வீரர்களை நினைவு கூர்வதை எவராலும் தகர்க்க முடியாது!

வீரர்களை நினைவு கூர்வதை எவராலும் தகர்க்க முடியாது!

தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக உயிர் நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“யுத்தத்தில் உயிர் நீத்த தமது பிள்ளைகளை தாய், தந்தையர் நினைவுகூர்ந்து அழுவதையோ, தமது உடன் பிறப்புக்களை சகோதரங்கள் நினைவு கூர்ந்து தேற்றிக்கொள்வதையோ கூட சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் மனோநிலையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக உயிர் நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாதென நான் உறுதியாக நம்புகின்றேன்.

அவ்வாறு எதிர்ப்பவர்கள், எம் மக்கள் மனதில் மேலும் மேலும் உறுதியையும் சுதந்திர தாகத்தினையும் மேலெழுச் செய்கின்றார்கள்.

உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது அவரவர் சார்ந்த சமூகங்களின் கடமையாகும். இன்றைய மனித நாகரிகத்தின் முக்கியமான ஒரு பண்பாக இது காணப்படுகிறது.

இதேவேளை முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகளிலும் யுத்தங்களில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நினைவுகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆகையால், அமைதியான வழியில் உரிய வழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்க வேண்டும்” என சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 9911 Mukadu · All rights reserved · designed by Speed IT net