எதிர்க்கட்சியில் இருப்பதால் அமைதியாக இருப்போம் என எண்ணாதீர்கள்!
நாம் எதிர்க்கட்சியில் இருப்பதால் அமைதியாகவே இருப்போம் என நினைத்துவிட வேண்டாம்.
நாட்டுக்கு விரோதமான செயற்பாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக அதற்கான எதிர்ப்பை வெளியிடுவோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
நிதியமைச்சின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

”இன்று எமது நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. நாட்டில் பாரிய சவால் இருக்கும்போதுதான் நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்றோம். ஆனால், அதனை கொண்டு செல்வதற்கு தடை ஏற்பட்டது.
எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் ரணில் இன்று அறிவித்துள்ளார். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்து எரிபொருள் விலையை குறைக்கும் முன்னரே கடந்த காலங்களில் அதனை குறைத்திருக்க வேண்டும்.
எதற்கெடுத்தாலும் வரி விதிக்கப்படுகிறது. இதிலிருந்து மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் வரிகளையும் குறைத்தோம்.
ஒரு வேளைக்கூட சாப்பிட முடியாத மக்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள். இதனை உணர்ந்து வரி அதிகரிப்புகளை மேற்கொள்ளவேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் கூறும் எல்லாவற்றையும் செய்ய வேண்டாம். அவர்கள் சொல்வது அனைத்தையும் செய்தால் மக்கள் தான் இறுதியில் பாதிக்கப்படுவார்கள். மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
அன்று நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்காவிட்டால், பிரான்ஸ் அல்லது கிரேக்கத்தின் நிலைமைக்கு நாடு சென்றிருக்கும்” எனத் தெரிவித்தார்.