//anjeng
முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த கசப்பான நிகழ்வுகளும் அவற்றின் அனுபவங்களாற் பெற்றிருந்த முதிர்ச்சியும் இன்றிலிருந்து இருபதாண்டுகளுக்கு ஆற்றியிருந்த உரையிற் தெரிகின்றது. அங்கே கூறிய விடயங்கள் நேற்றைக்கு இன்றைக்கு மட்டுமல்ல நாளைக்கும் பொருத்தப்பாடானதே.

ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா.
தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் டிசெம்பர் 21, 2006 இல் டெங்கு வருத்தத்தால் நோய் முற்றி இவ்வுலகில் இருந்து விடை பெற்றவர்.
மார்ச், 2005 நான் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்க முனைந்த எழுத்தாளர்களில் ஒருவர் செங்கை ஆழியான், மற்றவர் வரதர்.
மார்ச் 17 ஆம் திகதி, 2005 காலை வேளை என்அப்பாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ் நகரம் போகும் போது ஆனந்தா அச்சகம் என்ற வரதரின் அச்சக நிலையம் சென்று அவரைச் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கின்றேன். சைக்கிளை கே.கே.எஸ் வீதியின் ஓரமாக நிறுத்தி விட்டு அச்சகம் உள்ளே நுளைகின்றேன்.
முகப்பில் இருந்த கதிரையில் இருந்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கின்றார் வரதர். ஒரு முறையும் சந்திக்கவில்லை என்றாலும் புகைப்படம் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்த அவரை இனங்கண்டு,
“வணக்கம் ஐயா, நான் உங்களைப் பார்க்கவெண்டு வந்திருக்கிறன், உங்கட வரதர் வெளியீடுகள் மூலம் நிறைய வாசித்திருக்கிறன்” இது நான்.
வெள்ளைத் தும்பை மீசைக்குள்ளால் தன் வெண்பற்கள் எட்டிப்பார்க்க முறுவலித்தவாறே
“ஓ அப்பிடியே, சந்தோஷம்”, வெளியால இருந்து வந்திருக்கிறீங்களே?” இது அவர்.
“ஓம் ஐயா, நான் ஒஸ்ரேலியாவில இருக்கிறன், ஊருக்கு விடுமுறையில் வந்த போது உங்களையும் கட்டாயம் பார்க்கவேணும் என்டு வந்தனான்.” பவ்யமாக நான் சொல்லவும், எழுத்தை நேசிப்பவர்களை நானும் நேசிப்பேன் என்ற தோரணை கலந்த சிரிப்பு மீண்டும் அவரிடமிருந்து.
வரதர் வெளியீடுகளில் 95 இற்குப் பின் நான் தவறவிட்ட அவர் வெளியீடுகள், படைப்புக்களைப் பற்றி நிறையவே பேசினார். கண்ணாடிப்பெட்டிக்குள் அடுக்கியிருந்த நூல்களை எடுத்து உதறித் தட்டி ஒரு துணியால் தூசை வளித்தெடுத்து விட்டுத் தந்தார்.
“இந்தப் புத்தகங்கள் இப்போது போறது குறைவு” என்றும் அவர் சொன்னது இப்ப நினைவுக்கு வருகுது.
என்னால் வாங்கக்கூடிய அவரின் இலக்கியக் கையிருப்பை அப்படியே அள்ளிக்கொண்டேன்.
“நான் ஒஸ்ரேலியா போனதும் சனிக்கிழமை செய்யும் வானொலி நிகழ்ச்சியில் உங்களின் இலக்கியப் பணி குறித்து ஒரு நேர்காணல் செய்ய விருப்பம்” இது நான்.
“நல்ல சந்தோஷம், கட்டாயம் செய்வம்” என்றவாறே தன் தொலைபேசி இலக்கம் பொறித்த முகவரி அட்டையைத் தந்தார்.அவரைப்புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றேன்(மேலே இருக்கும் முதற்படம்)
ஒரு பழுத்த இலக்கியக்காரரைச் சந்தித்த நல்லனுபவத்தோடு சைக்கிளில் சவாரியை ஆரம்பித்தேன்.
“இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுள், சமுதாயத் தொண்டர்களின் தொகைபெருகி வருகின்றது. வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து, சிக்கல்களுக்கு மருந்து தேர்ந்து, தெளிந்து அவற்றைத் தம் கதைகளிற் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திரு.தி.ச.வரதராசன் (வரதர்) இவ்வகையான எழுத்துத் தொண்டொன்று புரிந்து வருகின்றார்”- சொன்னவர் டாக்டர் மு.வரதராசன் (மு.வ)
தன் எழுத்தை மட்டுமே நேசித்து மற்றையவர்களில் படைப்பைப் புறங்கையால் ஒதுக்கும் இலக்கியக்காரர் மத்தியில் , தன் எழுத்துப்பணியுடன் மற்றையவர்களை எழுதத் தூண்டி வரதர் பிரசுரம் மூலம் அச்சுவாகனமேற்றும் வரதர் ஐயா உண்மையில் ஒரு ஆலமரம். அவரின் விழுதுகளாக நிலைபெற்றவை அவரின் வெளியீடுகள். வரதர் பிரசுரம் ஒன்றையாதல் வாசிக்காமல் விடுபவர் ஈழத்து இலக்கியத்தின் வாசிப்பனுபவத்தில் குறைவை விட்டுச் செல்பவர்.
“ஒரு ஆக்க இலக்கியம், எழுத்தாளனுடைய மனத்திலே ஒரு நல்ல கருத்து குடிபுக, அவன் அந்தக் கருத்தைச் சுவையான முறையிலே வெளிப்படுத்துக்கின்றான். வெளிப்படுத்தும் உருவம் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று யாரும் கட்டுப்பாடு செய்ய முடியாது. நல்ல ஆக்கமானால் அந்த ஆக்க இலக்கியம் விலை போகும். மக்களிடையே பேசப்படும். அதைப்பிறகு ஆய்வு செய்யும் இலக்கணக்காரர்கள் அந்த உருவத்துக்கு ஒரு பெயர் வைக்கட்டும்.” – வரதர்
திசை புதிது இதழ்-1 (2003) இல் வெளிவந்த வரதர் குறித்த ஆக்கம்
(எழுத்தாக்கம் கோபி)
மூத்த எழுத்தாளர் வரதர் ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று ‘வரதர்’ என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர். ‘வரதர்’ என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார்.
சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச – புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த ‘கல்யாணியின் காதல்’ வரதரின் முதற் சிறுகதை.
தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது. 1943. 06. 13 இல் ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்’ உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர். இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய ‘ஓர் இரவினிலே’ எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் ‘மறுமலர்ச்சி’ எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது.
1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர். மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார். 1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை ‘மறுமலர்ச்சி’ 24 இதழ்கள் வெளியாகின.
ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது. 1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர். 1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட ‘தேன் மொழி’யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.
இவை தவிர ‘வெள்ளி’ எனும் சஞ்சிகையும் ‘புதினம்’ எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின. வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் ‘வரதர் வெளியீடு’ ஆக வெளிவந்தன.
‘வரதரின் பல குறிப்பு’ அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின. வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம். வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர். வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு ‘சாஹித்திய இரத்தினம்’ எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.
கானா பிரபா
]]>
“முகடு” படைப்பகத்தின்
“மாவீரர் போற்றி அகவல்108”
இசை-வேதியன்
பாடியவர்-ராகுல்
வரிகள்
ப.பார்தீ 1-40,81-108
யோகு அருணகிரி 41-60
வாகைக்காட்டான் 61-80
ஒளித்தொகுப்பு -சங்கர்
நிதிக் கொடையாளர்
துரை உமாதரன்

தமிழ் மக்களாகிய எமது விடுதலைக்கான இலக்கு நோக்கிய பயணத்தில் தம் இன்னுயிர்களை இனத்துக்காய் ஈகம்செய்த மாவீரர்களைப் போற்றும் முகம்மாக “முகடு படைப்பகம்””மாவீரர் போற்றி அகவல் 108″என்னும் போற்றி பாமாலையை 23-11-2020 அன்று வெளியிடுகின்றது.பாமாலை மாவீரர் நாள் நிகழ்வுளிலும் வீடுகளிலும் மக்கள் நேரடியாக பயன்படுத்தமுடியுமென்றும்.விற்பனை நோக்கில் யாரேனும் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதையும்.பாடலின் உரிமம் முகடுபடைப்பகத்திற்குரியது என்பதை அறியத்தருகின்றோம்.
