//anjeng

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் பாடல் போட்டி 08/11/2025 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பம் பொதுச்சுடர் ஏற்றியும் அமைதி வணக்கத்துடனும் தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு பிரிவிலும் பதினொன்றுக்கும் மேற்பட்ட இளந்தலைமுறைப் போட்டியாளர்கள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து அரங்கத்துக்கு எடுத்துவருவது என்பது கனத்த செயற்பாடு. அதனை எப்போதும் மதிப்பதோடு அணுகவேண்டும். ஆனால் ஒரு நிகழ்வை வடிவமைக்கும் பொழுது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது — நாம் என்ன நிகழ்வு செய்கிறோம், யாருக்காக செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதைக் கற்றறிந்து ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும்.
பாடல் போட்டி நிகழ்ச்சியை இசையோடு கோர்த்து நிகழ்த்த முற்படும்போது, இசையின் அடித்தளம் — பாடகர்களின் குரல் நிலை, இசைக்கருவிகளின் ஒத்திசைவு, உணர்ச்சி வெளிப்பாடு, அழகியல் நுட்பம் ஆகியவை — நிகழ்வில் பேணப்பட வேண்டும். இவைகளில் மிகமிக அவசியமானது, பாடகர்களில் குரல் ஒத்திசைவுக்கேற்ப சுருதி வடிவமைத்தல். அப்படி சுருதி தவறும் சந்தர்ப்பத்தில், பாடகர் தனது பாடும் திறனில் மாற்றங்களை ஏற்படுத்தி சுருதிக்குச் சேரவேண்டும். இரு — பாடலின் உயிரை சிதைக்காமல். பாடலில் குரலும் சுருதியும் ஒரு தண்டவாளத்தைப் போன்று சமாந்தரமாக பயணிக்க வேண்டும்.
08/11/2025 சனிக்கிழமை அன்று நடைபெற்ற பாடல் போட்டி நிகழ்வில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழந்தைகள் பயிற்சி பெற்று பாடவிருந்த பாடல்களுக்கான சரியான இசை ஏற்பாட்டுடன் வரவில்லை. அவர்கள் பாடலுக்கேற்ப ஒரு வகை பின்னணி இசையையே செய்து கொண்டிருந்தார்கள். அது பாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் பாடும் திறனை இடையூறு செய்தது. அப்போது நடுவராக இருந்த தில்லை சிவம் எழுந்து, “கரோக்கே இசையில் பாடப் பழகியிருப்பீர்கள்; அந்த இசையை இப்போது வழங்குவது கடினம். பிள்ளைகளை பாடச் சொல்லுங்கள், அந்த வேகத்துக்கு இசை வரும், அதை கணக்கில் எடுக்க வேண்டாம்” என்றார்.
இவைகள் இல்லாமல் பாடுவதன் மூலம் உங்கள் குழந்தைகளின் திறன் வெளிப்படும், திரண்படும் என்றார். சபையிலிருந்த அனைத்து பெற்றோரும் பிள்ளைகளை “இசையை கவனிக்காமல் பாடுங்கள்” என்றார்கள். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திடீரென இப்படியான ஒரு மாறுதலை செய்தால், போட்டிகளின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால், புலம்பெயர் நாடுகளில் தாய்மொழியை கற்றுக்கொடுக்கவே பெரும் திண்டாட்டம். இதில் பாடலை சுருதியோடு மனனம் செய்துவிட்டு, குழந்தைகள் பாட முடியாமல் திண்டாடினார்கள் என்பதே மெய்யிலும்மெய்.
தில்லை சிவம் ஒரு இசையமைப்பாளர். சுருதியும் தாளமும் குரல் ஒருமையும் இடையிலான ஒருமைப்பாட்டை உணராதவரா? பெற்றோரை, பிள்ளைகளை கலை தெரியாதவர் போல் கதைத்தது வருந்தத்தக்கது.
ஏற்பாட்டாளர் கவனத்திற்கு: “தமிழர் கலை பண்பாட்டு” என்பதே பெரும் விழுமியம். இன்றளவில் கீழடி தொன்மையிலிருந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. எமது தேசியத் தலைவர் இவற்றை எல்லாம் சுமந்த ஒரு தமிழர் தாய்நிலத்திற்காக போராடினார்,
“மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும் பொழுதே, தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது, பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன. தேசிய நாகரிகமும் உன்னதம் பெறுகின்றது”(வே.பி)
புலம்பெயர் நிலங்களில் நடக்கும் இத்தகைய கலா நிகழ்வுகள், தமிழ்மொழியும் பண்பாடும் உயிர்வாழும் அரங்கங்களாகவே விளங்குகின்றன. எனவே, அவை வடிவமைக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் நுணுக்கம், மதிப்பு, பொறுப்பு ஆகியவை இணைந்திருக்க வேண்டும். சிறுவர்களின் குரலில் பிறக்கும் ஒவ்வொரு சுருதியும், தாய்மொழியின் உயிராக ஒலிக்கட்டும் அதுவே நமது உண்மையான வெற்றி.
08-11-2025
ப.பார்தீ

Screenshot
ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் பொதுக்கூட்டம்
கலைப்பணியின் புதிய திசைகள்
பிரான்சில் வாழும் ஈழத் தமிழர் கலைஞர்களுக்குள் திரைமொழி பற்றிய உரையாடல் எப்போதுமே பரந்த அர்த்தம் பெற்றது. அந்தப் பரந்த உரையாடலின் தொடர்ச்சியாக, பிரான்ஸ் ஈழத் தமிழர் திரைபட சங்கம் தனது பொதுக்கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2025 மாலை 5:00 மணிக்கு 4, Rue de Compiègne, 75010 Paris என்னுமிடத்தில் நடத்தியது.
வழக்கம்போல் 4 மணிக்கு அறிவிக்கப்பட்டாலும் 5:30 மணிக்கே கூட்டம் ஆரம்பமானது.
இந்தக் கூட்டம் வெறும் நிர்வாக நிகழ்வாக மட்டுமல்லாமல், புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் சமூகத்தின் சுயஆளுமையும் கலைச்சிந்தனையும் மீண்டும் மீண்டும் செயல்வடிவத்தினூடான வளர்ச்சியாக வரையறுக்கப்படும் தருணமாகவும் அமைந்தது.
கூட்டத்தை செயற்குழு உறுப்பினர் திரு ரோபர்ட் அவர்கள் அமைதிவணக்கத்துடன் ஆரம்பித்தார். தொடர்ந்து சங்கத் செயலாளர் திரு சோதிலிங்கம் துலபன் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற எட்டு மாத காலத்தில் அமைப்பின் சட்டரீதியான பதிவு உட்பட நிகழ்ந்த அனைத்து செயற்பாடுகளையும் தெளிவுபடவும் விமர்சனமாகவும் கூறினார். இது ஈழச் சினிமா வளர்ச்சியில் பங்கு கொள்ளும் ஒரு அதிகாரமற்ற அமைப்பின் சிறந்த செயற்பாடென்றே கூறவேண்டும். தொடர்ந்து பொருளாளர் திரு ஜனா தனது கணக்கறிக்கையை வாசித்ததோடு, ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தலைவர் எசக்கி முத்து வதனன் தனது உரையை தொடங்கியவுடன், தங்களால் இதைவிட வீரியமாக செயற்பட முடியும் என்றும் அதற்காக செயற்குழு உறுப்பினர்கள் போதாமல் இருப்பதாகவும், அதற்காக புதிய செயற்குழு உறுப்பினர்களை உள்வாங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த நிர்வாகத் தெரிவின்போது இருந்த உபதலைவர், உபசெயலாளர் விலகியமையால் அவர்களின் இடத்தை நிரப்பும் புதிய அங்கத்தவர்களும் உள்வாங்கப்பட்டார்கள்.
