ஐக்கிய தேசிய கட்சியுடனான ஒப்பந்தம் குறித்து விளக்கம்!

ஐக்கிய தேசிய கட்சியுடனான ஒப்பந்தம் குறித்து விளக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியுடனான ஒப்பந்தம் தொடர்பில் கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

பொறுப்புக்கூறல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்ததாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தம் செய்து தமிழீழத்தை அடையப் போவதாக மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசிய கட்சியுடன் நீதி பொறிமுறை, சர்வதேச விசாரணை, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என பல்வேறு தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அவர்கள் அதனை பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர்.” என்றும் கூறினார்.

இதன்போது, கூட்டமைப்பு கடந்த 3 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்த போதிலும், தமிழ் மக்கள் சார்ந்த கூட்டமைப்பின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், இந்த வாக்குறுதியை நம்ப முடியுமா? என்ற கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்,

“அதற்கான ஒரு பொறிமுறை தற்போது வகுக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வின் பொழுதும் எங்களால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் முன்னேற்றம் இருக்கின்றதா?, அது நிறைவேற்றப்பட்டுள்ளதா?, அதில் இருக்கும் தடைகள் என்ன என்பது தொடர்பில் ஆராய விசேட குழு அமைக்கப்பட்டவுள்ளது.

அந்த குழு வாக்குறுதி கொடுத்த விடயங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கும்” என்றும் கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net