அத்தோடு பாடலின் பங்காளர்களுக்கு முகடுபடைப்பகம் வாழ்துக்களை தெரிவித்துகொள்கின்றது.
“முகடு” படைப்பகத்தின்
“மாவீரர் போற்றி அகவல்108”
இசை-உமா சதீஸ்
பாடியவர்-ராகுல்
வரிகள்
ப.பார்தீ 1-40,81-108
யோகு அருணகிரி 41-60
வாகைக்காட்டான் 61-80
ஒளித்தொகுப்பு -சங்கர்
நிதிக் கொடையாளர்
துரை உமாதரன்
அது குறித்தே பாவலர் தவ சஜிதரன் எழுதிய தமிழ்த்தாய் அந்தாதி பற்றி முன்னர் எழுதியிருந்தேன்.
பாவலர் தவ சஜிதரனின் தமிழ்த்தாய் அந்தாதியை, தமிழில் மரபுக்கவிதை வடிவங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு முன்னெடுப்பாக நாம் பார்க்கலாம். விரிவான மொழியறிவும், பரந்த சொல்லறிவும், ஆழமான யாப்பிலக்கணத் தெளிவும் இருக்கும் ஒருவர் கையில் இந்தப் பணியைக் காலம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சி.
முன்னமே நான் கூறியதுபோல, மரபுக் கவிதை யாப்பு பற்றிய கல்வி, யாக்கும் கல்வி மட்டுமன்று. இருக்கும் பாடல்களை ரசிக்க உதவும், சந்தத்துடன் பாட உதவும், பொருள் பிரிக்க உதவும் கல்வி. யாப்பிலக்கணம் அறிந்தோர் வெகு சிலரே. அதைப் போதிக்கும் மனம் கனிந்தோர் அதிலும் குறைவே.
திரு தவ சஜிதரனின் மொழியகத்தில் (https://moliyagam.org/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D) செய்யுட் கவிதை நுட்பமும் சொல்லித் தருகிறார். ஒரு நீண்டகால நோக்கில், நெடும் தமிழ்ப் பணியின் தொடக்கமாகத் தான் இந்தத் தமிழ்த்தாய் அந்தாதியை ஆரம்பித்திருக்கிறார் என்று உணர முடிகிறது.
வெவ்வேறு காரணங்களால், வெவ்வேறு தளங்களில் தமிழின் இருப்பை உறுதி செய்யும் கடமையை காலம் நமக்கு வழங்கியிருக்கிறது.
தமிழ் வாழும்.

கீழே இருப்பது தமிழ்த்தாய் அந்தாதியின் இரு பாடல்களின் ஒளி வடிவம்.
Music & vocal:
Sathish Ramdas
Lyrics:
Thava Sajitharan மொழியகம்
Featuring
Kavya Sathiyadas
Editing & graphics:
Thilojan VM

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமேஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
]]>

ஈழத்தமிழ் அறிவுலகத்தினருக்குள் நிகழும் இணைய விவாதமாக அண்மைய நாட்களில் ஒரு விவகாரம் பேசப்பட்டு வருகிறது.அதாவது 2003ம் ஆண்டில் நிகழவிருந்த யாழ்ப்பாண நூலகத் திறப்பு விழா பற்றிய உண்மைகளுக்கும் பொய்களுக்கும் -சர்ச்சைகளுக்கும் இடையே நடக்கும் விவாதமாக அது உருப்பெற்று இருக்கிறது.அதன் மையமாக சாதியம் பேசுபொருளாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் சமூக அடுக்குகளில் ஒடுக்கும் சாதியாகவிருக்கும் “வெள்ளாள” சமூக ஆதிக்கமும் – இந்நிலை தொடர்பாக புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் நிறையப் பதிவுகளும் -கட்டுரைகளும் – கட்டுரைகள் என்ற பேரில் எழுதப்படும் சலம்பல்களும் குவிந்தவண்ணமிருக்கின்றன.
எழுத்தாளர்களான ஷோபாசக்தி- சயந்தன் மற்றும் ஆவணப்பட இயக்குநரான சோமிதரன் ஆகிய மூவரின் பெயரும் இந்த விவாதங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளன.ஈழப்பிரச்சனையின் உள்ளக சிடுக்குகளும் -மோதல்களும் – வரலாறுகளும் தெரியாதவொருவரால் இந்த விவாதங்களின் மொத்த பேருருவத்தையும் கண்டுணரமுடியாது என்றே கருதுகிறேன்.ஒரு புனைவை படிப்பது போல இந்தப்பிரச்சனை தொடர்பாக எழுதப்படும் பதிவுகளை படித்துவிட்டு “அபாரம் தோழர்”,”அற்புதம் ” என்றெல்லாம் கருத்து இடமுடியாது.எழுத்தாளர் ஷோபாசக்தியினதும் சயந்தனினதும் புனைவுலகத்திற்கான வாசகர்களைக் கடந்த -ரசிக சபையினராலும் இதனை விளங்க முடியாது. இப்போது நடந்துவருவது ஒரு இரத்த சாட்சிக்கு முன்னால் கருகிப்போகும் பொய்களின் மூச்சிழுப்பு.அந்தப் பொய்களின் சீவன் சேடம் இழுக்கும் காட்சிகளே இப்போது நடப்பது யாவும்.”இதுதான் நடந்த கதை”.
![]() |
| எழுத்தாளர் ஷோபாசக்தி |
![]() |
| எழுத்தாளர் சயந்தன் |
![]() |
| ஆவணப்பட இயக்குநர் சோமீதரன் |
யாழ்ப்பாண பொதுநூலகம் சிங்கள இனவெறிக் காடையர்களால் எரிக்கப்பட்ட வரலாற்றுத் துயரத்தை அறியாதார் எவர்?இருபதாம் நூற்றாண்டில் இவ்வுலகில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் முக்கிய சாட்சியது.இன்றைக்கு முப்பத்தொன்பது ஆண்டுகள் கடந்தாலும் அன்று எரிக்கப்பட்ட பல இலட்சம் நூல்கள் கொண்ட தமிழ் நூலகத்தின் சாம்பலில் தீ கனன்று கொண்டேயிருக்கிறது.யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் விளைவு ஈழத்தவரின் விடுதலைப் போராட்ட அவசியத்தையும் அடிப்படைத் தேவையையும் தமிழ்மக்களுக்கு உணர்த்திற்று.
அந்தக் கொடுந்துயரைத் தமிழ்த்தரப்பிற்கு செய்தமைக்காக இன்றுவரை சிங்கள அதிகாரத் தரப்பு ஒரு மன்னிப்பைக் கூட உதிர்த்ததில்லை என்பதையும் சுட்டுகிறேன். அதேவேளை நூலக எரிப்பு வடுவை கலை இலக்கியப் படைப்புக்களில் பலர் பதிவு செய்துள்ளனர்.கவிஞர் நுஹ்மானின் கவிதை,எழுத்தாளர் சுஜாதாவின் “ஒரு லட்சம் புத்தகங்கள்”,அமெரிக்க அறிஞர் நெவே எழுதிய “நம்பிக்கையென்ன நமக்கு” என்ற கவிதையை சோ.பத்மநாதன் மொழிபெயர்த்திருந்தார்.“The Jaffna Public Library rises from its ashes” என்ற ஆவணநூலினை வி.எஸ்.துரைரராஜா அவர்களும், “எரியும் நினைவுகள்” என்ற பேரில் மிகமுக்கியதொரு ஆவணப்படத்தினை சோமிதரன் அவர்களும் உருவாக்கி இருக்கின்றனர்.இந்த வடு இனிவரும் இலக்கியப் படைப்புக்களிலும் ஒரு முக்கிய பேசுபொருளாக தொடரும் என்பது எனது துணிபு.

எரியும் நினைவுகள் ஆவணப்படம் –https://www.youtube.com/watch?v=8kY0_Q0XYUM&t=242s
1981ம் ஆண்டில் எரியூட்டப்பட்ட நூலகத்தை “புனரமைக்கப்பட்ட யாழ் பொதுசன நூலகம்” என்ற பெயர் சூட்டலோடு திறப்புவிழா செய்வதற்கு எண்ணியது சந்திரிக்காவின் ஆட்சிக்காலம். ”சமாதானத்தின் தேவதை” என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு சர்வதேச சமூகத்தையும் தமிழர்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் வல்லமை பெற்ற ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் 14.02.2003ம் ஆண்டில் நடக்கவிருந்த நூலகத் திறப்பு விழா தொடர்பாக ஈழத்தமிழ் அரசியலில் நிகழ்ந்த குழப்பங்கள் ஏராளமானவை.அப்போது நிலவிவந்த அமைதிச்சூழலில் அரசுக்கும்- புலிகளுக்கும் இடையே நிகழ்ந்துவந்த புகைமூட்டமான பகைமூர்க்கத்தில் அப்பாவி பொதுசனங்கள் நெருக்கடியினை எதிர்கொண்டனர்.
