிர்க்க முடியாதது.
ஆனால் அந்தக் குறைபாடுகளையே முதன்மைப்படுத்தி, படம் பேச முயலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் ஆழமான முரண்பாடுகளைப் புறக்கணிப்பதும் ஒரு வகையில் படைப்பின் சமூக முக்கியத்துவத்தைத் தவறவிடுவதாகும்.
இந்தப் படத்தின் முக்கியமான பலங்களில் ஒன்று அதன் கோடம்பாக்கத் தாக்கம் இல்லாதிருப்பது. கதை இருக்கிறது; ஆனால் கதை நாயகனை மையமாகக் கொண்டு நகரவில்லை. வாழ்க்கையை அதன் முரண்பாடுகளோடு காட்ட முயல்கிறது.
ஆனால் காட்சிமொழிக்கு எப்போதும் நாடக வசனங்கள் தேவையில்லை. சில இடங்களில் செயற்கையாக வலிந்து ஊட்டப்படும் வசனங்களும், பார்வையாளன் முன்கூட்டியே உணர வேண்டிய உணர்ச்சியைத் திணிக்கும் காட்சிகளும் காட்சிமொழியின் இயல்பான தாக்கத்தைச் சிதைக்கின்றன. படம் காட்ட வேண்டிய சிலவற்றை வசனங்கள் சொல்லிவிடுகின்றன.
புலம்பெயர்ந்த ஒருவனின் தாயகம் நோக்கிய ஏக்கம் படத்தின் இன்னொரு முக்கியமான அடுக்கு.
புலம்பெயர்வால் நாம் விட்டு வந்த நிலத்தை மட்டும் நினைவுகூர்வதில்லை; நாம் விட்டு வந்த காலத்தையும் நினைவுகூர்கிறோம். ஆனால் காலம் நமக்காகக் காத்திருப்பதில்லை.
நாம் நினைவில் வைத்திருக்கும் தாயகம் ஒன்றாக இருக்கிறது. நாம் திரும்பிச் செல்லும் தாயகம் இன்னொன்றாக இருக்கிறது.
அதனால் தாயகம் திரும்புதல் என்பது சில நேரங்களில் வீட்டிற்குத் திரும்புவதல்ல; நமது சொந்த நினைவுகளோடு மோதுவதுமாகிறது.
இந்த முரண்பாட்டை படம் புலம்பெயர்ந்த மனிதனின் உறவுகளின் வழியாகத் தொடுகிறது. குறிப்பாக தனது அக்காவின் மகளினதும் அவளது குழந்தையினதும் வாழ்க்கைக்காக, தான் சிரமப்பட்டு உருவாக்கிய புலம்பெயர் வாழ்க்கையையே துறக்கத் தயாராகும் உறவு, புலம்பெயர்வின் பின்னால் இருக்கும் மனித உறவுகளின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
பணம் ஒரு வாழ்க்கையை அமைத்துத் தரலாம். ஆனால் உறவுகளுக்கும் நினைவுகளுக்கும் விலை நிர்ணயிக்க முடியாது.போருக்குப் பின்னரான ஈழச் சூழலில் காணாமலாக்கப்பட்டவர்களின் துயரம் தமிழ்ச் சமூகத்தின் இருண்ட பக்கங்களில் ஒன்று.
போராட்டத்தை அழித்து, போரை முடித்துவிட்டதாக வரலாறு சொல்லிவிடலாம். ஆனால் காணாமலாக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்திடம் போரின் முடிவு எங்கே?
போராட்டம் வேறு; போர் வேறு.
இந்த வேறுபாட்டை திரைப்படம் போதுமான அளவு ஆராயவில்லை என்ற குறை எனக்கு இருக்கிறது. போர் என்ற சொல்லுக்குள் அது அதிகமாகப் பயணிக்கிறது; ஆனால் அந்தப் போராட்டம் உருவான சமூக, அரசியல் அடிப்படைகளை இன்னும் ஆழமாகத் தொட்டிருக்கலாம்.
