கூட்டமைப்பின் செயற்பாட்டை இனவாதமாக பார்க்க வேண்டாம்!
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்து செயற்படுவதை, சிலர் இனவாத நோக்கில் பார்ப்பதாக அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”இது 30 வருடங்கள் யுத்தம் இடம்பெற்ற ஒரு நாடாகும். வடக்கு- கிழக்கிலிருந்து எந்தவொரு தமிழரும் அமைச்சுப் பதவிகளை பெறவில்லை.
இன்று அவ்வாறு இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுகிறது. இது உண்மையில் வரவேற்கத்தக்கதாகும்.
இனவாத – அடிப்படைவாதிகள்தான் இதனை பாரிய ஒரு விடயமாக பார்க்கிறார்கள். ஆனால், எமக்கும் அவர்களுக்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையும் இல்லை.
அரசமைப்புக்கு முரணாக எதையும் யாருக்கும் வழங்கிவிட முடியாது. அவ்வாறு நாம் செய்யவும் மாட்டோம். இவையனைத்தும் அப்பாவி மக்களை முட்டாளாக்கும் செயற்பாடாகும்’ என்றார்.