பாரிஸ் கறுப்பு (Paris Noir)வரலாற்றை மீட்டெடுக்கும் காண்பியம்.
27-06-2025 காலை 9 மணி பரிஸ்நகரம் ஒரு வெப்பச்சுழலுக்குள் புழுங்கிக்கொண்டிந்தது அதை தணிக்கும்விதமாய் யூன் 30 ம் திகதியுடன் மூடவிருக்கும் Centre Pompidou வின் கட்டட நிழலை எப்போதும் தாங்கிநிற்கும் தேநீர் கடைக்கு முன்னால் குளிர் தேரீருடன் தோழமைகளுடனான( பாரிஸ் கறுப்பு ) கலைக்கான்பியம் தொடர்பான உரையாடலுடன் தொடங்கிய அன்றைய நடப்பு அரசியல் விபரங்கள்,தமிழர் கலை நிலை அது ஏறவேண்டியதூரம் மென்ற பல கருத்து உரையாடலுடன் தொடங்கிய இனியநாள் 11 மணிக்கு தொடர்ச்சியாய் (பாரிஸ் கறுப்பு )அரங்கத்திற்குள் நுழைகின்றோம்
முதல்முறையாக முழுமையா கறுப்பின படைப்பாளிகளின் படைப்புகளை உள்ளடக்கி
Centre Pompidou-வில் மார்ச் 19 முதல் ஜூன் 30, 2025 வரை நடைபெற்ற “Paris Noir” (பாரஸ் கறுப்பு )காண்பிய அரங்கள் , ஒரு கலை நிகழ்வைத் தாண்டி வரலாற்றையும், மறைக்கப்பட்ட மனங்களையும் மீட்டெடுக்கும் ஒரு போராட்டக் களமாகவே இருந்தது. ஆபிரிக்கா, கரீபியன், அமெரிக்கா போன்ற பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆஃப்ரிக்க வம்சாவளி கலைஞர்களின் 300-350 படைப்புகள் இக்காட்சியகத்தில் இடம் பெற்றிருந்தன.
இங்கு இடம்பெற்ற சில முக்கியமான ஓவியர்களின் அவர்கள் பணிகள்
Gerard Sekoto – 1947‑இல் ஓவியப்படுத்திய Self‑Portrait; சுவரொட்டியின் கறுப்பு ஒளிகளின் வரும் உயிர்ப்பை எளிதில் எடுத்துக்காட்டும் ஓவியம் .
Beauford Delaney, அமெரிக்க வரலாற்று முகம்; பிக்காசோவுடன் தோழமை கொண்ட இவர், கலந்த வளமான மஞ்சள் நிறங்களால் – காலனித்துவத்திற்கு எதிரான கதைகளைக் கூறும் ஓவியங்கள் .
Wifredo Lam, கியூபான்‑ஜமாய்கா வம்சாவளி; தடையின்றி கலாச்சாரத்தை மீறி உலக நவீன கலைக்கேற்ற ஓவியங்கள் .
Romare Bearden & Faith Ringgold – ஹார்லம் புனரூட்டலின் கலை நிகழ்வுகளில் சமுக்கியத்துவம் பெற்றவர்கள்; அவளது கதை சொல்லலும் கலைப்படைப்புகளும் பார்வையாளர்களை ஈர்த்தன .
Bill Hutson, அமெரிக்க ஆபிரிக்க வரலாறு கொண்ட ஓவியர் – Centre Pompidou‑வில் அவரது நான்கு பாணிகளும் சிறப்பு இடம் பெற்றன .
பிரான்ஸின் காலனித்துவ வரலாறு, ஆபிரிக்க மக்களின் வாழ்வை இன்றுவரை இரத்தக்கறைபோலவே அழுத்தி வந்துகொண்டரிக்கின்றது. பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள், தங்கள் துரோக வரலாற்றை மறைத்து “தொலைந்த நாகரீகம்” என்ற பிம்பத்தை ஆபிரிக்கக் கலை மீது திட்டமிட்டு ஒட்ட முயற்சிக்கின்றன. இந்நிலையில், “Paris Noir” பாரஸ் கறுப்பு ஆபிரிக்க மக்களின் வரலாற்று தடப் பயணமாக நிறைந்திருந்தது.
