வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு மல்லாகம் நீதவான் உத்தரவு

அச்சுவேலி தெற்கு மற்றும் நவக்கிரி பகுதியில் 3 வீடுகள் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் சகாக்களால், வீட்டு உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.கருணாகரன், அச்சுவேலிப் பொலிஸாருக்கு திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார். மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதாகிய சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டார். மூன்று வீடுகளில் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் அடையாள அணிவகுப்புக்கு திங்கட்கிழமை (18) உட்படுத்தப்பட்ட போது, கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை வீட்டு உரிமையாளர்கள் அடையாளம் காட்டினார்கள். அத்துடன், வீட்டு உரிமையாளர்களுக்கு சந்தேகநபர்களின் சகாக்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விடயம் நீதவானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதவான், வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net