ஐ.நா.வில் இலங்கை குறித்து புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் கால அவகாசம் கோருகின்றமை குறித்து எவரும் புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லையென அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வரவு – செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஹர்ஷ டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ஆரம்பித்த வேலைகளை நிறைவு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. இதனை அனைவரும் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இதேவேளை மின்சாரக் கதிரைக்குள் தன்னை சிக்க வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகிறதென கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஆனால் அத்தகையதொரு நிலைமை தற்போது நாம் மாற்றியுள்ளோம்.
அந்தவகையில் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சம உரிமைகளை பெற்று, சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்பதை நோக்காக கொண்டே எமது செயற்றிட்டங்களை முன்னெடுத்து செல்கின்றோம்” என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.