அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி.
நிதியமைச்சர் மங்கள சமரவீர தாக்கல் செய்துள்ள 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், ஏப்ரல் 5ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, அரசாங்கத்தை தோற்கடித்து, இடைக்கால அரசாங்கத்தின் கீழ் தேசிய தேர்தல் ஒன்றை நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி அரசியல் சதித்திட்டத்தை அரங்கேற்றிய தரப்பினர் இந்த முயற்சியின் பின்னணியில் இருப்பதாகவும் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க தேவையான வாக்குகளை திரட்டுவதற்காக இந்த தரப்பினர் ஆளும் கட்சியின் சில தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை இம்முறை அரசாங்கம் கொண்டு வந்துள்ள வரவு செலவுத் திட்டம் மக்கள் மத்தியில் கடும் வரவேற்பை பெற்றுள்ளதால், அது இன்னும் சில மாதங்கள் முன்னோக்கி சென்றால், தமது தரப்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஒக்டோபர் அரசியல் சதித்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் மதிப்பீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.