மொத்தத்தில் கூட்டம் ஒரு கலந்துரையாடல் வடிவத்துக்கு மாற்றம் பெற்றது. சங்கத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் அதற்கு எவ்வகையான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையும் ஆழமாக உரையாடினர். கூட்டத்தில் பங்கு கொண்டவர்கள் திரைமொழியின் சமூகப் பங்கையும், ஈழத் தமிழர் அனுபவம் திரைமூலமாக எவ்வாறு வெளிப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். நிலத்தின்மீதான் அதிகாரமற்ற நாம் எவ்விதமான சமூகப் பொறுப்புடன் இயங்கவேண்டும், வர்த்தக சினிமா என்னும் பெயரில் ஈழச் சினிமாவின் வடிவம் சிதைக்கப்படுவதையும் அவ்வாறான சினிமாவுக்கு “ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் ஆதரவு ஒருபோதும் இருக்காது” என்றும் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. படமாக்குவது வெறும் கதைகளாக அல்லாமல், ஈழத் தமிழர் மக்களின் வாழ்வாகவும், போராட்ட வலி சுமந்த நினைவுகளின் அரசியலாகவும் இருக்கவேண்டும் என்று கூறியதுடன், பிரான்சின் கலைவளத்தில் தமிழர் படைப்புகள் இடம் பெறுவதற்கான தளங்கள் குறித்தும் தொடர்ந்து செயற்படுவதன் மூலம் மூத்த கலைஞர்கள் இளைய தலைமுறைகளை எப்படி சங்கத்தில் உள்வாங்கி, அவர்களின் படைப்பாளிமையை உயர்த்துவது, தரமான படைப்புகளை எப்படி கண்டடைவது என்பது பற்றியும் பேசப்பட்டது.
பின்னர், உறுப்பினர்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். வெளிநாட்டில் கலைஞர்களுக்கான பொருளாதார சவால்கள், தொழில்நுட்ப ஆதரவு குறைபாடுகள், மற்றும் தமிழ் திரைமொழிக்கு சர்வதேச அளவில் அடையாளம் உருவாக்க வேண்டிய அவசியம் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன.
இலாபநோக்கற்ற அமைப்போ இலாபநோக்கமான அமைப்போ நீதித்திட்டம் அவசியம். சந்தா கட்டணத்தைத் தாண்டி, சங்கம் வரவிருக்கும் ஆண்டிற்கான நிதித் திட்டங்களை எந்தவகையிலும் முன்வைக்கவில்லை. சினிமா பயிற்சி, பட்டறை, சினிமாவை திரைக்கு கொண்டு வருவது போன்ற சில செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும், தொடர்ச்சியான எதிர்கால இலக்கு சார்ந்த செயற்திட்டங்கள் முன்வைக்கப்படாமை சங்கத்தின் எதிர்கால நகர்வை பாதிக்கவே செய்யும்.
கூட்டத்தின் முடிவில், கலைஞர்களின் ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் மையத்திலிருந்தது — “திரை என்பது அரசியலின் நீட்சி; நமது கதை பேசப்படாதவர்களின் குரலாக அழிந்து விடக்கூடாது.”
ஈழத் தமிழர் திரைபட சங்கம், ஈழத் தமிழர்கள் தங்களின் சினிமா முயற்சிகளை தனித்தன்மையோடு, ஆனால் அடிப்படையாக சமூக நினைவுகளோடு இணைத்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். இது ஒரு சாதாரண சங்கத்தின் நிகழ்வு அல்ல; இது, புலம்பெயர்ந்த நாடுகளில் புலத்தில் உருவாகும் தமிழர் கலைமொழியின் புதுப்பிறப்புக்கான சாட்சியம்.
06-11-2025
ப. பார்தீ
நூல் அறிமுகம் – துறுவேறும் கைவிலங்கு: சிறை அனுபவத்தின் அரசியல் சாட்சியம்
நிகழ்விடம்: 57, Boulevard de Belleville, பாரிஸ் 17-ம் பிராந்தியம்
தேதி: 28 செப்டம்பர் 2025
ஆரம்பம்: பொதுச்சுடர் ஏற்றி அமைதி வணக்கத்துடன், மாலை 16:30
“விடுதலைப் பெருவிருட்சம் வளர்ந்திட, விடுதலை நீர்வளர்ப்போம்” என்ற தொனியில் நிகழ்த்தப்பட்ட அரங்க ஆற்றுகை, பங்கேற்றவர்களை உள்ளார்ந்த ஒன்றுபாட்டுடன் அரங்குக்குள் இழுத்துச் சென்றது.
நிகழ்வின் தலைமை ஏ.கே. ராஜன் வகித்திருந்தார். தமிழ் மொழிப்பரப்பில் பல்வேறு மேடைகளில் தொடர்ந்து காணப்படும் அவரின் உரைபாணி இங்கு மீண்டும் பிரதிபலித்தது. ஆனால் அதே பாணி மீண்டும் மீண்டும் நிகழ்வதால், அது இளைய தலைமுறையின் பங்களிப்பைத் தடுக்கின்ற இடையூறாகவே தோன்றியது.
நிகழ்ச்சி வரவேற்புரை, ஆசியுரை, தலைமையுரை, வாழ்த்துரை, கருத்துரைகள், நூலறிமுகம், நூலாய்வு, படைப்பாளியின் பதிலுரை, விடுதலை நீர்சேகரித்தல், நன்றியுரை, நிறைவு என்ற ஒழுங்கமைப்பில் நடைப்பெற்றது. எனினும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது:
“துறுவேறிய நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்”.
ஒரு நூல் அறிமுகம் என்பது அந்த நூலைச் சுற்றிய அரசியல், இலக்கிய, சமூக பரிமாணங்களை ஆராய்ந்து, அதன் பயன்பாட்டை விவாதிக்கின்ற இடமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு நிகழ்ந்தது, நூலைக் குறித்த செறிவான சிந்தனையை விட, எழுத்தாளரின் தனிப்பட்ட பாசம் மற்றும் புகழ்ச்சி அதிகமாக இடம்பிடித்தது.
சிறை வாழ்க்கையின் அனுபவங்கள்.
இலங்கைச் சூழலில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொண்ட தனிமை, ஒடுக்குமுறை, மன அழுத்தம், எதிர்பார்ப்பற்ற வாழ்வு போன்றவற்றை எழுத்தாளர் தனது அனுபவத்தோடு இணைத்து வெளிப்படுத்துகிறார். இத்தலைப்பு இலக்கிய ஆவணமாக மட்டுமின்றி, அரசியல் சாட்சியமாகவும் அமைகிறது.
எனினும், நிகழ்வில் பேசிய சிலர் நூலின் இத்தன்மையை விரிவுபடுத்தாமல், “நூலாசிரியரின் தனிப்பட்ட துயரம்” என்ற கோட்டில் மட்டுமே தங்கினர். இதனால், நூலின் அரசியல் வலிமையும், அதன் சமூக அவசியமும் பின்தள்ளப்பட்டன.
எழுத்தாளர் சுட்டிக்காட்டும் ஒரு முக்கியமான உண்மை:
இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தமிழ் அரசியல் கட்சிகளின் மற்றும் அமைப்புகளின் அலட்சியம். இது வெட்ககேடான ஒன்று.
மேலும், எழுத்தாளரின் மகள் பகிர்ந்த அனுபவங்கள் அப்பா சிறையில் கழித்த நாட்களில் குடும்பத்தின் துன்பங்கள். தமிழ்தேசிய அரசியலின் பணப்பரிமாற்ற முடக்குவாதம் மீது எழுப்பிய கேள்விகள் இவை அனைத்தும் அரங்கில் அமர்ந்திருந்தவர்களை நேரடியாகத் தாக்கின. உண்மையில், அங்கு வந்தவர்களில் சுமார் 70% பேர் குற்றவுணர்வால் சுருங்கியிருந்தனர் என்பதே நிகழ்வின் சொல்லப்படாத உண்மை.
