பிரேஸில் வன்முறையை தடுக்கு 300 துருப்புகள் களத்தில்!
பிரேசிஸின் வடக்கு நகரான ஃபோர்டலிசாவில் இடம்பெற்று வரும் வன்முறையை தடுக்க, சுமார் 300 துருப்புகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நகரின் வர்த்தக நிலையங்கள், வங்கிகள் மற்றும் பேருந்துகள் இலக்குவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்படும் நிலையில், சியெர்ரா மாநிலத்தில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழல் மோசடியை இல்லாதொழிப்பதாக ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்திற்கு எதிராக, இரண்டு குழுவினர் இணைந்து இவ்வாறு மோசமான வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாரம் முழுவதும் இடம்பெற்றுவரும் வன்முறையில் பலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மேலதிக துருப்புக்களை பணியில் அமர்த்துமாறு நீதியமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு, சிறைச்சாலைகளுக்குள் தொலைபேசி இணைப்புகளுக்கான சமிக்ஞைகளை சிறைச்சாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது.
பிரேஸிலில் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதோடு, வன்முறைகளும் தலைவிரித்தாடுகின்றன. கடந்த காலங்களில் சிறைச்சாலைகளுக்குள்ளும் பல மோதல் சம்பங்கள் இடம்பெற்றன.
இவற்றை முடிவுக்கு கொண்டுவருவதாக புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள ஜயிர் பொல்ஸொனாரோ வாக்குறுதி வழங்கியுள்ளார்.
அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள சில தினங்களில் இவ்வாறு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் பிரகாரம், மேலதிக துருப்புக்கள் களத்தில் உள்ளன.
கடந்த ஒருவார காலத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


