சம்பளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்!
மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு, சில தினங்களில் உரியத் தீர்வொன்று எட்டப்படாவிட்டால், தொழிலாளர்களுக்கு சார்பான முடிவொன்றை, இத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் எடுப்பதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“1990களிலிருந்து கூட்டு ஒப்பந்தமே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானித்து வருகின்றது.
அமைச்சு என்ற வகையில், நாம் இந்த விடயத்தில் மத்தியஸ்தமாகவே செயற்பட்டு வருகிறோம். 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் என்ற கோரிக்கையானது 2015 தேர்தல் காலத்தின்போதே எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இதற்கான உடன்படிக்கையொன்றுக்கு இரண்டு தரப்பினரும் வரவிருந்த நிலையிலேயே, கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
அதற்கு பின்னர் அமைந்த அரசாங்கத்தினாலும் இதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றபோதிலும், முடிவொன்றை எட்டமுடியாமல் போயுள்ளது.
அமைச்சின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மலையகத் தோட்டத்தொழிலாளர்களுக்கு சார்பான வகையில் நிச்சயமாக முடிவொன்றை எடுப்பேன்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.