எழுத்தாளரின் நீண்ட உரை அரசியல் கைதிகளின் விடுதலையை மையமாகக் கொண்டிருந்தது. இது முக்கியமான உரை. ஆனால் ஒரு நூல் அறிமுக அரங்கு என்பதால், அது சுருக்கமாக அமைந்து, கலந்துரையாடலுக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருந்தால் பல்வேறு பார்வைகள் வெளிப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால், நிகழ்வு இன்னும் செறிவான அரசியல்-இலக்கிய விவாதத்திற்கு வழிவகுத்திருக்கும்.
இளைய தலைமுறை குரல்களின் பற்றாக்குறை
பிரியா மைந்தன் போன்றோர் பிரஞ்சு மொழியில் சுருக்கமான அறிமுகங்களைச் செய்திருந்தாலும், மொத்தத்தில் இந்த நிகழ்வு முன்னோடி தலைமுறையின் இலக்கியக் கூட்டமாகவே அமைந்தது.
இளைய தலைமுறையின் சிந்தனைகள் கேட்காதது, அரங்கத்தின் மிகப்பெரிய குறையாகவே நினைக்கப்பட்டது.
துறுவேறும் கைவிலங்கு – சிறை அனுபவங்களின் தனிப்பட்ட சாட்சியம் மட்டுமல்ல. அது தமிழ் அரசியல் கைதிகள் மீதான சமூக அலட்சியத்தையும், விடுதலை அரசியலின் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் ஆவணம்.
ஆனால், அதன் அறிமுக நிகழ்வு அந்தச் செறிவை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போனது.
இது ஒரு எச்சரிக்கை:
ஒரு நூல் அறிமுகம் வெறும் புகழ் பரிமாற்ற மேடை அல்ல, அது கருத்து மோதல்களின், அரசியல் நெருக்கடிகளின், இலக்கிய விவாதங்களின் அரங்கு ஆக வேண்டும்.
நூலை முழுமையாக வாசித்த பிறகே அதன் ஆழ்ந்த உள்ளடக்கத்தைப் பற்றி பேச இயலும். ஆனால் அறிமுக நிகழ்வு நமக்குக் காட்டியது தமிழர் அரசியல்-இலக்கிய அரங்குகளுக்கு இன்னும் சுயபரிசோதனை தேவைப்படுகின்றன.
01-10-2025
ப.பார்தீ

தமிழும் தமிழ்சார்ந்த ஆர்வமுடன் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நண்பர் புகைப்படக் கலைஞர். அவர் ஒருநாள் எனக்கு ஒரு அழைப்பை எடுத்திருந்தார். தமிழ் வீடொன்றில் “மெஹந்தி” நிகழ்வை படம் எடுக்கப் போவதாக கூறினார்.
நான் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன்:
இது தமிழர் கலாசாரமா? பண்பாடா?
அவர்: இவை இரண்டுமே இல்லை, இது வடஇந்திய பண்பாட்டு செருகல். ஆனால் இப்போது குறிப்பாக ஈழத் தமிழர்கள்மத்தியில் பரவலாக பரவி வருகின்றது.
அப்போது நான் அவரிடம் கேட்கிறேன்:
நீங்கள் ஒரு தமிழராக இதைக் காட்சிப்படுத்தச் சொல்வது அறமில்லைதானே?
என்று.அவர் இதைத் தன் தொழிலாகவும், “நான் போகவில்லை என்றால் இன்னொருவர் போய்விடுவார்” என்று தனது நிலைப்பாட்டை எனக்கு தெளிவுபடக் கூறினார்.
ஆனால் என் மனமோ,
வடஹிந்திய பண்பாட்டு செருகல்கள் தமிழர்கள்மீது — அதுவும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்மீது — ஹிந்துத்துவ மதவாத அடிப்படையில் ஒரு மெல்லிய பண்பாட்டு அழிப்பைச் செய்துகொண்டிருக்கின்றன என்பதைத்தான் உணர்ந்தது.இது தொடர்பாகத் தேடினால், பணம், புகழ், வர்த்தக அடிப்படையில் தமிழர் பண்பாடு சார்ந்த புரிதலில்லாத பண்பாட்டு மலகீனப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே நாமிருக்கின்றோமென்பது வேதனைக்குறிய விடயம்.இவை பற்றி தனிமனித விருப்ப/வெறுப்புபற்றோ அல்ல; பண்பாட்டு மீட்சிக்காக உழைக்கவேண்டிய ஒரு மக்கள்கூட்டமாகவே இருக்கின்றோமென்பது வேதனைக்குறிய விடயம்.நாமா இந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தை செய்தோம் என்பதுதான் ஆச்சரியமும்கூட – அதுவும் தமிழ்தேசியம் என்ற ஒருமைப்பாட்டு சொற்பத்தையைப் பாவித்து, தமிழும் தமிழ்பண்பாடுகளும் புரிந்து கொள்ளாத வாழ்க்கை நிலை…
திருமண மரபு என்பது ஒவ்வொரு இனக்குழுமமும் காலவோட்டத்தில் சிறு மாற்றங்களைச் செய்தாலும், தமது பாரம்பரியத்தை தொடர்ச்சியாகவே பின்பற்றிவருகின்றது. அதற்கு தமிழர் நாமும் விதிவிலக்கல்ல.தமிழர் திருமணப் பண்பாடுகள் பூர்வீகத்தில் மதஅடிப்படைவாத சடங்குகளைப் பின்பற்றாது, மனுட அறக்கோட்பாட்டில் நிகழ்ந்த ஒன்று. ஆனால் இன்று அவை மருவமருவி பலதரப்பட்ட சடங்குகளால் கட்டமைக்கப்பட்டுவிட்டது.ஆனாலும் தமிழ் திருமணக் கொண்டாட்டங்கள் எங்கள் இசை, உணவு, குடும்ப ஒற்றுமை மற்றும் பண்பாட்டு அடையாளங்களால் நிரம்பியுள்ளது. அது எங்கள் பெருமையும் அடையாளமும்கூட.
ஆனால் சமீப காலங்களில், வடஹி்ந்திய கலாச்சாரங்களில் இருந்து வந்த “மெஹந்தி விழா” தமிழர் திருமணங்களில் ஒரு முக்கிய நிகழ்வாகவே கையாளப்படத் தொடங்கியுள்ளது.
இது தமிழர் பண்பாட்டில் அக்கறையுள்ள ஒவ்வொரு மனங்களிலும் கேள்வியை எழுப்பி வருகிறது என்று ஏற்படுத்துகிறது:
இது ஒரு கலாசார உள்வாங்கலா? அல்லது தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மறுகவைக்கும் ஒத்திசைவை கொண்ட கலாசார அழிப்பா?
“மெஹந்தி” என்பது முதன்மையாக வடஇந்தியா, பாகிஸ்தான், மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் கலாசாரங்களில் தோன்றியதொரு விழா நிகழ்வாகும். இதில் மருதாணி இலைகள் அரைத்துத் தோலில் கலைவடிவங்களாக வடிவமைக்கப்படுகிறது.இது பெரும்பாலும் திருமணத்திற்கு முன் மணமகளின் நல்வாழ்க்கைக்காக, கணவனின் பெயரை மருதாணியில் ஒளிந்து எழுதும் சடங்காக ஆரம்ப காலங்களில் நிகழ்ந்துள்ளது.
பெண்கள் சந்திக்கும் மகிழ்ச்சி மையமான நிகழ்வாக நடக்கிறது.தமிழ் மரபியலில் அல்லது சங்க இலக்கியங்களில், திருமணச் சூழலில் “மருதாணி விழா” என்ற பெயரில் ஒரு நிகழ்வும் கிடையாது.மருதாணி இலைகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தாலும், மருதாணி இயற்கையாக உடலை குளிர்பதப்படுத்தும் மூலிகை.வியர்வை, தலைவலி, வெப்பம், தோல் நோய்கள் போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்துவர்.பெண்கள் அழகுப்பராமரிப்பு ஒன்றாக முக்கியமான கலை நிகழ்வாக அல்லாமல், அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டதுதான்.இதை 1980 காலப்பகுதிக்கு பிறகு பிறந்த நாங்களும் கண்ணூடாகப் பார்த்த நடமுறைவிடயுமும் கூட.