திரும்பி வருவாரா என்று காத்திருப்பதும், இறந்துவிட்டார் என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதும், ஒரு புகைப்படத்திடம் பேசுவதும், எந்தத் தகவலும் இல்லாத வெற்றிடத்தோடு வாழ்வதும் போருக்குப் பின்னரும் தொடரும் வாழ்க்கைகள்.
அந்தத் தீராத வலியை படம் தொடுகிறது. ஆனால் இன்னும் ஆழமாகச் சென்றிருக்கலாம். ஏனெனில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் எமது வீதிகளில்தான் நிற்கிறார்கள்.
ஆனால் இந்தப் படத்தின் மிகக் கூர்மையான அரசியல் தாக்கம் சாதியைக் கையாளும் இடத்தில்தான் வெளிப்படுகிறது.
ஈழத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி பேசும்போது சாதியைத் தவிர்த்து விடுவது எளிதல்ல. போராட்டம், போர், தேசிய இனம், மொழி, இடம்பெயர்வு போன்ற பெரிய அடையாளங்களுக்குள் சமூகத்தின் உள்ளார்ந்த அதிகார உறவுகளையும் சாதிய முரண்பாடுகளையும் மறைத்துவிடுவதும் எளிது.
ஆனால் ஒரு சமூகத்தின் உண்மையான முகம் அதன் வெளிப்புற அடையாளங்களில் மட்டுமல்லாமல் அதன் உள்ளார்ந்த அதிகார உறவுகளில்தான் தெரியும்.
தீண்டாமைச் சுவர். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்குக் கீழானவனாகக் கருதும் சாதிய மனநிலையின் வெளிப்படையான வடிவம்.
தோட்டத்தில் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு சிரட்டையில் தேநீர் கொடுக்கப்படும் காட்சி இதனை மிகக் கூர்மையாகப் பதிவு செய்கிறது.
ஆனால் அந்தச் சிறுவர்கள் தேநீரை ஏற்றுக்கொள்ளாமல் வெளியேறுகிறார்கள்.
அந்த நிராகரிப்பில்தான் காட்சியின் அரசியல் இருக்கிறது.
சாதி இன்னும் இருக்கிறது. ஆனால் சாதிய அவமானத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உடைந்து கொண்டிருக்கிறது. ஒடுக்குமுறை தொடர்கிறது; அதே நேரத்தில் அதற்கு எதிரான நிராகரிப்பும் உருவாகிறது.இது ஒரு முக்கியமான விளைவு.
திரைப்படம் இந்த நிராகரிப்பின் அரசியல் அர்த்தத்தை இன்னும் வெளிப்படையாகவும் ஆழமாகவும் தொடர்ந்திருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது.
திருமணங்களில் சாதி பார்க்கும் நடைமுறையும் இதே சமூக முரண்பாட்டின் மற்றொரு நீட்சிதான்.
உலகம் முழுவதும் பயணித்து, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புலம்பெயர்ந்து வாழும் சமூகமே திருமணம் என்ற இடத்தில் இன்னும் சாதிப் பட்டியலைத் திறக்கிறது.
வெளியில் நவீனமான தோற்றம்; உள்ளே பழைய நிலவுடைமைச் சமூகத்தின் எச்சங்கள்.
இந்த முரண்பாட்டை படம் அலங்கரிக்காமல் காட்டுகிறது.
மத அடையாளங்கள் குறித்த கேள்விகளும் இதே சமூக விமர்சனத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகின்றன. பாடசாலைகளின் முகப்புகளில் நிறுவப்பட்டுள்ள மத அடையாள வளைவுகள் முதல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் முகப்பில் வீற்றிருக்கும் சரஸ்வதி சிலை வரை படம் கேள்விகளை எழுப்புகிறது.அறிவின் பொது நிறுவனங்களுக்கு மதத்தின் அடையாளம் ஏன் தேவைப்படுகிறது?
ஒரு கலைஞனின் அரசியல் என்பது அவன் வெளிப்படையாக முன்வைக்கும் கருத்துகளில் மட்டுமல்ல; அவன் அழகியலை எவ்வாறு உருவாக்குகிறான் என்பதிலும் இருக்கிறது.
