நள்ளிரவில் அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள் யார்?

நள்ளிரவில் அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள் யார்? வெளியான பல மர்மத் தகவல்கள்!

இலங்கையில் சமகாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் குள்ள மனிதன் கட்டுக்கதையாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை உட்பட பல பகுதிகளில் இந்த குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த பிரதேசங்களில் நடமாடுவதாக கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் கிடைக்கவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்களை தொடர்ந்து இந்த நாட்டிலிருந்து அழிந்து போனதாக கூறப்படும் குள்ள மனித இனம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

குள்ள மனிதர்கள் என்பது குரங்குகள் போன்று கைகளில் நடந்து செல்ல கூடிய மிருக முகத்தை கொண்ட ஒரு உயிரினமாகும். அதற்கு நீண்ட நகங்களும் காணப்படும். எனினும் இலங்கையில் அவதானிக்கப்பட்டதாக கூறப்படும் குள்ள மனிதர்களுக்கு அவ்வாறான ஒன்றும் இல்லை என விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குள்ள மனிதர்கள் தொடர்பில் பலர் கருத்து வெளியிட்ட போதிலும் அவர்களை சரியாக பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை என ஆதிவாசி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குள்ள மனிதர்கள் என்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி சட்டவிரோத கும்பல் ஒன்று செயற்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இவ்வாறான கட்டுக்கதைகள் அரங்கேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net