1990களுக்குப் பிறகு உலகமயமாக்கல் என்று உலகம் உள்ளங்கைபோல் சுறுங்குகிறது.
நகரமயமாக்கல்மூலம் திருமண நிகழ்வுகளை ஒட்டி பெரும் இலாபமீட்டக்கூடிய புதிய சந்தை திறக்கின்றது.அது எங்கள் பண்பாடுகளை நவீனமயப்படுத்திப் பரவச்செய்வதைவிடுத்து, புதிய பண்பாட்டு இறக்குமதிகளை செய்கின்றது.
அதனூக்கிகளான தமிழ் சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள், மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் “மெஹந்தி விழா” தமிழர்களுக்கும்
“திருமணத்திற்கு கட்டாயமாய் வேண்டிய நிகழ்வாக” காட்டப்பட்டு வருகின்றது.
இதில் முக்கிய பங்களிப்பு:வடஹிந்திய பாலிவுட் கலாசாரம்நகர்ப்புற உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கைமுறைடிக்டொக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகத்தளங்களில் நிகழ்வுப் போட்டி மனநிலைகள்இதனால், தமிழ் பண்பாட்டு புரிதலில்லாத “மெஹந்தி விழா” இன்று மணமகளின் சிறப்புநாள் பரிணமித்து,
புகைப்படக் கலைஞர்கள், நடனம், DJ கலந்த பண்பாட்டை அழித்து நாகரிகக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
“மெஹந்தி விழா” என்பது தமிழர் கலாச்சார மரபில் இல்லாத ஒன்று. ஆனால் இன்று, அது தமிழர் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது.அழகு நிகழ்வாக, புதுமை உணர்வாக, மணமகளின் தனிப்பட்ட தருணமாக இருந்தாலும்,
மாற்றத்தை ஒவ்வொன்றாக எதிர்த்தால்தான் மரபைக் காக்கிறோம் என்பதில்லை.
ஆனால் எந்த மாற்றம் என்னை விட்டுப் பிறந்தது? எது என்னுள் இருந்து எழுகிறது? என்பதற்கான உணர்வும் விழிப்பும் இல்லாமல் ஏற்கும் ஒவ்வொரு கடன் கலாசாரம் (borrowed culture),மென்மையான அடையாள இன அழிப்பை ஏற்படுத்தும்.ஒரு இன விடுதலைக்காக போராடும் நாம், எம்மையே அழிக்கலாமா?
மணவிழா என்பது யாரும் பார்ப்பதற்கான நிகழ்வல்ல.வருமான ஏற்றத் தாழ்வுகளை முன்னிறுத்திக் கொண்டாட்டங்களை ஒழுங்குசெய்யும் நிகழ்வுமல்ல.அது ஒவ்வொரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு இனத்தின், ஒரு மொழியின் வாழ்வின் சரம்.அதில் நம்முடைய இசை, நம் உணவு, நம் மண் வாசனை, நம் உறவுத் தோழமை, நம் பண்டைய மரபு ஒவ்வொன்றாகவே ஒளிரவேண்டும்.
மற்றவர்களிடம் பழக நம் வழியை மாற்றத் தேவையில்லை; நம் வழியையே காலத்திற்கேற்ப அழகு செய்யலாம்.
எங்கள் பூர்வீகத்தை சிறப்பாக்கி தொடர்ந்து வளர்த்துக்கொள்ளலாம்.
மெஹந்தி விழா – தமிழர்கள் தங்களை அறியாது தங்கள் கலாச்சாரத்தில் வேறு ஒரு இனத்தின் அடையாளங்களை உட்புகுத்தி,
எமது பண்பாட்டைத் திரிவுபடுத்தும் அந்த நிகழ்வின் உண்மைதன்மையை சிதைக்கும் அறிவுப்போதாமை.அது அழகாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் நுழையும் போது, நம்மை மறந்து அவர்களை ஆடம்பரமாக நகலெடுப்பது போல இருக்கக்கூடாது.
புதிதைக் காண விழித்திருப்பது அழகு —
ஆனால், நம் பழமையை அறியாது மறக்கும் தூக்கத்தில் விழாதிருக்க வேண்டும்.
அதற்கு நாம் யார் என்பதைக் நம்மால் அறிந்திருக்க வேண்டும்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
]]>

ஈழப்போரானது முனைப்புப் பெற்ற 1980 களில் புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த வாசிப்புத் தேடலும் இலக்கிய ஆர்வமும் மிக்க ஈழவிடுதலைப் போராட்டத்தின் மையவோட்டத்திலிருந்து விலகியும் ஒதுங்கியும் போன ஈழத்தமிழ் இளைஞர்கள் சிலரால் தமது பேச்சுவெளிப்பாட்டிற்கென உருவாக்கிய ஓர் வெளியானது 1988 ஆம் ஆண்டு இலக்கியச் சந்திப்பாக ஏற்றம் கண்டது. இன்று அதன் ஆரம்ப கர்த்தாக்களுள் அநேகர் இவர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் வெளியேறிவிட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டுவிட்டனர். இவ்விலக்கியச் சந்திப்பானது அவ்வப் பொழுதுகளில் ஈழத்தமிழ் மக்கள் பற்றி அக்கறை மிகுந்ததாய் பெயரளவிற் காட்டிக் கொண்டாலும், ஈழத்தமிழ்த்தேசிய இனத்தின் நியாயமான அரசியல் வேட்கையினை மறுதலித்தும்,அதனுள்ளிருக்கும் உள்ளக முரண்பாடுகளினை முதன்மைப்படுத்திக் கூர்மைப்படுத்தி தமிழ்த்தேசிய இனமென்பதனை பல்வேறு கூறுகளாக்கிப் பிளந்தழிக்கும் கைங்கர்யத்தில் முனைப்புக்காட்டியிருந்தது. இங்ஙனமிருந்துங்கூட, இதற்கு முன்னைய ஆண்டுகளில் இலக்கியச் சந்திப்புக்களை தலைமையேற்று நடத்தியோரும், கலந்து கொண்டோரும் இன்றைய இலக்கியச் சந்திப்பு; அதன் நோக்கு; இன்றைய ஏற்பாட்டாளர்கள்; ஒழுங்கமைப்பாளர் போன்றோரின் பின்னணி என்பனவீறாகக் கடும் எதிர்வினையாற்றியுள்ளனர்.
ஐம்பத்தியோராவது இலக்கியச் சந்திப்பானது கடந்த 2024 மார்ச்சு மாதம் 30-31 ஆம் திகதிகளில் பரீசில் நடைபெற்றிருந்தவேளையில் அதன் இரண்டாவதும் இறுதி நாளுமான 31.03.2024 அன்று மத்தியானத்தின் பின்னரான வேளையில் அங்கே இடம்பெற்றிருந்த கடும் கருத்துமுரண்பாட்டினையோட்டியெழுந்த வாதப்பிரதிவாதங்களைக் களையும் நோக்கில் கட்டுரையினை எழுதவேண்டியேற்பட்டுள்ளது.
இக்கட்டுரையானது, நாம் நிகழ்ச்சிக்குச் சென்ற 13:30 மணியிலிருந்து நிகழ்வு முடியும்வரையில் நிகழ்ந்த-நாம் சம்பந்தப்பட்டிருந்த- விடயங்களை மட்டுமே குறிப்பிடுகின்றோம்.
பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையரசுடன் அதன் செயற்பாடுகளுக்கு பல்வேறுவகையிலும் பின்நின்று செயற்படுவோரே நேரடியாயும், மறைமுகமாயும் இவ்விலக்கியச் சந்திப்பினை ஒழுங்குசெய்து நடத்தியிருந்த பொழுதிலும், இலக்கியச் சந்திப்பிற்கு -அங்கே- நடைபெறும் நிகழ்வுகளை பார்ப்பதற்காகவேயன்றி வன்மமோ; வெறுப்போ; பகையுணர்வோ கொண்டு குழப்பும் நோக்கில் நாம் சென்றிருக்கவில்லை. அங்கே கருத்துரைகளை வழங்கியோர் கொடுத்த கருத்துகள் , தகவல்கள் மீது எமக்கேற்பட்ட ஐயப்பாடு, சந்தேகம் குறித்தே வினாக்களையெழுப்பி பதில் பெறவிழைந்தோம்!
எனினும், அவர்கள் தமது கடப்பாட்டினை மறந்து கும்பல் மனோநிலையில் எம்மை அணுகினர்.
நிர்மலா இராகவன் , சோபாசக்தி போன்றோர் கார்ள் மார்க்ஸை பற்றிக் குறிப்பிட்ட அறிவீனத்தனம் மிக்க – தாம் புரிந்துவரும் அயோக்கியத்தனங்களிலிருந்து தம்மைப் பிணையெடுக்கும் வகையிற் கூறிய- கருத்துக்களும், “போரும் ஏகாதிபத்தியமும்” என்ற தலைப்பில் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் பற்றிய கருத்துக்களை முன்வைக்கையில் இஸ்ரேலின் சியோனிச அரசிற்கிணையாக ஈழத்தில் சிங்கள பௌத்தபேரினவத அரசு இன்றுவரை புரிந்துவரும் இனவழிப்பினை மறந்தும் கூடத் தொட்டுப்பார்க்காது சாதுரியமாகத் தவிர்த்த நிர்மலா , கலையரசன் போன்றோரின் மழுப்பல் நிறைந்த உரைகளும், இவர்கள் தம்மை யாரென அடையாளப்படுத்தும் செயலுக்கு எதிர்மறையாகவே இருந்தது.
புகலிட வாழ்வின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த டெலோன் மாதவன் என்ற ஈழத்தமிழ் இளைஞர் “தமிழ் இனப்புல இயக்கவியல்”
என்ற சட்டகத்தின் கீழ் கருத்துரைக்க வந்திருந்தார். 2002-07 காலத்தில் ஈழத்திற்குச் சென்று JAFFNA AND THE CONFLICT
INTER-COMMUNITY IN SRI LANKA எனும் தலைப்பில் தான் மேற்கொண்டிருந்த ஆய்வு பற்றிப் பேச ஆரம்பித்தார். அவர் தனது ஆய்வுப்பணி பற்றி பல விடயங்களைத் தெளிவுபடுத்தவேண்டியிருந்தது. எனினும், அவ்வாறால்லாது நிகழ்வில் அவருடன் இருந்தோர் துணையுடன் அவற்றினைத் தாண்டிக் கடந்துவிட்டார்.
அவர் கூறிய விடயங்களை முன்வைத்து நாம் அங்கே கேட்டிருந்த, கேட்க முனைந்த வினாக்களை இங்கே கேட்கின்றோம். 2002-2007 காலப்பகுதியென்பது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இக்காலப்பகுதியின் முன்னரைக்காலம் வரையில் சமாதானம் நிலவியிருந்த காலப்பகுதி. இருந்தும்; மக்கள் தம் நாளாந்த வாழ்வில் ஓர் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியாதிருந்த காலங்களவை. இக்காலத்தில் இவர் இப்படியானதோர் ஆய்வினை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் என்ன? இவர் ஆய்வினை மேற்கொள்வதற்காக எடுத்துக்கொண்ட பிரதேசமான யாழ்ப்பாணம் மாநகரசபை பிரதேசத்துள்;இதன் தென்கிழக்குப் பிரதேசமானது யுத்தத்தால் மக்கள் இடம்பெயர்ந்து முழுமையாக மீள்குடியேற்றம் கண்டிருக்கவில்லையென்பதுடன், மீண்டும் 2005/2006 இல் ஏற்பட்ட யுத்த சூழல் யாழ்குடாவிலிருந்து மக்களை வன்னி நோக்கி இடம்பெயரவைத்தது. இவ்வாறான சூழலில் எங்ஙனம் சீரியதோர் ஆய்வினை இவர் மேற்கொண்டிருக்கமுடியும்?
ஆய்வுக்காலத்தில் இவர் சந்தித்துப் பேசியதாக கூறியோர் கொடுத்த தகவல் மூலங்களை ஆய்வியல் நெறிமுறைகளினூடு நோக்கிச் சரியான தகவல்களைப் பெற்றிருந்தாரா? ஆய்வியல் நெறிமுறைகளை இவர் சரிவரக் கடைப்பிடித்திருந்தாரா? இவற்றிற்கான விடையினை டெலோன் மாதவனிடத்திலிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும், டெலோன் மாதவனின் ஆய்வுத்தரத்தினை பரீஸ் லா சப்பெல் பகுதி ஈழத்தமிழர்களின் வர்த்தக மையாமானது எப்படியென அவர்கொடுத்திருந்த விளக்கம் வெளிப்படுத்தியிருக்கிறது. Gare Du Nord தொடரூந்துப் போக்குவரத்து நிலையத்தினை மையாமாக வைத்து புறநகர்களில் குடியிருந்த மக்கள் வந்து செல்ல ஏதுவாய் லா சப்பல் பகுதியானது ஈழத்தமிழர்களின் வர்த்தக மையமாகியதென்ற விபரங்கூடத் தெரியாது, முதலில் பரீஸ் பத்தாம், பதினெட்டாம் வட்டாரப் பகுதியில் தமிழர்கள் குடியேறியபின்பே அப்பகுதியானது வர்த்தக மையமாகியதெனக்கூறி லா சப்பெல் ஈழத்தமிழரின் வர்த்தக மையமாகுவதற்கு முன்பே குறைந்த வசதிகளுடன் ஓர் அரைகுறை நிலையில் வர்த்தக மையமாக விளங்கிய Marcadet – Poissonniers இன் வகிபாகத்தினை தனது ஆய்வினூடு அறியத்தவறிவிட்டார்.
அடுத்து பிரான்ஸ் பரீசில் தலித் மேம்பாட்டு முன்னணி என்றோர் அமைப்பின் தலைவராக இருக்கும் தேவதாசன் என்பவர் “கள அனுபவம்; ஈழத்தில் சாதியம்” என்ற தொனியில் ஈழத்திற்கு – யாழ்ப்பாணம் – சென்று அங்கே அவர் நேரடியாகக் கண்டதாக சில விடயங்களைக் கூறியிருந்தார்!
அவர்கூறியிருந்த விடயங்களுள் அநேகமானவை சாதியமுரண்பாட்டுடன் சம்பந்தப்பட்டிராத தனிநபர், ஒரு சமூகக் குழுவினர் சம்பந்தப்பட்டிருந்த விடயங்களே. அவ்வாறனவற்றை சாதிய முரண்பாடாக்கி முடிச்சுப்போடுவதில் தேவதாசன் மிகவும் முனைப்புக்காட்டியிருந்தார். சாதிச் சங்கங்கள், ஏழாலையில் ஒரு பாடசாலையில் தண்ணீர்த் தாங்கியினுள் நஞ்சூட்டியமை, சிறுப்பிட்டி- புத்தூர் கலைமதி கிராமத்தவரிடையே ஏற்பட்ட சுடலைப் பிரச்சினை, அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் அக்கோயிலின் உரிமையாளர் சிங்கள இராணுவத்தினரைக் கூட்டிவந்து தேரிழுத்தமை, யாழில் ஒரு கோயிலைச் சுற்றி பதினைந்தடி உயரத்தில் மதிற்சுவரொழுப்பியமை என விடயங்களை மிகைப்படுத்திக் கூறி ஈழத்தமிழ்ச் சமூகத்துள் ஐம்பது, அறுபதாண்டுகளுக்கு முற்பட்டதானதோர் சாதிய முரண்பாடு 2009 மே க்குப் பின்னரான காலத்தில் ஏற்பட்டுவிட்டதாற் போன்றதோர் தோற்றப்பாட்டினை ஏற்படுத்த முயன்றிருந்தார்.