இந்த முரண்பாடுகளுடனேயே படைப்பை வாசிக்க வேண்டும்.நஞ்சு தின்னி வீதியின் முக்கியத்துவம் அதன் தொழில்நுட்ப நிறைவில் மட்டும் இல்லை; அது எதைப் பேசத் துணிகிறது என்பதில்தான் இருக்கிறது.
தாயகத்தைப் பூசி மெழுகாமல், சமூகத்தின் சாதிய முரண்பாடுகளையும், மத அடையாளங்களையும், போரின் தீராத காயங்களையும், புலம்பெயர்வின் உளவியல் சுமைகளையும் ஒரே சமூகப் பரப்புக்குள் கொண்டு வருகிறது.
ஆனால் அதே நேரத்தில், சமகால ஈழத் தமிழ்ச் சமூகத்தின் மாற்றங்களையும் முரண்பாடுகளையும் இன்னும் விரிவாகத் தொட்டிருக்கலாம். குறிப்பாக போருக்குப் பிந்தைய தலைமுறையின் சமூக அனுபவங்கள், சாதிக்கு எதிரான புதிய நிராகரிப்புகள், புலம்பெயர்வு உருவாக்கிய புதிய வர்க்க உறவுகள் ஆகியவை இன்னும் ஆழமாகத் திறக்கப்பட வேண்டிய கதவுகளாகவே உள்ளன.
நடிகர்களின் இயல்பான நடிப்பும் படத்தின் வலிமைகளில் ஒன்று. குறிப்பாக அவர்கள் ‘நடிப்பதாக’ தெரியாத தருணங்களில், திரையில் ஒரு சினிமா நடப்பதைவிட நமக்குத் தெரிந்த மனிதர்களின் வாழ்க்கை நம்முன் விரிவடைவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
அதேவேளை பிரதான பாத்திரமான சத்தியனின் மேல் வைக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் சுமைக்கும், அந்தப் பாத்திரத் தெரிவுக்கும் இடையில் சில முரண்பாடுகள் உணரப்படுகின்றன. இது கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையையும் அதன் உளவியல் ஆழத்தையும் இன்னும் விரிவுபடுத்தியிருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருகிறது.
இறுதியில் நஞ்சு தின்னி வீதி ஒரு முழுமையான திரைப்படமாக இருக்கிறதா என்ற கேள்வியை விட, அது நம்மிடம் எந்தக் கேள்விகளை விட்டுச் செல்கிறது என்பதே எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது.
நாம் பெருமையாகப் பேசும் தமிழ்த் தேசிய அடையாளத்துக்குள் சாதி எங்கே இருக்கிறது?
நாம் கட்டியெழுப்பிய மத அடையாளங்களுக்குள் மனித சமத்துவம் எங்கே இருக்கிறது?
போர் முடிந்துவிட்டதாகச் சொல்லப்படும் வரலாற்றுக்குள் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எங்கே நிற்கிறார்கள்?
புலம்பெயர்ந்து வளர்ந்த நமது புதிய வாழ்க்கைக்கும் நாம் விட்டுவந்த சமூகத்திற்கும் இடையில் உருவான இடைவெளி எவ்வளவு?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுப்பு ஒரு திரைப்படத்துக்கு மட்டும் இல்லை.
ஆனால் அந்தக் கேள்விகளை நம்முன் நிறுத்துவது ஒரு திரைப்படத்தின் அரசியல் செயற்பாடாக இருக்க முடியும்.
அந்த வகையில் நஞ்சு தின்னி வீதி
நாம் மறைக்க முயன்ற காயங்களையும் காட்டுகிறது.
அந்தக் காயங்கள் இன்னும் ஆறவில்லை என்பதையும் நினைவூட்டுகிறது.
ஒரு நல்ல திரைக்கதை கதையைச் சொல்லாமல் கதையைப் பார்வையாளனுக்குக் காட்ட வேண்டும்.
ப. பார்தீ
13.09.2026

