நாட்டின் நன்மை கருதியே கூட்டமைப்பு தீர்மானம் எடுத்தது!

நாட்டின் நன்மை கருதியே கூட்டமைப்பு தீர்மானம் எடுத்தது!

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு ஐக்கிய தேசிய முன்னனி பரிந்துரைக்கும் ஒருவருக்கு ஆட்சியமைக்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக கூறியது.

மாறாக ஐக்கிய தேசிய முன்னிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (வியாழக்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தோடு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்படவர் பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில் நாட்டின் குழப்ப நிலை மாற வேண்டும் என்பதற்காகவே தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் ஸ்திரமற்ற நிலையில் நாடாளுமன்றம் கூடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வௌியிட்டிருந்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மனு உட்பட பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தினால் நவம்பர் 13ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் பல தடவைகள் கூடியமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் என அவர் தெரிவித்தார். ஏனெனில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாம் முதலில் மனு தாக்கல் செய்தமையினாலே உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net