அவரின் இந்தக் கருத்துக்களுக்கு நாம் முன்வைத்த விடயங்களாக;
• சிறுப்பிட்டி மயானத்தைச் சுற்றியிருந்த காணிகளை மிகமலிவான விலையிற் கொள்வனவு செய்திருந்த செல்வம் கதிர்காமநாதன் என்றழைக்கப்படும் செல்வம் – தற்பொழுது புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிச கட்சியில் முக்கிய பொறுப்பிலுள்ளார்- அக்காணிகளைத் தனது ஊரவர்க்கு விலைவைத்து விற்றவேளையில், காணிகள் சுடலையை அண்டியிருந்தமையால் அக்காணிகளை வாங்கியோர் இதுபற்றிக் கேட்டபொழுதில், “சுடலை சுற்றி கவலைவேண்டாம், நான் அதனை எடுத்துவிடுவேன்” எனக்கூறியே விற்றிருந்தார். அப்பகுதியின் குடியிருப்பாளர் ஒரே சமூகத்தினராயிருந்தபோதிலும் அச் சுடலையை எடுக்க அவர்களுள் ஒருபகுதியினர் மறுத்துவந்தனர். அப்பகுதிக் காணிகளை விற்ற செல்வம் அவர்களுடன் சமரசம் செய்ய முயன்றும் முடியாமற்போனதன் விளைவாக அதனையோர் சாதிய முரண்பாட்டின் வெடிப்பாக பிம்பப்படுத்தி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டமென பு.ஜ.மா.லெ. கட்சியினருடன் இணைந்து செய்திருந்தார். இம்முரண்பாடுகளால், ஒரே சமூகத்துள், ஒருவரையொருவர் தாக்கியும் மதிற் சுவர்களையுடைத்தும் ,வாழைத்தோப்புகளை அழித்தும் கொண்டனர்.
• அங்ஙனமே, அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோயிலின் உரிமை சம்பந்தமான பிரச்சினை இரத்த உரித்துடைய இருவர்க்கிடையே வழக்காகி நீதிமன்றில் நடைபெற்றுவந்தது. 2014 ஆம் ஆண்டளவில் தீர்ப்பானது இலண்டனில் இருப்பவருக்கு சார்பாகத் தீர்ந்தமையினால் தனது அரசியலதிகாரப் பலத்தினைக் காட்டுவதற்காக கொழும்பின் பெரும் அரசியற் செல்வாக்கின் ஆதரவுடன் கோயிலின் தேர்த்திருவிழாவன்று சிங்கள இராணுவத்தினரைக் கூட்டிவந்து தேரிழுத்திருந்தார். இதன்பொழுது, இக்கோயிலினைச் சுற்றியிருக்கும் அனைத்துச் சமூகத்தினரும் பார்த்திருக்க சிங்களப்படையினரே தேரிழுத்தனர்.
• அடுத்ததாய், யாழில் இன்னொரு கோயிலைச் சுற்றி சுமார் பதினைந்தடி உயரத்தில் மதிற் சுவரொழுப்பியதானதோர் சர்ச்சைக்குரிய கதையாடலை தேவதாசன் முன்வைக்கையில்; பாஸ்கரன் என்பவர் தேவதாசன் குறிப்பிட்டிருந்த மேற்படி இடத்திற்குச் சென்று அங்கிருக்கும் மக்களைச் சந்தித்து விசாரித்தும், மதிற்சுவரினைப் பார்வையிட்டு வந்திருந்தார். அவரின் நேரடியனுபவத்தின்படி அங்கே அப்படியானதோர் முரண்பாடு நடந்திருக்கவில்லையென்பது தெரியவந்துடன்; கோயிலைச் சுற்றியெழுப்பியிருந்த மதிற்சுவரானது மேடு, பள்ளம்நிறைந்த இடத்திற் எழுப்பப்பட்டிருந்தமையும், தேவதாசன் என்பவர் சரிவர ஆராயாமல், மதிற்சுவரின் ஒருபக்கப் பகுதியை மட்டுமே பார்த்துவிட்டு வந்து,அதனைப் பிரமாண்டப்படுத்த முயன்றாரென்பதும் அப்பட்டமாகியது.
• அங்கு உரையாடலில் ஈடுபட்டிருந்தோரில் அநேகர் 60-70 களில் நடைபெற்றிருந்த சாதியவொடுக்குமுறையினை உணர்ச்சி ததும்பக் கூறிக்கொண்டிருந்தனரே தவிர அதற்குப் பின்னரான ஐம்பது அறுபதாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களினை ஆழ்ந்துற்றுணர்ந்து, புரிந்துகொண்ட தன்மையினை அவர்களிடத்தே காணமுடியவில்லை.
உண்மையில் ஈழத்திற் சாதியமென்பது முற்றிலும் ஒழிக்கப்படவில்லையென்பது வெள்ளிடைமலையே! சுமர் அறுபதாண்டுகளுக்கு முந்தைய கொதிநிலையிலோ, அதே வீச்சுடனோ இன்றில்லாது, ஓர் நொதிநிலையினைக் கண்டுள்ளதென்பதனை ஏற்றாகவேண்டும். இந்நிலைக்காக போராடியிருந்த முற்போக்கு எண்ணங்கொண்ட இளைஞர்கள், இடதுசாரிகள், விடுதலைப்போராளிகளுக்கு ஈழச்சமூகத்தின்பால் அக்கறை கொண்டிருப்போர் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளனர்.
இன்று சாதியொழிப்புக்கெனப் புறப்பட்டிருக்கும் பலரின் பின்புலம், நோக்கு, செயற்பாடு என்பவற்றை நோக்குகையில் இவர்கள் சாதியொழிப்பைவிட முரண்பாடுகளைக் கூர்மையாக்கி சாதியமோதல்களைத் துண்டும் வகையிற் செயற்பட்டு வருகின்றரென்பது புரியும்.
ஈழத்தமிழ்த் தேசிய இனமாகிய நாம், ஓர் இனவழிப்பினை நிலம், மொழி, பொருளாதாரம், கலை,பண்பாடு, வரலாறு, கல்வி, சிந்தனையெனப் பல்வேறு தளங்களினூடாக எதிர்கொண்டு வருகின்றோம். இந்நிலையில், எம்மை நோக்கி வைக்கப்படும், நகர்த்தப்படும் எதனையும் நாம் -கடந்தகாலப் படிப்பினைகளினூடு- சந்தேகத்துடனும், ஐயப்பாட்டுடனுமே நோக்கவேண்டிய தவிர்க்கவியலா அணுகுமுறையினை எல்லாவற்றிலும் முன்வைக்கவேண்டியுள்ளது.
ஏகாதிபத்தியமும் அதன் நிதி நிறுவனங்களும் இலங்கை போன்ற மூன்றாம் உலகநாடுகளில் , அங்கிருக்கும் அதிகரவர்க்கம், ஒடுக்குமுறையாளருடன் கைகோர்த்து தம் நலன்சார்ந்து செய்துவரும் அரசியலானது, அத்தேசங்களில் எழுச்சிபெறும் தேசியவினங்களை பிரதேசம், மதம், சாதி, பால், எனப் பிரித்து மீண்டும் ஒன்றுசேரமுடியாது உதிரிகளாய்ச் சிதைந்தழிந்து போகுமளவிற்கு உணர்வுபூர்வமான விடயங்களை கூர்மைப்படுத்திப் பிளவுபடுத்தி அடையாள அரசியலை நோக்கித்
தள்ளுகின்றனர்.
