சர்ச்சைக்குரிய பல்கலை தொடர்பான அறிக்கை குறித்து கலந்துரையாடல்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாக இன்று கலந்துரையாடப்படவுள்ளது.

கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்புக் குழுவே இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளது.

இந்தக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷுமாரசிங்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதன்போது இடைக்கால அறிக்கை தொடர்பில் கண்காணிப்புக் குழுவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கேட்டறியப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கருத்துக்களை முன்வைப்பதற்கு உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக, கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கண்காணிப்புக்குழு மீண்டும் கூடி, இடைக்கால அறிக்கை குறித்து கலந்துரையாடி இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனூடாக, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்புக் குழு பரிந்துரைக்கவுள்ளது.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு நிதி கிடைத்த விதம் குறித்து விரைவில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வி நிறுவனம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளுக்காக சர்வதேச உதவிகளைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற கண்காணிப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் நிர்மானிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஆராய நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷுமாரசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு கடந்த மாதத்தில் களவிஜயத்தை மேற்கொண்டு அறிக்கை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net