இல்மனைட் தொழிற்சாலையின் நுழைவாயிலை சேதப்படுத்திய 4 போ் கைது!

இல்மனைட் தொழிற்சாலையின் நுழைவாயிலை சேதப்படுத்திய 4 போ் கைது!

மட்டக்களப்பு வாகரை கதிரவெளி இல்மனைட் தொழிற்சாலை அலுவலக நுழைவாயிலை சேதப்படுத்தியதுடன் உள்ளே சென்று கலகத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4 சந்தேக நபர்களை வாகரை பொலிசார் கைது செய்து வியாழக்கிழமை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்கள்.

சந்தேக நபர்களுக்கெதிராக மேற்படி தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் ஊழியர்கள் செய்த முறைப்பாட்டினையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்களுக்கெதிரான சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பஷில் சந்தேக நபர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.

இவ் வழக்கு எதிர்வரும் 11.09.2019 ஆம் திகதி மன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும்.

மேற்படி சம்பவம் தொடர்பாக இவர்களது கைதினை கண்டித்தும் சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு வலியுறித்தி பிரதேச மக்கள் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கூடி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் போராட்டம் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம்பெற்றது. சந்தேக நபர்களின் விடுதலையினையடுத்தே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேற்படி சம்பவத்தினை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன் கிழமையன்று பிரதேச மக்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நான்கு தடவையாக இவ் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.ஆனால் அவர்களுக்கு எது விதமான தீர்வும் கிடைக்கப்பெறவில்லையென கோஷமிட்டனர்.

இதன்போது ஆத்திரமுற்ற போராட்டக்காரர்கள் குறித்த இல்மனைட் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திற்கு சென்று அலுவலகம் அமைந்துள்ள நுழைவாயில் கதவினை உடைத்து சேதப்படுத்தி உள்ளே சென்று கலகத்தில் ஈடுபட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net