சமாதான காலமென அறிவிக்கப்பட்டிருந்த நாட்களில் இந்த திறப்புவிழா அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது யாழ்ப்பாண நகர பிதாவாக இருந்த பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அவர்களின் அழைப்பின் பேரில் அப்போது இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தமிழ் அரசியல்வாதியான திரு. வீ.ஆனந்தசங்கரி அவர்கள் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தை திறந்துவைக்க இருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு முறுகல் போக்கையும்,எப்போதும் இலங்கை ஆட்சியாளர்களோடு நெருக்கத்தையும் பேணிவரும் குறித்த அரசியல்வாதி எரிக்கப்பட்டவர்களாலேயே புனரமைக்கப்பட்ட் யாழ்ப்பாண நூலகத்தை திறந்துவைப்பதை புலிகள் இயக்கம் விரும்பவில்லை. மேலும் சிங்கள இனவெறி அரசின்/சிங்கள மக்களின் இனவெறிக்கும் சாட்சியாக இருந்த எரியூட்டப்பட்ட தமிழர் நூலகத்தை சுண்ணாம்பினால் வெள்ளைபூசி தடயம் அழிக்கும் செயற்பாட்டையும் யாரும் விரும்பவில்லை.
யாழ்ப்பாண நூலக எரிப்பு என்பது தமிழர்களின் அறிவுலக மரபின் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு பண்பாட்டழிப்பு என்பதில் தமிழர்கள் அனைவரும் தீர்மானமாய் இருந்தனர்.அந்தப்புள்ளியில் புலிகளும் நின்றனர்.ஆக புலிகள்,இந்தத்திறப்பு விழாவில் ஆனந்தசங்கரி பங்கெடுப்பதை விரும்பவில்லை என்பதைபோலவே ஒரு இனஅழிப்பின் சாட்சியாக இருந்த நூலகத்தை புதுப்பிக்கவும் விரும்பவில்லை.வெகுஜன அமைப்புக்கள் பலவும் – அறிவுப்புலத்தினர் பலரும் இந்த நிகழ்வுக்கு எதிராக ஒன்றுதிரண்டு நின்றனர். இப்பின்னணியில் அந்தநிகழ்வு தடுத்துநிறுத்தப்பட்டது.
இதுவொரு பாதிக்கப்பட்ட தரப்பின் குரல் பொதிந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழிமுறையாக கருதலாம்.அதாவது ஒருஅறிவுலகச் சொத்தாக இருந்த யாழ்ப்பாண நூலகத்தை சிங்கள இனவாதம் எரியூட்டியதை தமிழர்கள் அழித்தொழிப்பின் நினைவாகவே அடையாளப்படுத்த விரும்பினர்.அதுவே இந்நிகழ்வு தடைப்பட்டு போனதற்கு காரணம்.
2
யாழ் நூலகத்திறப்பு விழாவின் (2003)வரவேற்புக்குழுவின் தலைமையாகவும் யாழ்ப்பாண நகரபிதாவாகவும் இருந்த பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அவர்கள் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனாலும்,அவர் இந்த நூலகத்தை திறந்து வைத்தால் ஒரு ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் வரலாற்றில் நிலைத்துவிடுமென எண்ணிய யாழ்ப்பாண வெள்ளாளச்சாதி ஆதிக்கவாதிகள் கூட்டுச்சேர்ந்து புலிகள் இயக்கத்தினருக்கு அழுத்தம் தருவித்ததன் விளைவாக புலிகள் இயக்கம் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்தியது என புலியெதிர்ப்பு நிலைப்பாடுடைய பலர் எழுதினர்.
மேலும் தமது புலியெதிர்ப்புக் கத்தியை கூர்மைப்படுத்தும் நோக்கில் ஒடுக்கப்படும் சாதியினரின் வாழ்க்கையை சாணைக்கல்லாக பயன்படுத்தினர்.
அதாவது புலிகள் இயக்கமென்பது ஒடுக்கப்படும் சாதியினருக்கு எதிரானது -ஆகவே தாம் புலிகளை எதிர்க்கிறோமென வாய்நீட்டி முழங்கினர்.இங்கே இவர்களின் புலியெதிர்ப்பு அரசியல் என்பது மாபெரும் வலைப்பின்னல் கொண்டது.அது ஈழம் தொடங்கி – தமிழகம் என தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் வரை கண்ணுக்குத்தெரியாத பல கண்ணிகளோடு தொடர்புகொண்டவை.இவர்களின் புலியெதிர்ப்பு பிரச்சாரம் – தமிழக அறிவுப்புலத்தில் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.அ.மார்க்ஸ் போன்றவர்கள் ஈழமெனும் யானையை இவர்கள் வழியாகவே கண்டனர்.புலிகள் ஒரு வெள்ளாள சாதி அமைப்பு என்று தமிழகத்தின் சி.பி.எம் இடதுசாரிகளுக்கு இவர்களே வகுப்புக்கள் வழங்கினர்.
இப்படியான வலைப்பின்னல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் குற்றங்களின் வரைபடத்தை காலம் என்றோ ஒருநாள் வரலாற்றின் முன்னால் வைத்து தீரவிசாரிக்குமென்று நான் சொல்லுவதுண்டு. அந்தக்கூற்றின் அளவு சமுத்திரமெனில் இப்போது நிகழ்ந்திருப்பது அங்கே சிறிய நீர் வளையம் மட்டுமே.
அதாவது திறப்புவிழாவில் நடந்த பல்வேறு குழப்பகரமான சம்பவங்கள் குறித்து இற்றைக்கு பதினேழு வருடங்களாக நிறையக்கட்டுரைகளும்,பதிவுகளும் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.அதில் முக்கியமான/பொருட்படுத்தக்கூடிய கட்டுரை எழுத்தாளர் ஷோபாசக்தியினுடையது.அந்தக் கட்டுரையில் தகவற்பிழைகளும் இட்டுக்கட்டிய கதைகளும் நிறைய இருப்பினும் “வசந்தத்தின் இடிமுழக்கம்” கட்டுரையில் உண்மைகளும் அதிசயமாக உண்டு. இணைப்பு :http://www.shobasakthi.com/shobasakthi/2007/02/23/81/
இந்தத் திறப்புவிழா விவகாரத்தை முன்வைத்து அப்போதைய யாழ் தினக்குரலில் வெளியான கேலிச்சித்திரம் அவமானத்திற்குரியது.சமூக நீதிக்கு எதிரானது.சாதிவெறியின் கோடுகள்.மானுடத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் எக்காலத்திற்கும் வெட்கி தலைகுனியவேண்டிய ஒன்று.அதனை ஷோபாசக்தி திகதியின் சாட்சியோடு குறிப்பிட்டிருப்பார்.அந்த வகையில் அவருடைய இந்தத் தகவலில் இப்போதும் மறுப்புச் சொல்வோர் இருப்பின் அவர்களே சாதியவாதிகள் என்பது எனது தரப்பு.
இந்தச் சம்பவத்தை அடியொற்றி “யாழ் நூலகத்திறப்பு விழாவும் சாதி வெறியர்களும்” எனஎழுதப்பட்ட அதே பகுதியில் எத்தனையோ தகவற்பிழைகளும் பொய்களின் இடிமுழக்கமும் . அந்த பிழைகளும் பொய்களுமே இப்போது நிரூபணமாகி இருக்கின்றன.அதாவது ஷோபாசக்தி தனது கட்டுரையில் குறிப்பிடுவதைப் போன்று நகரபிதா செல்லன் கந்தையன் புலிகளால் மிரட்டப்பட்டு பூட்டிய அறையில் கடுமையாக எச்சரிக்கப்பட்டாரா? உண்மையில் வெள்ளாள ஆதிக்கவாதிகள் இந்த நிகழ்வை வேண்டாமென மறுத்தார்களா? அவர்கள் மறுத்ததன் பேரில்தான் இந்த திறப்புவிழா தடைப்பட்டு போனதா? என கேள்விகள் எழும். எழுவதே நன்று.கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள் தனமானவை என்ற மால்கம் எக்சை இங்கே நினைவு கூர்கிறேன்.
