சீனத் தொழில்நுட்பங்களால் இலங்கையர்களுக்கு பாதிப்பா?
சீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் கிடையாது என தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூவாவே நிறுவன தொழில்நுட்பம் உள்ளிட்ட சீனத் தயாரிப்புக்களை பயன்படுத்தும் 170 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹூவாவே நிறுவனத்தின் ஸ்தாபகர் இராணுவத்தில் கடமையாற்றிவர் என்ற காரணத்தினால் சில நாடுகள் அது குறித்து கரிசனை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகளும் அரசியல் நடவடிக்கைகளும் இரண்டு வேறு விடயங்களாகும் எனவும், இந்த இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹூவாவே உள்ளிட்ட சீனத் தொழில்நுட்பங்களை இலங்கை வெற்றிகரகமாக பயன்படுத்தி வருவதாகவும் எவ்வித பாதுகாப்பு பிரச்சினைகளோ அழுத்தங்களோ கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தில் கடமையாற்றிய ஒருவரினால் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவன உற்பத்திகள் இராணுவ உற்பத்திகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
சந்தையில் ஒரு பொருளுக்கு தடை விதித்து அதன் ஊடாக வெற்றியீட்டுவது பொருத்தமற்றது எனவும், போட்டியிட்டு வெற்றியீட்டுவதே சிறந்தது என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.
ஹூவாவே நிறுவனத்தின் சாதனங்கள் பயன்படுத்துவதற்கு சில மேற்குலக நாடுகள் தடை விதித்துள்ளதுடன் சாதனங்கள் ஊடாக உளவு பார்க்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.