திருகோணமலையில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் பலி!

திருகோணமலையில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் பலி!

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபல் பீச் பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலகெதர -மடவல, தெல்கஸ்யாய பகுதியைச் சேர்ந்த எச். சந்தரு பண்டார (13வயது) மற்றும் கலகெதர – மடவத்த, பகலவத்த பகுதியைச் சேர்ந்த நித்ஸர நிம்ஸான் ராஜபக்ஸ (17 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சீனக்குடா விமானப் படை முகாமில் நேற்று 29ஆம் திகதி இரவு விமானப் படை வீரர்களின் கலை நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்விற்கு குடும்பத்தாருடன் வருகை தந்திருந்த போது இன்று சீனக்குடா மாபல் பீச் கடற்கரைக்கு குளிப்பதற்காக சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்

Copyright © 2968 Mukadu · All rights reserved · designed by Speed IT net