அப்படி கேள்வி எழுந்ததன் விளைவாகவே எழுத்தாளர் சயந்தனும் ஆவணப்பட இயக்குநருமான சோமிதரன் ஆகியோர் இந்த அறிவுப்புல அரசியல் வரலாற்றின் பிரதான பேசுபொருளாக இருந்த நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை ஆவணப்படம் செய்வதற்காக பதியப்பட்ட காணொலியின் பகுதியிலிருந்து மூன்று நிமிட காணொலியை ஒரு செய்திக் காணொலியாக இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்தக் காணொலியில் “யாழ் நூலகத்திறப்பு விழா “ பற்றிய சர்ச்சைகள் தொடர்பாக எழுத்தாளர் ஷோபாசக்தி உள்ளிட்ட புலியெதிர்ப்புவாதிகள் முன்வைத்த சம்பவங்கள் கேள்வியாக தொடுக்கப்படுகின்றன.
பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அதனை அடியோடு மறுத்து அப்படியான எந்தச்சம்பவங்களும் மிரட்டல்களும் புலிகளால் தனக்கு வழங்கப்படவில்லை என கூறுகிறார்.மேலும் புலிகளுக்கும் அவர்களுடைய நடவடிக்கைகளுக்கும் எதிராக முறுகல் போக்கோடு இருந்த ஆனந்தசங்கரி நூலகத்தை திறந்து வைப்பதையே புலிகள் விரும்பவில்லை,அதனை தன்னிடமே கூறினார்கள் எனவும் மிக விளக்கமாக கூறுகிறார்.
அப்படியாயின் ஷோபாசக்தி எழுதிய சம்பவங்கள் பொய்யானவை மட்டுமல்ல அதன்பின்னால் ஒரு சதிவலையும் – புலியெதிர்ப்பு அணியின் தந்திரங்களும் நிறைந்திருக்கிறது.
நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை சாதிய ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டனர்.புலிகள் ஒடுக்கப்படும் சாதியினருக்கு எதிரானவர்கள் என்ற பொய்யான கருத்தியலை உருவாக்கும் ஒரு செயற்திட்டம் மறைந்திருந்திருக்கிறது. சாதிய ரீதியாக ஒடுக்கப்படும் சனங்களின் மீட்சிக்குரல்களுக்கு ஆதரவாளர்களாக தம்மைக்காட்டி நிற்கும் இவர்களின் போலி முற்போக்குத்தனங்கள் புலியெதிர்ப்புவாத சந்தையில் பண்டமாகி நாட்கள் ஆகிவிட்டன.இவர்களின் போலிச் சாதி எதிர்ப்புக் கோஷங்களுக்கு பின்னால் எத்தனை எத்தனை சூதுகள் – எத்தனை எத்தனை லாபங்கள். இன்னும் எத்தனை எத்தனையோ. யான் அறியேன் பராபரமே.
இனிவரும் பகுதிகளை செவியுள்ளோர் கேட்கக்கடவர்.
3
யாழ்ப்பாண நூலகத்தினை 2003 ஆம் ஆண்டில் திறந்து வைக்கவிருந்தவர் அன்றைய நகரபிதாவான பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் இல்லை.தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி அவர்களே.அவரொரு ஈழத்தமிழ் மிதவாத அரசியல்வாதி.அவர் சமூக அடுக்கில் ஒடுக்கும் சாதியான வெள்ளாளர். ஆக யாழ்ப்பாண நூலகத்தினை 2003ல் திறந்துவைக்க இருந்தது வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியே தவிர,ஒடுக்குமுறைக்குள்ளான சமூகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரபிதாவாக இருந்த திரு .செல்லன் கந்தையன் அவர்கள் இல்லை என்பதே பேருண்மை.அதற்கு சான்றாக அந்த நிகழ்வின் அழைப்பிதழை இணைக்கிறேன்.
அதேநேரத்தில் நகரபிதா செல்லன் கந்தையன் அவர்கள் இருந்த அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்தவர் வீ.ஆனந்தசங்கரி.அவரை அழைத்துவந்து இந்த நூலகத்தை திறந்துவைக்க நகரபிதா செல்லன் கந்தையன் விரும்பியிருக்கலாம்.அல்லது அப்போது ஆனந்தசங்கரியின் நெருக்குதலின் பேரில் கூட அவரை அழைத்திருக்கலாமல்லவா?
உண்மையில் இந்த நூலகத்தை இதற்கு முன்னைய காலங்களில் ஒரு அரசியல்வாதி திறந்து வைத்தது கிடையாது.பதவியில் இருந்த நகரபிதாக்களே திறந்தனர்.அப்படியெனில் இந்த மரபு மீறப்பட்டதன் பின்னால் எந்த நெருக்கடிகளும் இருந்திருக்காதா?இந்தப் பிரச்சினையில் குரலுயர்த்தும் இந்தப் போலிச்சாதிய ஒழிப்பாளர்கள் ஒரு சொல் வீசி ஆனந்தசங்கரியை கேள்வி எழுப்ப விரும்பார்.ஏனெனில் புலியெதிர்ப்பும் -அவர்களின் சுயசாதியக் கூட்டும் அவர்களிடம் இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக தம்மை அடையாளப்படுத்தும் இந்தப் போலிக் கருத்தியல்வாதிகள் தமக்குள்ளும் தமது குருதிக்குள்ளும் ஒடுக்கும் -ஆதிக்கம் செலுத்தும் மரபையே கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் இற்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக விவாதித்து வருவதோடு இந்தப் பொய்களை இன்று இரத்தச் சாட்சியோடு அடையாளப்படுத்திய எழுத்தாளர் சயந்தனும் – சோமிதரனும் புலியெதிர்ப்புவாத – போலிச் சாதியொழிப்புவாதிகளால் சீண்டப்படுகின்றனர்.அத்தோடு அவர்கள் எழுத்தாளர் சயந்தனையும் – ஆவணப்பட இயக்குநர் சோமிதரனையும் நோக்கி எழுப்பும் கேள்விகள் பரிதாபகரமானவை.
ஏன் இந்தத் தள்ளாத வயதில் இருக்கும் முன்னாள் நகரபிதாவை போய் நேர்காணல் கண்டீர்கள்? ஏன் நேர்காணல் செய்பவரின் முகத்தைக் காட்டவில்லை?நேர்காணல் செய்தவருக்கு சம்பளம் கொடுத்தீர்களா? ஆவணப்படம் எப்படி எடுப்பதென சோமிதரனுக்கு தெரியாதா? ஏய் யாழ்ப்பாணத்து சாதி வெறியர்களே,இன்னும் எத்தனை எத்தனை வீடியோக்களை எடுப்பீர்கள் என கேட்கும் பலரும் அந்த மூன்று நிமிட காணொலிச் சாட்சியைப் பற்றியே பேசுகிறார்கள்.
அதில் செல்லன் கந்தையன் இன்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அன்று சொன்னது தான் உண்மை என மல்லுக்கு நிற்கும் கல்விமான்களும் – எழுத்தாளர்களும் -எதிர்புரட்சியாளர்களும் -ஒத்தோடிகளும் மாறி மாறி எழுதும் பதிவுகளைக் கண்டால் உண்மைக்கு எத்தனை வீரியம்,அது அநீதியாளர்களையும் இட்டுக்கட்டுபவர்களையும் குலைநடுக்குவிக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.அப்படியென்ன? செல்லன் கந்தையன் கடந்த காலத்தில் சொன்னார்.
“யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் செல்லன்கந்தையன் 01.03.2003ல் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்குவழங்கிய செவ்வியிலிருந்து ஒரு பகுதி: “இந்த நூலகம்திறக்கப்படுவதால் புலிகளுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. அவர்கள் நூலகம் திறப்பதைத் தடுத்ததிற்குப் பின்னால்வேறோரு காரணமுள்ளது என்றே நான் கருதுகிறேன். நான்இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்துள் ஒரு சிறுபான்மைச்சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் பொதுநூலகத் திறப்புவிழாக்கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின்பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம்புலிகள் முற்று முழுதாகச் சாதிய அடிப்படையிலேயே இப்பிரச்சினைகளை அணுகினார்கள் என்றே நான்நினைக்கிறேன்”.
