ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்ட இலங்கை!

ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்ட இலங்கை!

உலக ஊடக சுதந்திரம் தொடர்பான புள்ளி விபரங்களுக்கு அமைய கடந்த வருடத்தை விட இலங்கை 5 இடங்களை தாண்டி முன்னோக்கி வந்துள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கைக்கு அமைய இலங்கை 126வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக ஊடக சுதந்திரம் தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கை 141 வது இடத்தில் இருந்ததுடன் கடந்த 2018 ஆம் ஆண்டில் 131 வது இடத்திற்கு முன்னேறியிருந்தது.

உலக ஊடக சுதந்திரம் தொடர்பான புள்ளி விபரங்கள் 180 நாடுகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படுகிறது.

அயல் நாடான இந்தியா இந்த அறிக்கையின் படி 140 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 142 வது இடத்திலும் மாலைத்தீலு 98வது இடத்திலும் பூட்டான் 80வது இடத்திலும் பங்களாதேஷ் 150 வது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் 121 இடத்தில் உள்ளது.

அத்துடன் முதல் இடத்தில் நோர்வேயும் இரண்டாவது இடத்தில் பின்லாந்தும் மூன்றாவது இடத்தில் சுவிடனும் நான்காவது இடத்தில் நெதர்லாந்தும் உள்ளன. சுவிஸர்லாந்து, நியூசிலாந்து, ஜமெய்கா, பெல்ஜியம், கொஸ்டரீகா ஆகிய நாடுகள் 5 முதல் 10வது இடங்களில் உள்ளன.

அதேவேளை அமெரிக்கா 33 வது இடத்தில் உள்ளது. சீனா 177 வது இடத்தில் உள்ளதுடன் வடகொரியா 179வது இடத்தில் உள்ளது. இறுதி இடத்தில் டர்க்மேனிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்க கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் நடந்த ஊடகவியலாளர்கள் கொலை சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அறிவித்தார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமான விசாரணைகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் ஏனைய சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கூறியுள்ளது.

உணர்ச்சிபூர்வமான செய்தி வழங்கும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பழிவாங்கல்களுக்கு அஞ்சி செயற்பட வேண்டியதில்லை என அரசாங்கம் கூறினாலும் உண்மை நிலைமை முற்றிலும் மாறானது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் பயமுறுத்தப்படுவது, அச்சுறுத்தப்படுவது, பாதுகாப்பு படையினர் ஊடகவியலாளர்களை சில இடங்களுக்கு செல்ல அனுமதிக்காமை, ஊடகவியலாளர்களை நிராகரிப்பது, குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் இலக்காக மாறிய பல சம்பவங்கள் கடந்த வருடத்தில் நடந்துள்ளன.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த பின்னர், ஊடக சுதந்திரத்தை மீறிய சில சம்பவங்கள் நடந்ததாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net