இதற்காய் அச்சமூகங்களுள் பலதளங்களுள்ளும் தமக்கானோரை தேர்ந்தெடுத்தும், உருவாக்கியும் நிதிமூலங்களையும், இன்னபிற பலதையும் அவர்களுக்கு வழங்கி அவர்கள் மூலம் தமது திட்டம்,நோக்கு,கருத்தியல் என்பவற்றை ஆழவிதைக்கின்றனர். இத்தகையோரும் தாம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றோம் என்பதனை அறிந்தும், அறியாதோராயும் இருந்து – அவ்வச் சமூகங்களுள்ளிருந்து அதிகர, ஒடுக்குமுறையாளரின் நலன்களை நிறைவேற்றுவோர்- தமக்கென்றோர் இடத்தினையடையவும், அதிகாரத்தொட்டிலுட் புரளும் வேட்கைமிக்கோராகித் தம் மக்களை பணயம் வைக்கத் துணிகின்றனர். 2009 மே வரை தம்மைத் ஓர் தேசிய இனமாக கருதிவந்த ஈழத்தமிழருள் ஒரு சாரர் இன்று, சாதி,மதம், பால்,பிரதேசமெனப் பேசத் தலைப்படுவது இதன் அறிகுறியே!
இத்தகைய பாரிய ஆபத்தினை எதிர்கொண்டு நிறுத்துவதற்கேதுவாக தர்க்க ரீதியாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ ஒருக்கமைந்ததோர் கட்டமைப்பொன்று இல்லாவிடின் இது கொண்டுவரும் பாரிய அழிவினைத் தடுக்கமுடியாமற் போய்விடும்.
மேற்படியான விடயங்களை நாம் பேசமுயல்கையில், சமத்துவம், சனநாயகம், கருத்துச் சுதந்திரத்திற்காக சளைக்காது குரல் கொடுப்போரெனத் தம்மைத் தாமே பெருமைப்பட்டுக் கொள்ளும் இவர்கள் எம் கருத்தினை தெளிவாக முன்வைக்க விடாமல் கும்பல் மனோநிலையிற் கூடிச் சத்தமிட்டுத் தடுத்து நிறுத்தியதோடல்லாமல், நம்மைக் குழப்பவாதிகளாயும், சமூக சிந்தனையற்ற சாதிய மனோவியாதி கொண்டோராயும் , தற்குறிகளாயும், ஒன்றும் தெரியாதோராயும் சித்தரித்து அங்கே நடைபெற்றிருந்த விடயங்களை தமக்கேற்றாற்போற் திரிபுபடுத்தி இணையத்தளத்தில் அவதூறுக் கட்டுரை வரையுமளவிற்குப் போயுள்ளனர்.
]]>ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா.
தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் டிசெம்பர் 21, 2006 இல் டெங்கு வருத்தத்தால் நோய் முற்றி இவ்வுலகில் இருந்து விடை பெற்றவர்.
மார்ச், 2005 நான் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்க முனைந்த எழுத்தாளர்களில் ஒருவர் செங்கை ஆழியான், மற்றவர் வரதர்.
மார்ச் 17 ஆம் திகதி, 2005 காலை வேளை என்அப்பாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ் நகரம் போகும் போது ஆனந்தா அச்சகம் என்ற வரதரின் அச்சக நிலையம் சென்று அவரைச் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கின்றேன். சைக்கிளை கே.கே.எஸ் வீதியின் ஓரமாக நிறுத்தி விட்டு அச்சகம் உள்ளே நுளைகின்றேன்.
முகப்பில் இருந்த கதிரையில் இருந்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கின்றார் வரதர். ஒரு முறையும் சந்திக்கவில்லை என்றாலும் புகைப்படம் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்த அவரை இனங்கண்டு,
“வணக்கம் ஐயா, நான் உங்களைப் பார்க்கவெண்டு வந்திருக்கிறன், உங்கட வரதர் வெளியீடுகள் மூலம் நிறைய வாசித்திருக்கிறன்” இது நான்.
வெள்ளைத் தும்பை மீசைக்குள்ளால் தன் வெண்பற்கள் எட்டிப்பார்க்க முறுவலித்தவாறே
“ஓ அப்பிடியே, சந்தோஷம்”, வெளியால இருந்து வந்திருக்கிறீங்களே?” இது அவர்.
“ஓம் ஐயா, நான் ஒஸ்ரேலியாவில இருக்கிறன், ஊருக்கு விடுமுறையில் வந்த போது உங்களையும் கட்டாயம் பார்க்கவேணும் என்டு வந்தனான்.” பவ்யமாக நான் சொல்லவும், எழுத்தை நேசிப்பவர்களை நானும் நேசிப்பேன் என்ற தோரணை கலந்த சிரிப்பு மீண்டும் அவரிடமிருந்து.
வரதர் வெளியீடுகளில் 95 இற்குப் பின் நான் தவறவிட்ட அவர் வெளியீடுகள், படைப்புக்களைப் பற்றி நிறையவே பேசினார். கண்ணாடிப்பெட்டிக்குள் அடுக்கியிருந்த நூல்களை எடுத்து உதறித் தட்டி ஒரு துணியால் தூசை வளித்தெடுத்து விட்டுத் தந்தார்.
“இந்தப் புத்தகங்கள் இப்போது போறது குறைவு” என்றும் அவர் சொன்னது இப்ப நினைவுக்கு வருகுது.
என்னால் வாங்கக்கூடிய அவரின் இலக்கியக் கையிருப்பை அப்படியே அள்ளிக்கொண்டேன்.
“நான் ஒஸ்ரேலியா போனதும் சனிக்கிழமை செய்யும் வானொலி நிகழ்ச்சியில் உங்களின் இலக்கியப் பணி குறித்து ஒரு நேர்காணல் செய்ய விருப்பம்” இது நான்.
“நல்ல சந்தோஷம், கட்டாயம் செய்வம்” என்றவாறே தன் தொலைபேசி இலக்கம் பொறித்த முகவரி அட்டையைத் தந்தார்.அவரைப்புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றேன்(மேலே இருக்கும் முதற்படம்)
ஒரு பழுத்த இலக்கியக்காரரைச் சந்தித்த நல்லனுபவத்தோடு சைக்கிளில் சவாரியை ஆரம்பித்தேன்.
“இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுள், சமுதாயத் தொண்டர்களின் தொகைபெருகி வருகின்றது. வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து, சிக்கல்களுக்கு மருந்து தேர்ந்து, தெளிந்து அவற்றைத் தம் கதைகளிற் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திரு.தி.ச.வரதராசன் (வரதர்) இவ்வகையான எழுத்துத் தொண்டொன்று புரிந்து வருகின்றார்”- சொன்னவர் டாக்டர் மு.வரதராசன் (மு.வ)
தன் எழுத்தை மட்டுமே நேசித்து மற்றையவர்களில் படைப்பைப் புறங்கையால் ஒதுக்கும் இலக்கியக்காரர் மத்தியில் , தன் எழுத்துப்பணியுடன் மற்றையவர்களை எழுதத் தூண்டி வரதர் பிரசுரம் மூலம் அச்சுவாகனமேற்றும் வரதர் ஐயா உண்மையில் ஒரு ஆலமரம். அவரின் விழுதுகளாக நிலைபெற்றவை அவரின் வெளியீடுகள். வரதர் பிரசுரம் ஒன்றையாதல் வாசிக்காமல் விடுபவர் ஈழத்து இலக்கியத்தின் வாசிப்பனுபவத்தில் குறைவை விட்டுச் செல்பவர்.
“ஒரு ஆக்க இலக்கியம், எழுத்தாளனுடைய மனத்திலே ஒரு நல்ல கருத்து குடிபுக, அவன் அந்தக் கருத்தைச் சுவையான முறையிலே வெளிப்படுத்துக்கின்றான். வெளிப்படுத்தும் உருவம் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று யாரும் கட்டுப்பாடு செய்ய முடியாது. நல்ல ஆக்கமானால் அந்த ஆக்க இலக்கியம் விலை போகும். மக்களிடையே பேசப்படும். அதைப்பிறகு ஆய்வு செய்யும் இலக்கணக்காரர்கள் அந்த உருவத்துக்கு ஒரு பெயர் வைக்கட்டும்.” – வரதர்
திசை புதிது இதழ்-1 (2003) இல் வெளிவந்த வரதர் குறித்த ஆக்கம்
(எழுத்தாக்கம் கோபி)
மூத்த எழுத்தாளர் வரதர் ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று ‘வரதர்’ என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர். ‘வரதர்’ என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார்.
சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச – புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த ‘கல்யாணியின் காதல்’ வரதரின் முதற் சிறுகதை.
தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது. 1943. 06. 13 இல் ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்’ உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர். இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய ‘ஓர் இரவினிலே’ எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் ‘மறுமலர்ச்சி’ எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது.
1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர். மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார். 1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை ‘மறுமலர்ச்சி’ 24 இதழ்கள் வெளியாகின.
ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது. 1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர். 1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட ‘தேன் மொழி’யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.
இவை தவிர ‘வெள்ளி’ எனும் சஞ்சிகையும் ‘புதினம்’ எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின. வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் ‘வரதர் வெளியீடு’ ஆக வெளிவந்தன.
‘வரதரின் பல குறிப்பு’ அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின. வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம். வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர். வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு ‘சாஹித்திய இரத்தினம்’ எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.
கானா பிரபா
]]>கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் எனும் இக்கவிதைத்தொகுப்பு.
மயூரன் தன் பெயரோடு பிறந்த மண்ணை இணைத்துக் கொண்டவர். இவரை கவிஞர் மயூரன் என்பதை விட இணுவையூர் மயூரன் என்று சொல்வதில் தான் அவருக்கு ம் அவர் பிறந்த மண்ணுக்கும் பெறுமையே..
தமிழ் இன உணர்வுடன் நம் மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையை கவிக்கண் கொண்டு ரசித்து வடித்த கவிதைகள் நன்று.
இந்தச் சந்ததி காணாத வாழ்வு எனும் கவியும் தொலைந்தவை அல்ல தொலைத்தவை எனும் கவியும் படிக்கும் போது என் கண்கள் ஏனோ கண்ணீர் சுமக்கின்றன. எங்களுக்கும் சிறகுகள் முளைத்து சிட்டாக திரிந்ததொருகாலம் அந்த காலத்தை நினைவு படுத்தியது. ஆனால் எம் பிள்ளைகள் இங்கு கூண்டுக்கிளிகளாக வாழ்கிறார்கள்.என்ன தான் வசதிகள் இருந்தாலும் பொற்கூடும் சிறைதானே..? என்பதை மயூரன் கவிதையில் அழகாக கூறியுள்ளார்.
சில கவிதைகளை வாசிக்கும் போது எங்கோ சில வார்த்தைகள் நம் மண்ணில் நாம் தொலைத்த வாழ்க்கையை சுட்டிக்காட்டி ஊசி இலை என் மனதையும் குத்துகிறது.
நான் என்ற கவி மயூரன் தன்னை மற்றவர்களைவிட மாறுபட்டவன் என்று கூறுகிறார்.
மயூரன் எழுதிய நாற்பது கவிதைகளும் அவரின் தாய்மண்ணை விட்டு அடையாளமின்மையின் சோகத்தையும் புலப்படுத்துகின்றன.
மயூரனின் தமிழ்ப்பற்றைப் பறை சாற்றி நிற்கிறது அவரது கவிதைகள் அந்நூலுக்கு கவிகள் மட்டுமல்ல படங்களும் உருதிபடுத்துகின்றன.
தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்து இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்தாக இருக்கட்டும்.
ஒரு வாசகியாக உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
சிந்துகவி…?
தமிழர்களின் 60 வருட சக்கரத்தில் 33ஆவது இடத்திலுள்ள விகாரி வருடம் இன்று உதயமாவதாக பஞ்சாங்கங்கள் கூறுகின்றன.
வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், இன்று பிற்பகல் 1.12 இற்கு புதுவருடம் பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் இன்று பிற்பகல் 2.09 இற்கு விகாரி வருடம் உதயமாகிறது.
மருத்து நீர் தேய்த்து நீராட காலை 9.12 முதல் இரவு 9.12 வரையான நேரம் பொருத்தமானதென வாக்கிய பஞ்சாங்கமும், காலை 10.09 தொடக்கம் மாலை 6.09 வரையான நேரமும் பொருத்தமானதென திருக்கணித பஞ்சாங்கமும் குறிப்பிடுகின்றன.
வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், கைவிசேஷம் செய்வதற்கு 14ஆம் திகதி இரவு 10.31 முதல் 11.15 வரையிலும், 17ஆம் திகதி முற்பகல் 10.16 முதல் 11.51 வரையிலும், 18ஆம் திகதி முற்பகல் 9.47 முதல் 11.46 வரையிலான நேரங்கள் சிறந்தவை.
திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், 14ஆம் திகதி பகல் 11.00 மணி தொடக்கம் 12 மணி வரையிலும், இரவு 8.20 தொடக்கம், 930 வரையிலும், 15ஆம் திகதி அதிகாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையிலும் கைவிசேஷடத்திற்குரிய சுபநேரங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.
விகாரி வருஷப் பிறப்பில் வெள்ளைப் பட்டாடை அணிவது சிறந்தது என வாக்கிய பஞ்சாங்கம் கூறுகிறது. சிவப்புப் பட்டாடை அணிவது நன்மை தரும் என திருக்கணித பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.
]]>வாக்கிய பஞ்சாங்கம்
அறுபது வருஷத்துத் தமிழ் ஆண்டு பெயர்ப் பட்டியலில், புதிதாகப் பிறக்கப் போகும் விகாரி வருஷம் முப்பத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
இது 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, (சித்திரை மாதம் முதலாம் நாள்) பிற்பகல்; 1மணி 12 நிமிஷத்தில் விகாரி வருஷம் பிறக்கிறது.
காலை 9 மணி 12 நிமிஷம் முதல், மாலை 5மணி 12 நிமிஷம் வரை விஷு புண்ணிய காலமாகும்.
இக் காலத்தில், மருத்து நீர் தெளித்து, சிரசில் ஆலிலையும், காலில் இலவமிலையும் வைத்து நீராடி, வெள்ளை நிற, சிவப்புக் கரை அமைந்த பட்டாடை அணிந்து, வழிபடும் கடவுளைத் தியானித்து, நற்கருமங்களைச் செய்ய உறுதி எடுத்துக் கொள்ளவும்.
கண்ணாடி, தீபம், நிறைகுடம், பெற்றோர்,பெரியோர், மஞ்சள், குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, மலர்கள் போன்ற மங்களப் பொருட்களைத் தரிசித்து, இறை வழிபாடும் செய்யக் கடவர்.
கை விஷேஷம்:
உங்கள் வாழ்வில் சுபீட்சம் சூழ்க.
விகாரி வருஷப் பிறப்புக் கருமங்கள்.
திருக்கணித பஞ்சாங்கம்.
விகாரி வருஷம் 14.04.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பகல் 02.09 மணிக்குப் பிறக்கிறது.
பகல் மணி 10.09 முதல், மணி 06.09 வரை சங்கிரமண புண்ணிய காலமாகும். இப் புண்ணிய காலத்தில் யாவரும், தலையில் இலவம் இலையும், காலில் விளா இலையும் வைத்து, மருத்து நீர் தேய்த்து ஸ்நானஞ் செய்ய வேண்டும்.
சிவப்பு நிறப் பட்டாயினும் சிவப்புக் கரை வைத்த, புதிய வெள்ளை நிற வஸ்திரமாயினும் அணிய வேண்டும்.
இருக்கும் தங்க ஆபரணங்களை அணிந்து, பூரண கும்பத்தைத் தரிசித்து, மேலும் மங்களகரமான பொருட்களைத் தரிசித்து, இஷ்ட, குல தெய்வங்களை வணங்குதல் நலமாகும்.
கை விஷேஷம்:
உங்கள் வாழ்வில் சுபீட்சம் சூழ்க.
]]>