நகரபிதா அவர்களின் இந்தக்கூற்று ஆனந்தசங்கரியின் அழுத்தத்தின் பேரில் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கலாம்.பழுத்த மிதவாத அரசியலாளரின் திட்டமிட்ட புலியெதிர்ப்பு சூழ்ச்சி அரசியலுக்கு நகரபிதா செல்லன் கந்தையன் அழுத்தங்களை எதிர்கொண்டு இப்படியாக கூறியிருக்கலாம்.
ஒடுக்கப்படும் சமூகத்திற்கு புலிகள் அநீதி இழைத்துவிட்டதாக ஒரு சித்திரத்தை உருவாக்க யாழ்ப்பாண வெள்ளாள மிதவாத அரசியல் வெட்டிய அகழியாகவும் கருதலாம்.இவற்றைக்கடந்து கடந்தகாலங்களைப்போல எந்த அரசியல் நெருக்கடியும் இல்லாதவொரு காலத்தில் அரசியல்களத்தில் சம்பந்தப்பட்ட புலிகளுமில்லை – ஆனந்தசங்கரி இப்போதுவரை அதிகாரத்திலுமில்லாத இன்றைய நாட்களில் முன்னாள் நகரபிதா இதுகுறித்து கூறியிருக்கும் கருத்தினை நாம் பொருட்படுத்தவேண்டும்.
அவர் அப்போது பேசியதை மட்டுமே தமது பொய்பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய சாராருக்கு இந்தக் கூற்றின் மூலம் நகரபிதா செல்லன் கந்தையன் கொஞ்சம் கசப்புமிக்க ஒருவராக ஆகியிருக்கிறார்.ஆனால் எழுத்தாளர் சயந்தனும் -ஆவணப்பட இயக்குநர் சோமிதரனும் இந்தக் காணொலியின் மூலம் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சமல்ல.
எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்கள் இந்தச் சர்ச்சைக்குரிய கட்டுரையில் ஏற்பட்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தகவற்பிழைகளை ஒப்புக்கொண்டு அதனை இப்போது தனது இணையத்தளத்தில் மாற்றம் செய்துமிருக்கிறார். ஆனால் ஒருவர் யாரென்று தெரியாமல்,அவர் ஒருவரா இருவரா என்று தெரியாமல் கூட ஒரு திரில்லர் வகையான புனைவாக ஷோபா இவ்வாறு எழுதியிருப்பார்.
“12.02.2003 வன்னியில் இருந்து வந்திருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் சொலமன் , இன்னொரு புலி உறுப்பினர் சிறில், மற்றும் இன்றைய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புலிகளின்முன்னணி அமைப்பான சர்வதேச மாணவர் பேரவையின்அன்றைய தலைவருமான கஜேந்திரன் ஆகியோர் மாநகரசபை அலுவலகத்திற்குள் நுழைந்து நூலகத்தை திறக்கக்கூடாது என செல்லன் கந்தையனை எச்சரித்தனர்.அன்றிரவுபதினொரு மணியளவில் புலிகள் யாழ் பொதுநூலக வளாககாவலாளியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவரிடமிருந்து பிரதான வாயிற்சாவி,நூலக மற்றும் அலுவலகசாவிகளை அபகரித்துச் சென்றனர்.”
இப்போது இதில் இருக்கும் பிழைகளும் -கருத்தியல் மோசடிகளும் எவ்வளவு பாரதூரமானவை என்று பார்த்தால் விடயம் விளங்கிவிடும்.வன்னியில் இருந்து வந்தவர்களாக சொல்லப்படும் “சொலமன், சிறில்” முதலில் புலிகள் இயக்க உறுப்பினர் அல்லர்.அவர்கள் இரண்டுபேர் அல்ல.சொலமன் சிறில் என்ற பேர்கொண்ட ஒருவரை இருவராக்கி அவரை புலியாக்கி எழுதப்பட்டிருக்கும் இந்த விநோதமான தகவற்பிழையை ஷோபா ஒப்புக்கொண்டு இப்போது மாற்றம் செய்திருக்கிறார்.அதாவது ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குவது போல எழுதப்பட்ட இந்தக் கட்டுக்கதையில் இப்படி எத்தனையோ தகவற்பிழைகளும் -கண்மூடித்தனமான புலியெதிர்ப்பு பிரச்சாரங்களும் தான் எஞ்சி நின்றன.
நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை விடுத்து -இந்த விவாதத்தின் பிரதான இடம்வகிப்பவருமான ஊடகவியலாளர்,ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் யாழ் நூலக திறப்புச் சர்ச்சையில் நேரடிச்சாட்சியாக இருப்பவர்.அந்தக் காலகட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையொன்று இதற்கு இன்னுமொரு ஆவண சாட்சி.
அதுமட்டுமல்லாது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக புலிகள் செல்லன் கந்தையன் அவர்களை மிரட்டவில்லை என்பதை தொடர்ச்சியாக முகநூல் -மற்றும் இதர சமூக வலைத்தள விவாதங்களில் ஸ்தல சாட்சியாக நின்ற சோமிதரன் கூறிவந்த போதிலும் புலியெதிர்ப்புவாத – போலிச்சாதி ஒழிப்பாளர்கள் இல்லையில்லை புலிகள் மிரட்டினர்-அடித்தனர் என மல்லுக்கு நின்றதன் நீட்சியாக இப்போது அந்த மூன்று நிமிடச் சாட்சிக் காணொலி வெளியாகி இருக்கிறது.
இப்போது என்ன தான் பிரச்சினை?
பிரச்சனையானது எழுத்தாளர் ஷோபாசக்தியின் கட்டுரையில் நிகழ்ந்திருக்கும் தகவற்பிழையை அடிப்படையாக கொண்டது.புலிகள் இயக்கத்தின் மீது கொண்டிருக்கும் காழ்ப்பையும் அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஒடுக்கப்படுவோரின் அரசியலை ஊறுகாய் போல தொட்டுக்கொள்வது.இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களே அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொன்னதற்கு பிறகு -இவர்கள் கொள்ளும் பதைபதைப்பும் இவர்கள் எழுதும் பதிவுகளும் எத்தனை எத்தனை வேஷங்களை தோலுரித்து விட்டது காணீர்!.
4
நீங்கள் என்ன சொல்ல வருகிறியள்?
ஓம் சொல்லுகிறேன்,கேளுங்கோ.
1
இந்த மூன்றுநிமிட காணொலிச்சாட்சியம் இப்போது புலியெதிர்ப்புவாத அரச ஆதரவு தமிழ் பாசிஸ்டுகளுக்கும் ஒத்தோடிகளுக்கும் கடுமையான கொதிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.ஷோபாசக்தியின் இப்படியான தகவல் பிழைகளும் திட்டமிடப்பட்ட நோக்கங்களும் – பொய்களும் இப்போது விழிபிதுங்கி நிற்கின்றன.சாதியொழிப்புச் செயற்பாட்டாளர்கள் என்று தம்மை சொல்லிக்கொண்டு அதனை தமது புலியெதிர்ப்பு வாத சந்தர்ப்பவாத அரசியல்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் அனைத்து யாழ்ப்பாண மேட்டுக்குடி வெள்ளாள சாதிய நோய்மை கொண்ட அறிவுஜீவிகளும் இப்போது அடைந்திருக்கும் பதற்றத்தை பார்க்கையில் உண்மைக்கு எத்தனை வல்லபம் என்று மகிழ முடிகிறது.இவர்களில் பெரும்பாலானோருக்குள் “நிலவிலே பேசுவோம்”மனநிலை இருப்பதை நம்மால் உணரமுடியும்.ஒடுக்கப்படும் சமூகத்திற்கான குரல்களாக தம்மை வெளிப்படுத்தும் இவர்களுக்குள் சுருண்டுகிடக்கும் சாதிவெறி அரவத்தின் கோரப்பற்களை யாம் அறிவோம்.