Afro–Atlantic கலை, Présence Africaine, Revue Noire போன்ற இதழ்கள், மற்றும் பொதுத்துறை இயக்கங்கள் மூலம் உருவான புதிய கலைஅலைகள் இங்கு முன்வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் மத்தியில் பிரபலமில்லாத ஆபிரிக்க படைப்பாளிகளை அரங்கம் முன்னிறுத்துவது போலத் தோன்றினாலும், அவர்கள் தெளிவான கலை கற்கைமூலம் தங்கள் படைப்புகளை வீரியமாக வெளிப்படுத்தயிருந்தாலும் அவர்கள் பார்வையை ஐரோப்பிய கலைநிலைகளின் தாக்கங்களாகவே குறிப்பிட்டு, அந்தக் கலைஞர்களின் சொந்த முயற்சி, சொந்த தாக்கங்களை பின்தள்ளும் ஒரு முனைபோக்கான காட்சி அமைப்பு மனதை நெருடியது. அநேனேரம் ஆபிரிக்க பிரபலமாக அறியப்பட்டவர்களின் படைப்புகளின் பேச்சுகள் முழுமையாக விலக்கப்பட்டிந்தது.
உதாரணமாக, பிக்காசோவின் பிரபலமான “Les Demoiselles d’Avignon” ஓவியத்தில் ஆபிரிக்கமூல ஒவியக்கலைக் கூறுகள் பயன்படுத்தப்பட்டதைச் அவரே கூறியருக்கிறார்; ஆனால் இக்காட்சியில், ஆபிரிக்க படைப்பாளிகளை பிக்காசோ போன்று பல ஐரோப்பிய ஓவியர் தாக்கத்தில் உருவானவர்களாக மட்டுமே காட்டப்படுகிறார்கள். இதுவே அந்த வரலாற்று மீட்பு முயற்சியின் பாதியில் நிலவும் அளவளாவாத நிலையை வெளிக்கொணர்கிறது.
அத்துடன், படைப்புகளை இயல்புநிலை குலத்து தத்தமது சட்டகங்களுக்குள் மடக்கிவைத்துருந்தால் கலை அடக்குமுறையின் ஒரு பெரும் அடையாளமாகவே இருந்தது ஆனாலும் படைப்புகள் அந்த மக்களில் மண்வாசனையை வாழ்வியல் முறைகளை கலப்பு வாழ்கையை தெய்வவாழ்வை மத ஒடுக்குமுறைகளை கதைகளாகபேசிக்கொண்டுருந்தது. பார்வையாளர்கள் ஒவ்வொரு ஓவியத்தையும் நின்று வாசிப்பது போல அவதானித்து கடந்துசென்றாலும் படைப்புகள் தங்கள் சொந்த மக்களின் போராட்டங்களை, காலனித்துவத்துக்கெதிரான எதிர்ப்புகளை, கலைஞர்களின் உளவியலையும் சமூக உணர்வுகளையும் நம்மிடம் பேசிக்கொண்டே இருந்தன.
இங்கு நவீனத்துவ கட்டமைப்பு, காலநிலை மண் பண்பாடு சார்ந்த நிறக்குழப்புகளால் சூழப்பட்டிருந்தாலும், அந்த படைப்புக்கள் அழுத்தமாக “கலை என்பது ஒரு வரலாற்று அரசியல்தான்” என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தின. ஓவியங்களோடு சேர்த்து, பத்திரிகைகள், சிற்பங்கள், கையேடுகள், புகைப்படங்கள் போன்றவை ஒரு சமூக நினைவகமாக இந்த காட்சியை இயங்கச் செய்தன. Paris Noir (பாரிஸ் கறுப்பு)ஒரு கலைக்காட்சி மட்டுமல்ல — அது ஒரு புரட்சிச் சாட்சி. ஒவ்வொரு படைப்பும் கடந்த அடக்குமுறையின் கருக்கதை பேசிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பார்வையாளரும், அந்த ஓவியங்களை எதிர்கொள்ளும் தருணங்களில், ஒரு வரலாற்று எதிர்வினைக்கு ஈடுபட்டவர்களாகவே மாறிக்கொண்டிருந்தனர்.
கறுப்பின மக்களின் படைபுகளில் தமிழர் எம் வாழ்வின் பிரதிகள் பண்பாட்டு முறைகள் ஒட்டிக்கொண்டிருந்தது எங்களுக்கும் அவர்களுக்குமிடையிலான வரலாற்று மீழ் வாசிப்புக்கு பயணப்படவேண்டிய தேவையை உணர்த்தி நின்றது,(பாரிஸ் கறுப்பு)
01-07-2025
ப.பார்தீ