மற்றுமொரு ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்கக்கூடாது!

மற்றுமொரு ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்கக்கூடாது!

எதிர்வரும் காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு ஊழல் தரப்பினருக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கிவிடக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வாழ்க்கை செலவு, நாட்டில் வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளமை, எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அதிகரிப்பு, சிங்கப்பூர் ஒப்பந்தம், எட்கா உள்ளிட்ட நாட்டை தாரை வார்க்கும் ஒப்பந்தங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், திருகோணமலை எண்ணை தாங்கிகள் உள்ளிட்ட தேசிய வளங்களை சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்தல் மற்றும் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க இணைந்த தேசிய அரசாங்கம் மூன்று வருடங்களை நிறைவு செய்துள்ளது. எனினும் அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் சந்தோஷமாக இருப்பதாகத் தெரியவில்லை.

அத்தோடு கல்வி தகைமை இருந்தும் வேலையின்றி நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் காணப்படுகின்றனர். மோசடிகளில் ஈடுபடும் ரணிலின் பொருளாதாரக் கொள்கையே இவற்றுக்கான காரணமாகும்“ என தெரிவித்துள்ளார்.

Copyright © 1301 Mukadu · All rights reserved · designed by Speed IT net