2
இந்த விவாதமொரு எடுத்துக்காட்டு -தனிமனித தாக்குதல்கள் -வசைகள் ஏதுமற்று நிகழ்த்தப்படும் ஒரு அரசியல் -சமூக -விமர்சன விவாதமாக உருக்கொண்டு நிற்கிறது. ஆகையால் இந்த விவாதம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.இங்கே யாரும் யாரையும் காழ்ப்போடும் வசவுகளோடும் சீண்டவில்லை.அப்படி அவதூறுகளால் எழுதப்படும் வசைச்சொற்களை இந்த விவாதம் தூக்கி வீசுகிறது. இங்கே இனியொரு அந்தப் வசைப்பண்பாட்டிற்கு இடமில்லை.அவரவர் தரப்பில் நின்றுகொண்டு மிகப்பிடிவாதமாக கதைத்துக்கொண்டிருக்கின்றனர்.இங்கே நிகழ்வது விவாதம். காழ்ப்பின் வேட்டை அல்ல.இந்தச் சம்பவத்தை முன்வைத்து எழுத்தாளர் ஷோபாசக்தி மீது தொடுக்கப்படும் காழ்ப்பையும் -வசவுகளையும் அடியோடு மறுக்கிறேன்.அப்படியான போக்குகள் நமது உரையாடல் பண்பாட்டின் மீது கறைபடியும் செயல். இப்படியான வசவுகளை எந்தத் தரப்பிலிருந்து யார் நிகழ்த்தினாலும் அதனை கண்டிக்கவேண்டிய பொறுப்பு நாகரீக சக்திகளுக்கு இருக்கிறது.இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக என் மீதும் வசவுகளும் -காழ்ப்புகளும் எழுதிக்குவிக்கப்படும் என்பதை அறிந்தும் நான் இதனைச் சுட்டுகிறேன்.
இந்த விவாதத்தில் எங்கும்போல இங்கும் இரண்டு தரப்புதான்.உண்மை – பொய். நான் திரு.செல்லன் கந்தையன் தரப்பு.அதாவது உண்மையின் தரப்பு.. புலிகள் சாதியவாதத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றதில்லை.புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால அபிமானிகள் பலர் அமைப்பிலிருந்து பிளவுண்டு போனதற்கான காரணங்களில் புலிகளின் சாதிக்கு எதிரான நிலைப்பாடே காரணம்.வெள்ளாளத் தலைமையற்ற ஒரு விடுதலை இயக்கமாக புலிகளே இருந்தனர்.அந்தத் தலைமையின் கீழ் ஓரினமாய் அணிதிரண்டனர் ஈழச்சனங்கள் என்பதே விடுதலைப் போராட்ட வரலாறு.
3
மேற்கொண்டு இந்தக்கட்டுரையை நீட்டாமல் இறுவாய் ஒரு கருத்து.எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “இடக்கை” நாவலில் ஒரு காட்சியுண்டு.தனது மரணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மன்னர் ஒளரங்கசீப் பாலைவனத்தில் உள்ள ஞானி முகைதீன் அவர்களைச் சந்திப்பார்.மன்னரின் பல வேண்டுதல்களுக்கும் இறைஞ்சுதல்களுக்கும் பிறகு அதுவரை அதனைச் சொல்ல மறுத்துவந்த ஞானி முகைதீன் சம்மதம் தெரிவிக்கிறார்.ஆனால் அதற்கொரு கைமாற்றாக பாலைவனத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து உள்ளங்கையில் நீர் எடுத்துவரவேண்டுமென ஞானி முகைதீன் கூறுவார்.மாபெரும் பேரரசின் மன்னன் அதனை மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு நான் அதனை செய்வதாக உத்தரவாதம் தருகிறார்.அதன்பிறகு நாவலில் நிகழும் காட்சி.
“திடீரென கிணற்றில் சரசரவென ஊர்ந்துவரும் சப்தம் கேட்டது.ஆச்சரியமாக இருந்தது.தண்ணீர் கிணற்றின் உச்சிவரை உயர்ந்திருந்தது.அவர் அல்லாவின் கருணைக்கு நன்றி தெரிவித்தபடியே தண்ணீரில் உள்ளங்கை அளவு அள்ளிக்கொண்டு ஞானி முகைதீனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நடக்க நடக்க கையிலிருந்த தண்ணீர் வடிய ஆரம்பித்தது.இரண்டு கைகளையும் ஒன்றாக இறுக்கிய போதும் தண்ணீர் கசிவதை நிறுத்த முடியவில்லை.ஞானி முகைதீன் முன்னால் அவர் கைகளை விரித்தபோது அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை.
முகைதீன் சிரித்தபடியே சொன்னார்.
“வெறும்கையாக உள்ளது. ஒருதுளித்தண்ணீரைக் கூடவா பாதுகாப்பாக கொண்டு வர முடியவில்லை?”
ஆத்திரமான ஒளரங்கசீப் மறுபடியும் அதே கிணற்றடிக்கு ஓடினார்.தண்ணீரை மன்றாடி அழைத்தார்.கைகள் நிறைய அள்ளிக்கொண்டார்.ஆனால் ஞானி முகைதீன் முன்னால் சென்றபோது கையில் ஒரு சொட்டுத்தங்கவில்லை.விடியும் வரை ஓடியோடி தண்ணீர் அள்ளிவந்து களைத்துப் போய் அவர் முன்னால் விழுந்த ஒளரங்கசீப் சொன்னார்.
ஒரு துளித் தண்ணீரைக் கூட என்னால் காப்பாற்ற முடியவில்லை.”
ஒரு புரிதலுக்காக, இந்த உரையாடலில் வருகிற கிணற்று நீர் – புலியெதிர்ப்பு வாதிகளின் பொய்யூற்றாகவும் – இதில் வருகிற மன்னரை புலியெதிர்ப்புவாதிகளாகவும் பொருள் கொண்டால் ஞானி முகைதீனாக உண்மை உருவகம் கொள்கிறது.உண்மைக்கு முன்னால் இவர்களின் பொய்களைக்கூட இவர்களால் காப்பாற்றமுடியவில்லை.ஏனெனில் இவர்களின் கைகளில் கறைகள் ஏராளம்.
பொய்கள் ஒழிக ! புரட்டுக்கள் ஒழிக ! போலிகள் ஒழிக! சாதிகள் ஒழிக!
என்றபடிக்கு இந்தக் கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.
-அகரமுதல்வன்
20.06.2020
]]>
மாவீரர் நாள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள் . வீரத்தையும் பிறர் வாழ்வுக்காக தம் உயிர்கொடுத்தவர்களின் அர்ப்பணத்தையும் போற்றித் துதிக்கின்ற உயர் பண்பாட்டு நாளாக இந்த நாள் உருப்பெற்று நிற்கிறது. அர்ப்பணத்தை மகோன்னதப் படுத்துகின்ற மானுடப் பண்பாடாக அறிமுகமாகி நிற்கிறது. தமிழரின் விடுதலை அரசியல் பாதையில் உயிர் ஈகம் செய்தவர்களை இருளில் ஒளியேந்தி வணங்குகிறோம். அவர்களின் அர்ப்பணத்தை இருள் சூழ்ந்த எம் இன வாழ்வுக்கான ஒளியாக கொள்கிறோம். மாவீரத்திற்கும் மகா தியாகத்திற்கும் உரித்தான நாளாக இந்நாளை மகிமைப் படுத்தி, எமது மனப் பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கின்றோம். கால நதியில் கரைந்திடாது இந்நாளையும் இப்பண்பாட்டையும் காப்போம் என உறுதிகொள்கிறோம். அது எமக்கு ஒளியாகும் என்று நம்பிக்கையும் கொள்கிறோம்
மாவீரர்களுக்கு உறவுடையோரே, உற்றவர்களே, உரித்துடையோரே !
உங்கள் தீரா துயரமும், உறவிழந்து நிற்கும் உங்கள் வாழ்வின் துயர்ப் பாடுகளும் இழைக்கப்பட்ட வஞ்சக அரசியல் குறித்து நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது; இரத்தக் கண்ணீரையே தந்து நிற்கிறது. மாவீரர்களை நெஞ்சில் சுமக்கும் அதே நேரம், உங்களை எம் தலையில் சுமக்க வேண்டும். அது ஒன்றே தக்க செயல். அதுவே தர்மமும் அறமுமாகும். அந்த அறத்தை ஏந்தியவர்களோ வாழ்வின் கடை நிலையில் காவல் வைக்கப்பட்டிருகிறார்கள். அந்த அறம் அறியாதவர்கள் முடி சூடப்பட்டிருகிறார்கள். செய்வதற்கு ஏதுமின்றி வல்லமை பறிக்கப்பட்ட எம் கரங்களை உம்முன் கூப்பி நிற்கத்தான் முடிகிறது. எம் தலைகளை உங்கள் முன் குனிந்து கொள்கிறோம். தயவுடன் எங்கள் வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இந்த வணக்க நாள் உங்கள் வாழ்வுக்கும் மதிப்பளிகின்ற மகா திருநாளே. காலச் சக்கரம் ஒருபோதும் தரித்து நிற்பதில்லை. ஒருநாள் அது எங்கள் திசை நோக்கி தன் சுழற்சியை தொடங்கலாம். உங்களுக்காய் ஒரு நல் விதியை இயற்ற கால வெளி தன் கதவுகளைத் திறக்காலாம். அப்போது எம் கடமைகளை நிறைவேற்ற காத்திருக்கிறோம்.
