அரசியல் நோக்கத்துடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு செயற்படுகிறது!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும் தமது நிலைப்பாட்டில் இருந்து விலகி இந்தக் குழு செயற்படும் காரணத்தினாலேயே தமது அணியினர் அதிலிருந்து விலகியதாகவும் அவர் கூறினார்.

பாமன்கடையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“உண்மையில் தெரிவுக்குழுவானது எதிர்ப்பார்த்த ஒரு தெரிவுக்குழுவாக அமையவில்லை. அதன் செயற்பாடுகளில் இருந்து விலகியே இந்தக் குழு தற்போது செயற்பட்டு வருகிறது.

எமது தரப்பில் இருந்தும் இதற்கு சிலர் ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்திருந்தாலும் புலனாய்வாளர்களை வெளிச்சம் போட்டுக்காண்பிப்பது முறையான செயற்பாடல்ல என்பதே எமது நோக்கமாகும். அரசியல் தேவைக்காக இதனை பயன்படுத்தக்கூடாது.

ஆனால், நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று அரசியல் நோக்கத்துடன் செயற்பட்ட காரணத்தினால்தான் எமது தரப்பில் இருந்து இதற்கு எந்தவொரு பிரதிநிதியும் கலந்துகொள்ளவில்லை.

நாம் தற்போது பாரிய வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருகிறோம். அதாவது, அரசாங்கத்துக்கு எதிராக பாரிய செயற்றிட்டமொன்றை நாடளாவிய ரீதியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 9335 Mukadu · All rights reserved · designed by Speed IT net