மக்கள் பிரச்சினையில் கரிசனை கொள்ளாத அரசாங்கத்தை எதிர்ப்போம்!

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்காத அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க தயாராகவிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
அதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
‘நான்கு வருடங்களின் பின்னர் இன்று நாம் எதிர்க்கட்சியாக நாட்டு மக்களுக்கு சேவை வழங்கவுள்ளோம். இதுவரை காலமும் எதிர்க்கட்சி தலைவர் பதவி பிரதேச பிரச்சினைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று முதல் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் என நாட்டின் சகல பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தவுள்ளோம்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளின் குறைகளைச் சுடடிக்காட்டி, மக்களுக்கு நியாயம் கிடைக்க எதிர்க்கட்சித் தலைவர் அவலுவலகம் அரப்பணிப்புடன் செயற்படும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் நாம் அதிக கரிசனையுடன் செயற்படுவோம்.
இந்த குறுகிய காலத்திற்குள் நாட்டின் ஜனநாயகம் இல்லாமல் போகின்றது. மக்கள் பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றனர். விவசாயிகளும் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கவில்லை. எனவே நாம் அரசாங்கத்திற்கு எதிராக செய்யக்கூடிய சகல செயற்பாடுகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.