அன்புள்ளவர்களே !
விடுதலை என்பது அடையப் பெறும்வரை நடை போடவேண்டிய காலப்பயணம். விடுதலையை அவாவுதலே அந்த பயணத்திற்கான ஆன்ம பலம். அது ஒன்றே சுதந்திரத்திற்கான இயங்கு சக்தி. அந்த ஆன்ம பலத்தை, அந்த இயங்கு சக்தியை கொண்டு காலப் பயணம் செய்யாத எந்தத் தேசமும், எந்த மக்கள் சமூகமும் விடுதலை பெற்றதாய் உலக சரித்திரம் பதிவு செய்யவில்லை. சரித்திரத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டுதான் இந்த மானுட வரலாறு முன்னேறிவந்திருக்கிறது. தேசங்களுக்கும் மக்கள் சமூகங்களுக்கும் அதுதான் விதி. இந்த இயங்கு விதிக்கு விலக்கானது என்று சரித்திரத்தில் எதனையும் காண முடியவில்லை. விடுதலையை அவாவுதல் என்ற சுதந்திரத்திற்கான இந்த இயங்கு விதியைக் கடைபிடிக்காத எந்த மக்கள் சமூகமும் அதை அடைந்துவிட முடியாது. அதற்கான தகுதியையும் பெற்றுவிட முடியாது.
இன்று தமிழர்கள் அறுபதாண்டு காலம் முன்னெடுத்து வந்த விடுதலை அரசியல் பாதையில் தலைமைத்துவங்கள் தடுமாறி நிற்கின்றன; தளம்பி நிற்கின்றன. விடுதலை அரசியல் என்ற பயணத்தில், தம் காலத்துப் பாதையை மாயை அகற்றி உரித்துணர்ந்து பயணம் தொடரவில்லை. மக்களுக்கு வழிகாட்ட அவை தம்மைத் தகுதிப் படுத்துக் கொள்ளவுமில்லை. அறிவும் அர்ப்பணமும் அறமும் தலைமைத்துவத்திற்கு அவசியமான ஒழுக்கப் பண்புகள். இந்த உயரிய ஒழுக்கப் பண்புகளற்ற எந்த மனிதனாலும் மக்களின் விடுதலைக்கு தலைமை தாங்க முடியாது. தக்க அரசியல் இயக்கத்தை கட்டிவளர்க்கவும் முடியாது. அறிவு அர்ப்பணம் அறம் என்ற ஒழுக்கத் தகுதியற்ற எந்த அரசியல் அமைப்பாலும் மக்களுக்காக மக்களுடைய நல்வாழ்வை பெற்றுத்தந்துவிடவும் முடியாது. அடிப்படையில் அவை மக்களால் மக்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட தலைமைத்துவமாகவும் இருக்க நியாயம் இல்லை. இவை இறக்குமதி சனநாயக நாசகரப் பொறிமுறையால் மக்களுக்கு தருவிக்கப்பட்ட தலைமைத்துவமாகவே இருக்க முடியும்.
ஒரு காலம் ஐரோப்பாவில் உருவாகிய பேரரசுகள் எங்கள் ஆதிபத்தியத்தையும் அரசுரிமையையும் விழுங்கிக் கொண்டன. அவை தமக்கு இசைவான அரசியல்படி புதிய இறைமை எல்லைகளை உருவாக்கின. இறுதியாக ஆண்ட பிரித்தானிய பேரரசு தமிழர்களின் இறைமை உரிமையை தமது புவிசார் நலனுக்கு இசைவான தரப்புகளிடம் கையளித்து நவகாலனித்துவ முறைமைக்குள் புகுந்து கொண்டது. இந்த அரசுரிமைமையை பெற்றுக்கொண்டவர்கள் தமிழ் மக்களின் கூட்டு உரிமையையும் கூட்டு வாழ்வையும் கருவறுக்கும் நாசகார அரசியலை முன்னெடுத்தனர். இதனால் பலியானது இலங்கைத் தீவின் தமிழ்மக்கள் மட்டுமல்ல, அனைத்து மக்கள் சமூகமும் தான். சிங்கள பெரும்பான்மை மக்கள் இதை கண்டுணர தவறினர். மேற்குலக தலைமை கொண்ட புதிய நவ தாராளவாத அரசியல் போக்கிலும் இதுதான் தொடர்ந்தது; இன்னும் தொடர்கிறது.
அன்று இந்த விதியிலிருந்து நசுக்கப்படும் தமிழ் மக்களின் சுதந்திரம் வேண்டி தந்தை செல்வா விடுதலை அரசியலை முன்னெடுத்தார். அகிம்சைப் போராட்டத்தை விடுதலை அரசியலுக்கான வழிமுறையாக வகுத்துக்கொண்டார். தமிழ் பேசும் மக்கள் இந்த விடுதலை அரசியலின் பின்னால் அணிதிரண்டனர். அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், அது அரச வன்முறையால் தோற்கடிக்கப்பட்டது. அகிம்சை என்பது இந்த அநாகரிக இறக்குமதி சனனாயக முறையில் மதிக்கபடாது போனபோது அது காலாவதியாகிப்போன முறைமை என்பது புரிந்துகொள்ளப்பட்டது.
பின், தலைவர் பிரபாகரன் அப்போதைய உலகப் புறநிலையில் செல்லுபடியான விடுதலை அரசியலாக ஆயுதப் போராட்ட முறைமையை முன் வைத்தார். விடுதலை அரசியலின் காலப்பயணம் ஆயுதப் போராட்டத்தின் வழியே முன்னேறியது. மக்கள் அணிதிரண்டு போராடினர். அளப்பெரிய ஈகங்களைப் புரிந்து முன்னேறினர். முடிவாக பெரும் வெற்றியை ஈட்டி இலங்கை அரசை செயலிழக்க வைத்தனர். இந்த பூமி பந்தில் தமிழர்க்கு இத்தீவில் ஒரு நாடு உருவாகுவதையோ அல்லது சமத்துவ உரிமையோடு சமாதான வாழ்வோடு இலங்கை என்ற நாடு முன்னேறுவதையோ தமது நலனுக்கு எதிராகக் கண்ட சக்திகள் கூட்டாக சதிசெய்து தமிழரின் ஆயுதப் போராட்ட சக்தியை அழித்தன.
உலகின் பெரும் சக்திகளும் அவற்றின் உயர் இராணுவ தொழில் நுட்பமும் இந்த போரில் பங்கெடுத்தன. பெரும் மக்கள் அழிவின் மூலம் இந்த தீவின் அரசியலில் தலையிட்டு தமது வல்லாதிக்கப் போட்டிக்கு பயன்படுத்தத் திட்டமிட்டன. இத்தீவில் என்றைக்குமாக நிலைகொள்ள அவை இரகசிய திட்டத்தை வகுத்தன. இந்த நாசகார அரசியலை துரதிஷ்டமாக சிங்கள தலைமைத்துவம் புரிந்துகொள்ள தவறியது. விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைமையும் இந்த நாசகார அரசியலுக்கு பலியாகி, இலங்கை வாழ் அனைத்து மக்கள் சமூகத்தின் வாழ்வையும் எதிர்காலத்தையும் பாழாக்கும் தீர்மானத்தை எடுக்க விரும்பவில்லை.
உலக சக்திகளின் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் விடுதலைப் புலிகளின் கையில் இரண்டு தெரிவுகள்தான் மீதமிருந்தன. ஒன்று புலிகள் இயக்கத்தை காத்து அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுவது. மற்றையது இலங்கை என்ற நாட்டின் எதிர்காலத்தை காத்து அவர்களின் நிகழ்ச்சி நிரலை தவிர்ப்பது. ஒரு விடுதலை அரசியலை முன்னெடுக்கும் அமைப்பின் அறம் என்ற வகையில் இரண்டாவது தீர்மானத்தையே விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்துக் கொண்டது. இலங்கைத் தீவின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிட்டு தமிழர்களின் உரிமையையோ வாழ்வையோ கண்டெடுக்க முடியாது. அது அறத்திற்கு அப்பாற்பட்டது. அரசியல் அயோக்கியத்தனமானது. இலங்கயின் அனைத்து குடிமக்களுக்கும் ஆபத்தானது. இதுதான் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. அவர்களோடு ஒத்துழைக்காத இந்த நிலைப்பாட்டின் விளைவாகவே தமிழரின் ஆயுதப் போராட்ட சக்தி அடியோடு அழிக்கப்பட்டது. ஆயினும் இலங்கை வாழ் அனைத்து மக்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கும் நிகழ இருந்த அழிவு காக்கப்பட்டது. இதுதான் கடந்தகாலத்தின் மெய். இதுதான் சத்தியம்.
