அராஜக முறையை மாற்ற புதிய அரசியலமைப்பே சிறந்த தீர்வு!
கடந்த காலங்களில் இடம்பெற்ற அராஜக முறையை மாற்ற புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதே சிறந்த தீர்வு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்தவகையில் முதலில் ஜனாதிபதியின் நிறுவேற்று அதிகாரத்தை கொண்ட ஜனாதிபதி முறையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
இந்த முறை காரணமே கடந்த 52 நாட்கள் பிரச்சினைக்கு காரணம் என்றும், நாடு ஸ்திரமற்ற நிலைக்கு செல்ல காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில், ஐ.தே.க, ஜே.வி.பி., சுதந்திர கட்சி, கூட்டமைப்பு ஆகிய பல்வேறு கட்சி தலைவர்கள் இதய சுத்தியுடன் செயற்பட்டு புதிய அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அவ்வாறு கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும் நாட்டில் ஸ்திர தன்மையையும் கட்டியெழுப்பும் முகமாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.