வெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் ஏதும் இன்றி வெளியேறினார் ட்ரம்ப்.

அமெரிக்காவில் கடந்த 4ஆண்டுகால டொனால்ட் ட்ரம்ப் அத்தியாயம் இன்று அமைதியாக முடிவுக்கு வந்தது.

புதிய அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக ட்ரம்ப் அவரது துணைவியார் மெலேனியா (Melania Trump) சகிதம் வெள்ளை மாளிகையை விட்டு அமைதியாகக் கிளம்பினார். அங்கு கூடியிருந்தவர் களுக்கு கை அசைத்துப் பிரியாவிடை கூறியவாறு வெளியேறிச் சென்றார்.


ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வை புறக்கணித்து விட்டுப் புறப்பட்ட அவர் புதிய அதிபருக்கான செய்தி ஒன்றை வெள்ளை மாளிகையில் விட்டுச் செல்கிறார் என்று தகவல் வெளியாகி யுள்ளது. அதே போன்று புதிய முதல் பெண்மணிக்கான வாழ்த்து செய்தி ஒன்றையும் மெலேனியா ட்ரம்ப் அங்கு விட்டுச் சென்றுள்ளார்.

“மரைன் வண்” என்னும் அதிபருக்கான சிறப்பு வான்படைப் பிரிவின் (Air Force One) வெள்ளை நிறமான விசேட ஹெலிக்கொப்டர் ஒன்று வெள்ளை மாளிகையில் இருந்து ட்ரம்ப் தம்பதிகளை ஏறிக்கொண்டு பறந்த காட்சிகள் உலகெங்கும் தொலைக் காட்சிகளில் வெளியாகின.

பின்னர் அன்றூஸ் கூட்டுப் படைத்தளத்தில் (Joint Base Andrews) இருந்து அதிபரது கடைசி உத்தியோகபூர்வ விமானப் பயணம் புளோறிடா நோக்கி ஆரம்பித்தது.

அங்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பிரியாவிடை உரை நிகழ்த்திய அவர், “வேறு வழிகளில் மீண்டும் திரும்பி இங்கு வருவோம்” என்று குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வோஷிங்டனை விட்டு வெளியேறியுள்ள டொனால்ட் ட்ரம்ப் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற வாழ்நாள் அந்தஸ்துடன் புளோரிடாவில் தனது வாழ்க்கையைத் தொடரவுள்ளார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜூன் 14, 1946 இல் பிறந்த டெனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக வருவதற்கு முன்னர் பிரபல வர்த்தகர்கவும் தொலைக்காட்சிப் பிரபலமாகவும் விளங்கியவர்.

அமெரிக்காவில் மட்டுமன்றி உலக அளவிலும் எதிர்பார்த்ததுக்கு மாறாக அதிபரது வெளியேற்றம் எந்தவித குழப்பங்களோ இழுபறிகளோ இன்றி அமைதியாக முடிவடைந்துள்ளது.

ட்ரம்ப் இறுதி நேரத்தில் இராணுவச் சட்டத்தை அமுல் செய்து பதவியில் நீடிப்பார் என்பது உட்பட பல்வேறு ஊகங்கள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கூட காணப்பட்டன.

அவரது இறுதிக்கட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து உலகெங்கும் அமெரிக்க இராணுவத் தளங்களில் நேற்று முழு உஷார் நிலை பேணப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

தலைநகர் வோஷிங்டன் தேசிய காவல் படையின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது.

குமாரதாஸன். பாரிஸ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net