இந்த சத்தியத்தை இலங்கையின் மக்கள் சமூகங்கள் இன்னும் கண்டுணரவில்லை. அதை கண்டுபிடித்து சொல்ல புலமையாளர்களும் தலைவர்களும் தயாராக இல்லை. அந்த புலமையும் அவர்களிடம் இல்லை. அந்த நேர்மையும் இல்லை. அவர்கள் இனவாதம் என்னும் மனச்சிக்கை அறுத்து வெளிவர முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அதனால் இந்த நாட்டின் அரசியல் எவருக்கோ சேவகம் செய்யும் துர்விதியை கொண்டிருக்கிறது.
என்றோ ஒரு நாள் வரலாறு இந்த சத்தியத்தை மீட்டெடுக்கும். இலங்கையின் மக்கள் சமூகங்கள் உண்மை உணர்ந்து விழித்துக் கொள்ளும். வரலாறு உலக அரசியலை ஒரே போன்று வைத்திருப்பதில்லை. அதுவரை தமிழினம் சிங்கள பேரினவாத அரசியலில் பலியாகாது தம்மை தற்காத்துக் கொள்ளவேண்டும். விடுதலையை அவாவுதல் என்ற ஆன்ம சக்தியை சமத்துவம் , சகோதரத்துவம் மற்றும் சுதந்திரத்திற்காக கொண்டிருக்கவேண்டும். காலாவதியாக்கப்பட்ட ஆயுத போராட்ட அரசியலுக்கு பின்னான காலத்தை, இதுவரையான விடுதலை அரசியலிலிருந்து வழுவாது வழிநடத்த புதிய பாதையை, புதிய முறைமையை வகுக்க வேண்டும். அதற்கு தகுதியான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.
விடுதலை எனும் காலப்பயணத்தில் அதுவரையான இந்த தளர்ச்சியைக் கடக்க மாவீரரின் அர்ப்பணத்தை நெஞ்சில் இருத்திக் கொள்வோம். அர்ப்பணத்தை மகோன்னதவப் படுத்தும் இந்தப் பண்பாட்டை கட்டிக் காப்போம். ஒளிமயமான இத்தீவின் எதிர்காலத்தையும் இன்று ஏந்துகின்ற ஒளிகொண்டு காண்போம்.
இவ்வண்ணம்
குணா கவியழகன்
எழுத்தாளர்.
பிரபாகரன் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக தமிழீழ பல்கலைக் கழகத்தை கட்ட முயற்சித்தாராம்.. ஆம் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்திலும் தரமான கல்வி தராமல் தனியாருக்கு தாரை வார்ப்பவர்களால் அவரை ஏற்க முடியாது.
பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயாகி செஞ்சோலை, அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம் என உருவாக்கி அவர்களை மீட்டெடுத்தாராம்.. ஆம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறந்ததற்கு வருந்தாதவர்களால் அவரை ஏற்க முடியாது.
பிரபாகரன் பெண் விடுதலையை பேசுவதோடு நிறுத்தாமல் ஈழத்தில் வரதட்சணை இல்லாமல் செய்தாராம். புலிகள் பெண்களை கண்ணியத்தோடு பார்க்க பழக்குவாராம். பெண்களை நீதிபதியாக அமர வைத்தாராம். பெண் படையணியை புலிகளின் சாதனை என்பாராம்.. ஆம் ஒழுக்க குறைபாட்டை பெண் விடுதலையென பேசுபவர்களால் அவரை ஏற்க முடியாது.
பிரபாகரன் சிங்கள ராணுவத்தின் மீதான தாக்குதலில் இரண்டு அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டதை அறிந்து தன் படை வீரர்களை மூன்று மாதம் சிறையிலடைத்தாராம்.. ஆம் வகுப்பு கலவரங்களால் அப்பாவிகளை கொன்று அரசியல் செய்பவர்களால் அவரை ஏற்க முடியாது.
பிரபாகரன் தன் படை வீரர்கள் சிலர் இலங்கை ராணுவத்தினர் குடிக்கும் கள் பானையில் சையனைடு கலந்து கொன்றதை அறிந்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கினாராம். எதிரிக்கு கூட வீர மரணம் வேண்டும் என்பாராம்.. ஆம் பதவிகளுக்காக உறவுகளுக்கே விஷம் வைப்பவர்களால் அவரை ஏற்க முடியாது.
பிரபாகரன் உணவுகளை வீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை வீணாக்குவதை கடுமையாகக் கடிந்துகொள்வாராம். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவாராம்.. ஆம் மக்கள் வரிப்பணத்தில் கோடிகளை செலவழித்து பாராட்டு விழா எடுப்பவர்களால் அவரை ஏற்க முடியாது.
பிரபாகரன் இரவில் ரோந்து பணியிலிருந்த வீரரின் தலையில் ஒட்டியிருந்த மார்கழி பனியை தொட்டு பார்த்து உடனடியாக அவர்களுக்கு அன்றைய இரவிற்குள் மெழுகு தொப்பிகளை வழங்கினாராம்.. ஆம் ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் கூட ஊழல் செய்தவர்களால் அவரை ஏற்க முடியாது.
பிரபாகரன் தமிழீழ வங்கியமைத்து இலங்கை தீவிலே சேமிப்பிற்கு அதிகபட்ச வட்டியும், கடனுக்கு குறைந்தபட்ச வட்டியும் நிர்ணயித்து மக்களின் பொருளாதாரத்தை சீரமைத்தார்… ஆம் மக்கள் எக்கேடு கெட்டாலென்ன என்று சுவிஸ் வங்கியில் கணக்கு துவங்குபவர்களால் அவரை ஏற்க முடியாது.
பிரபாகரன் என் தன் இனத்திற்கான உரிமை போரில் சிறிதும் பின் வாங்காமல் ஓடி விடாமல் இறுதிவரை போராடி தன் குழந்தைகளுக்கும் வீர மரணத்தை கொடுத்து அழகு பார்த்தாராம்.. ஆம் வாரிசுகளுக்கு பதவி மட்டும் கொடுத்து அழகு பார்ப்பவர்களால் அவரை ஏற்க முடியாது.
அவர் தலைவர், அவர் கோட்பாட்டாளர், அவர் போராளி, அவர் ஒழுக்கசீலர். உங்களால் அவரை ஏற்க முடியாது. ஆனால் அவரின்றி என் இன வரலாறு அமையாது..!
Boopathy Murugesh
#HBDTamilTiger
]]>
கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கமக்கார அமைப்பைச் சேர்ந்தவர்காளால் இரவு வேளை வீடு புகுந்து வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கியதால் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோகச்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு உரிய முறையில் கமக்கார அமைப்பினால் நீர்விநியோகம் மேற்கொள்ளப்படாமை குறித்து ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இரவு வேளை வீடொன்றுக்குச்சென்ற கமக்கார அமைப்பைச் சேர்ந்த சிலர் வீட்டிலிருந்து மூதாட்டியை தாக்கியுள்ளனர்.
இவ்வாறு தாக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள முரசுமோட்டைக் கமக்கார அமைப்பின் கீழ் 1700 ஏக்கர் சிறுபோகச் செய்கைக்காக வரையறுக்கப்பட்டபோது அமைப்பினுடைய முழுமையான ஒத்துழைப்புடன் நீர் வரிக்குட்படாத வயல் காணிகள் பயிர்ச்செய்கைகக்கு உட்படுத்தப்பட்டு இவற்றுக்கு சட்டவிரோதமாக நீர்விநியோகிக்கப்படுவதால் உரிய முறையில் கூடுதலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயியின் வீட்டிற்குச்சென்ற கமக்கார அமைப்பைச் சேர்ந்தவர்களே தகாத வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டு குறித்த மூதாட்டியைத்தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது கந்தசாமி மல்லிகாதேவி (வயது 65) என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
]]>