ஐ.தே.கவிற்கு ஆதரவளிக்க இதுதான் காரணம்!

ஐ.தே.கவிற்கு ஆதரவளிக்க இதுதான் காரணம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்தகோரிக்கைகளை மகிந்தராஜபக்ஸ நிராகரித்த நிலையில் அவற்றில் சிலவற்றினை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே தாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்ததாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சனம் செய்யும் தமிழ் கட்சிகள் வடகிழக்கு மக்கள் சார்பாக எத்தனை வழக்குகளை நீதிமன்றுக்கு கொண்டுசென்று நடவடிக்கையெடுத்தீர்கள் என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கினோம்.கடந்தகாலத்தில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவு வழங்கியிருந்தோம்.கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஸைக்கு எதிராகவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து மக்கள் வாக்களித்துள்ளனர்.அதனால் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம்.

இந்த நாட்டில் பிரதான சிங்கள தேசிய கட்சிகளே இந்த நாட்டினை ஆட்சிசெய்யும் சூழல் இருக்கின்றது.தமிழ் கட்சிகள் இந்த நாட்டினை ஆட்சிசெய்யமுடியாது.அதன்காரணமாகவே தமிழ் மக்கள் சுயாட்சியொன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அதிகாரப்பரவலாக்கலை கோரி நிற்கின்றனர்.

ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு நியாயமானதை வழங்கியவர் என்றோ தமிழ் மக்களின் தேவையினை முழுமையாக பூர்த்திசெய்தவர் என்றோ நாங்கள் கூறவில்லை.

ரணிலுடன் ஒப்பிடும்போது மகிந்த ராஜபக்ஸ காலத்தில் படுமோசமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாங்கள் கூடிய ஆதரவினை வழங்கியிருந்தபோதிலும் அவர் அரசியலமைப்புக்கு முரணானவகையில் செயற்பட்டுள்ளார்.இந்த விடயங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கமுடியாது.

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியில்தான் சிறுபான்மை கட்சிகள் கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.

சிறுபான்மை கட்சிகள் அதிகளவில் உள்ள நிலையில் நாட்டில் ஜனநாயகத்தினை ஏற்படுத்த ஐக்கிய தேசிய கட்சி செயற்படும் நிலையில் அதற்கான ஆதரவினை ஜனநாயகத்தின் அடிப்படையில் வழங்கியுள்ளோம்.

ரணில் விக்ரமசிங்கவிடம் சிலகோரிக்கைகளை முன்வைத்தோம்,அதேகோரிக்கைகளை மகிந்த ராஜக்ஸவிடமும் முன்வைத்தோம் ஆனால் அந்தகோரிக்கைகளை அவர் நிராகரித்துவிட்டார்.ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிலகோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த அடிப்படையில் ரணில் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் பல சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட குடியேற்றங்கள் நடைபெற்றன. அந்தஆட்சிக்காலத்தில் பல பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டனர். ஆனால் நல்லாட்சியில் குடியேற்ற செயற்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளது.குடியேற்றங்கள் நடைபெறவில்லையென கூறவில்லை. ஆனால் குறைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மைலத்தமனை,பெரியமாதவனையில் பாரிய சிங்கள குடியேற்றம் திட்டமிடப்பட்ட வகையில் நடைபெற்றது. அது தொடர்பில் அன்று ஜனாதிபதி,பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்று அங்கு பாரிய பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு பௌத்த பிக்கு ஒருவர் இருந்தபோதும் அங்கிருந்து அவற்றினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தோம். ஆனால் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நடைபெற்றிருந்தால் அதனை செய்திருக்கமுடியாது.

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திட்டமிட்ட வகையில் 187 சிங்கள குடும்பங்களை இங்கு குடியேற்றம் செய்வதற்கு போலி அனுமதிப்பத்திரம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு குடியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது அது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த சகல நடவடிக்கைகள் காரணமாக அது தடைப்பட்டது.

மக்கள் நலன்சார்ந்தே நாங்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கினோம்.எங்கள் நலன் சார்ந்து செயற்படுவதாக இருந்தால்; மகிந்தராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் பல சலுகைகளுக்காக பேரம்பேசப்பட்டவர்கள் நாங்கள்.நாங்கள் செல்லவில்லை.தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற வகையில் செயற்படுகின்றவர்களுக்கு எங்களது ஆதரவினை வழங்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நல்லாட்சி ஏற்பட்டதன் பின்னர் நீதித்துறை சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழ்நிலைஇருக்கின்றது.உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஜனநாயகத்தினை மதித்து அரசியலமைப்பினை மதித்து நியாயமான முறையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக நாங்கள் பார்க்கின்றோம்.

வடகிழக்கில் உள்ள ஒரு சில தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினையே விமர்சித்துக் கொண்டிருக்கின்றது. அந்த கட்சிகளின்கோட்பாடே தமிழ் தேசிய

கூட்டமைப்பினை விமர்சிப்பது மட்டுமாகவே இருக்கின்றது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் தமிழ் மக்களுக்க என்ன செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையே வலியுறுத்துகின்றோம்.

ஆனால் சில தமிழ் கட்சிகள் எங்களை விமர்சிப்பதில் மட்டுமே கூடுதலான அக்கரையினை காட்டிவருகின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனைச்செய்தாலும் அதனை விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.

தமிழ் மக்கள் வழங்கிய ஆணையினை சரியான முறையில் நிறைவேற்றவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது.விமர்சனங்களுக்கு அப்பால் மக்கள் எங்களுக்கு தந்த ஆணையினை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு கொடுத்தோம் முஸ்லிம்களோடு நாங்கள் இணைந்து செயற்படுகின்றோம் என்று பல்வேறு விமர்சனங்களை செய்த ஒரு கட்சி இன்று உள்ளுராட்சி சபையில் அதே முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதைப்பதிலும் அவற்றில் குளிர்காய்வதிலுமே ஏனைய கட்சிகள் இருக்கின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் வெளியில் வருவதில்லை. அத்துமீறிய காணி அபகரிப்பு தொடர்பில் 2000க்கும் மேற்பட்ட வழக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு நீதிமன்றுக்கு கொண்டுசென்றுள்ளது.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சனம் செய்யும் தமிழ் கட்சிகள் வடகிழக்கு மக்கள் சார்பாக எத்தனை வழக்குகளை நீதிமன்றுக்கு கொண்டுசென்று நடவடிக்கையெடுத்தீர்கள் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.

வடகிழக்கு பிரிப்புக்காகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு நீதிமன்றம் சென்றது. மக்கள் சார்பான ஒவ்வொரு விடயத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கையெடுத்தே வருகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net